மவுனத்தின் புன்னகை 16: என் வாழ்க்கையில் சென்னை அண்ணாமலை மன்றம்!

மவுனத்தின் புன்னகை 16: என் வாழ்க்கையில் சென்னை அண்ணாமலை மன்றம்!
Updated on
3 min read

அண்ணாமலை மன்றம் 1952-ல் எனக்குப் புதிய இடம். கச்சேரி மாதத்தில் என் அக்கா சென்னை வந்துவிடுவாள். கணவன், மனைவி இருவரும் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் கச்சேரி களுக்கு சீஸன் டிக்கட் வாங்கினா லும், அண்ணாமலை மன்றத்துக்கு சென்று ஒரு கச்சேரி கேட்பார்கள். அன்று இரவு பத்தாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் சைக்கிளில் தி.நகரில் இருந்து ராஜா அண்ணாமலை மன்றம் சென்றேன். “தேசிகர் கச்சேரி முடிந்து ஒரு மணி நேரம் ஆயிற்றே!” என்று ஒரு காவல்காரர் சொன்னார். அப்புறம் “அவர்கள் சைக்கிளில் வருபவர்களா?” என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னபோது, அந்த மனிதருக்குக் கோபம் கூட வந்தது. “என்ன தம்பி, ரயில்ல பஸ்ல வர்றவங்களை சைக்கிள்ள வந்து தேடினாக் கிடைச்சுடுவாங்களா? வீட்டுலப் போய்ப் பாரு. தூங்கிட்டுருப்பாங்க” என்றார்.

அந்த இரவு மன்றத்தின் முழுப் பரிமாணமும் அறிய முடியவில்லை. ஆனால் 1953-ம் (அல்லது 1954) ஆண்டில் எம்.ஆர்.ஏ. என்ற சர்வதேசக் குழு சென்னையில் இரு வாரங்கள் அங்கே முகாமிட்டது. அது சர்வ தேச கம்யூனிஸத்துக்கு எதிராக மனோதத்துவ முறையில் இயங்கும் குழு என்பார்கள். அவர்கள் எதற்கு எதிராக இயங்கினவர்களாகவும் இருக்கட்டும், இரு நாடகங்களை சென்னை நகரத்தார்களுக்கு அளித்தார்கள். அவ்விரு நாடகங்கள் நகரத்தார் மன்றத்தில்தான் முறை யாக அரங்கேற்றப்பட முடியும்.

முதல் நாடகம் ‘ஜோதம் வாலி.’ (Jotham Valley) ஜோதம் வாலி என்பது ஓர் இடத்தைக் குறிக்கும். அங்கு இரு சகோதரர்கள் என்ன காரணமோ ஜென்ம விரோதிகளாகி விடுகிறார்கள். அந்த இடம் இயற்கை அழகு கொண்டது. அதைக் காட்ட அஸ்தமனம், சூரிய உதயத்தை மேடையிலேயே காட்டுவார்கள். இதுபோல நவாப் ராஜமாணிக்கம் எவ்வளவு அற்புதங்களை மேடை யில் காட்டியிருக்கிறார்! ஆனால், ஒரு தனி மின்சாரக் கருவி கொண்டு இதை எம்.ஆர்.ஏ. குழுவினர் காட்டினார்கள். சகோதரர்கள் தற்செயலாக ஒருவர் முன் ஒருவர் நிற்க வேண்டியதாயிற்று. கொலை நிகழ வேண்டியது அந்த நேரத்தில் அவர்களுடைய சிறுவர் பிராயத்தை நினைவுபடுத்தி மூன்றாமவர் ஒருவர் பேசுகிறார். இதுவும் தற்செயலாக நிகழ்கிறது. சகோதரர்கள் இருவரும் சேர்ந்து பங்குபெற்ற நிகழ்ச்சிகள், பந்தயங் கள் எல்லாம் நினைவுக்கு வரு கின்றன. நாடக முடிவில் இருவரும் இணைந்துவிடுகிறார்கள். மிகுந்த தேர்ச்சியுடன் எழுதப்பட்டு, மிகவும் நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட நாடகம்.

அடுத்த நாடகம் ‘ஃபர்காட்டன் ஃபேக்டர்.’ ( The Forgotten Factor) இது முதலாளி தொழிலாளி கதை. இந்திய சினிமா என்றால் முதலாளிக்கு ஒரு பெண் இருப் பாள். தொழிற்சங்கத் தலைவனின் சகோதரன் அப்பெண் மீது காதல் கொள்வான். ஆனால் எம்.ஆர்.ஏ. நாடகத்தில் அப்படியெல்லாம் கிடையாது. அந்த நாடகத்தில் பெண்ணே கிடையாது என்று ஞாபகம். முதல் நாடகத்தில் ‘ஆபரா’ பாணியில் பாட்டுகள் உண்டு. இரண்டாவதில் பாட்டே கிடையாது. இரண்டு நாடகங்களிலும் ஒரே செய்தி, ‘பேச்சுவார்த்தையால் எல்லா சர்ச்சைகளையும் தீர்த்து விடலாம்’ என்பதே. முதல் நாடகத்தில் ஒரு பாட்டு வரும். “உன் சுட்டு விரலால் ஒருவனை குற்றம் சாட்டினால் உன் மூன்று விரல்கள் உன்னை நோக்கி இருக்கும்.” இரண்டு நாடகங்களையும் மக்கள் விரோத நாடகம் என்று தோழர்கள் கூறினார்கள்.

இந்த இரு நாடகங்களையும் நான் இருமுறை பார்த்தேன். எனக்கு அண்ணாமலை மன்றம் மிகவும் பழக்கமான இடமாகிவிட்டது. எஸ்.வி.சஹஸ்ரநாமத்தின் ‘வானவில்’ நாடகம் அங்கு நடந்தது. அது அந்த நாடகத்தின் மூன்றாவது காட்சி. முதல் இரண்டும் ரசிக ரஞ்சனி சபாவில், அடுத்தடுத்த நாட்களில். முதல் இரு காட்சிகளிலும் சிவாஜி கணேசனும் எம்.என்.ராஜமும் நடித்தார்கள். மூன்றாவதற்கு அவர்கள் இருவரும் இல்லை. சிவாஜி நடித்த வேடத்தை யார் நடித்தார்கள் என்று ஞாபகமில்லை. எம்.என்.ராஜம் நடித்த பாகத்தை பிரமிளா என்றொரு தெலுங்குப் பெண் நடித்தார். பிரமிளா பிற்காலத்தில் தேவிகா என்ற பெயருடன் பீம்சிங்கின் பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

கர்னாடக இசைக்கென்று ஒரு தனி அரங்கு ஏற்படவில்லை. ஆனால், தமிழ் இசைக்கு அண்ணாமலை மன்றம் கிடைத்தது. அங்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. ராஜா சர் அண்ணாமலை பரிசும் விருதும் அந்த மன்றத்தில்தான் அளிக்கப்பட்டன.

சிவசங்கரி, பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்கள் பரிசு பெற்றார்கள். அந்த ஆண்டு கண்ண தாசனுக்குப் பரிசு. அவர் ராஜா சர் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு சாகித்திய அகாடமியை தாக்கோ தாக்கு என்று தாக்கினார். அந்த டிசம்பர் மாதத்தில் அவருக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. அகாடமிப் பரிசு கிடைப்பதற்கு இதுதான் வழியோ என்று பலர் நினைத்திருக்கக் கூடும். கண்ணதாசனின் இறுதி ஊர்வலத்தை நான் பார்த்தேன். நாங்கள் இருந்த வீடு மயானத்துக்குப் போகும் வழியில் இருந்தது. என்.எஸ்.கிருஷ்ணன் தகனத்தின்போது மயானபூமியிலேயே இரங்கல் கூட்டம் நடந்தது. இன்று எல்லோரும் சென்னை பெசண்ட் நகர் எடுத்துச் செல்லப்பட்டுப் பிடி சாம்பலாகிறார்கள்.

அண்ணாமலை விருது வழங்கும் விழா ஒன்று. அன்று விழாவின் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.மனோகர் நாடகம். விருது வழங்குவது அரை மணியில் முடிந்துவிட்டது. முக்கியஸ்தர்கள் எல்லாரும் கிளம்பிப் போய்விட்டார்கள். மனோகர் நாடகத்துக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. நாடகம் தொடங்கியவுடன் அடித்துப் பிடித்துக்கொண்டு ஒரு பெரிய கூட்டம் மன்றத்தை நிரப்பியது. என் இடம் போய்விட்டது. மனோகர் நாடகத்துக்கு அவ்வளவு ஆர்வம்!

சமீபத்தில் அண்ணாமலை மன்றம் நிறைந்த காட்சியை சாருநிவேதிதா (பல) நூல்கள் வெளியீட்டு விழாவின்போது பார்த்தேன். ஓர் எழுத்தாளர் நூல் வெளியீட்டு விழாவுக்கு இவ்வளவு மக்கள்திரள் வந்து நான் பார்த்ததில்லை. எனக்குத் தெரிந்து அந்த விழாவில் அவருடைய ஏழு நூல்கள் வெளியாகின. அவர் நல்ல உழைப்பாளி. சாரு நிவேதிதா சரளமான தமிழ் எழுதுகிறார்.

ஒரு நூல் அவரும் ஒரு பெண்ணும் உரையாடல். இது எனக்கு இன்னொரு புத்தகத்தை நினைவுபடுத்தியது. அன்று பலர் பேசிய நூல் சாரு நிவேதிதாவின் ‘பழுப்பு நிறப் பக்கங்கள்.’ இது எழுத்தாளர்கள் பற்றியது. வாசகர் களுக்கு எழுத்தாளர்கள் பிற எழுத் தாளர்கள் பற்றி என்ன அபிப் பிராயங்கள் வைத்திருக்கிறார்கள் என்று அறிவதில் நிறைய ஆர்வம் இருக்கிறது. இந்த ஆர்வம் எழுத்தை வளர்க்கக் கூடியது. நீண்ட நீண்ட ஆய்வுகளுக்குப் பதிலாகச் சுருக்கமாக ஒரு நூலையும் எழுத்தாளர் பற்றியும் பற்றிச் சில வார்த்தைகள் கூறுவதற்கு மிகுந்த இலக்கியத் தேர்ச்சி வேண்டும். மறுபடியும் ஆரம்பத்துக்கு வருகிறேன்: அன்றைக்கு சைக்கிளில் நான் வீடு திரும்பியபோது வீட்டில் அக்காவும் அவரது கணவரும் தூங்கிக்கொண்டிருந்தனர்.

- புன்னகை படரும்…

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in