Published : 26 Mar 2022 07:50 AM
Last Updated : 26 Mar 2022 07:50 AM

நூல் வெளி: ஆதவனின் இலக்கிய மாயங்கள்

சரவணன் மாணிக்கவாசகம்

ஆதவனுக்கு எப்படி எண்பது வயதாக முடியும் என்று தோழி கேட்டபோது ஒரு கணம் புரியவில்லை. நான்தான் கணக்கில் தவறுசெய்துவிட்டேன் என்று தோன்றியது. ஆல்பெர் காம்யு, ‘முதல் மனிதன்’ என்ற முடிக்கப்படாத நூலில் எழுதியிருப்பார். “என்னுடைய தற்போதைய வயதைவிடக் குறைவான வயதில் இறந்த என் அப்பாவின் கல்லறை முன் நிற்கும்போது அவரை என்னைவிட வயது குறைவானவராக உணர்ந்தேன்”. சூடாமணியின் ‘மேதையின் மனைவி’ கதையில் பாட்டி இளமையில் இறந்த கணவனின் புகைப்படம் முன்பு நின்றுகொண்டு “எனக்குப் பிள்ளையாக இருக்கக்கூடிய சிறு பையனப்பா நீ” என்பாள். இளமையில் இறப்பவர்கள், பிறர் மனதில் இளமையாகவே இருந்துவிடுகிறார்கள்.

புதுமைப்பித்தனைப் போலவே சாதனைகளின் நடுவிலேயே பறிக்கப்பட்ட வாழ்வு ஆதவனுடையது. கிட்டத்தட்ட 60 சிறுகதைகள், இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதிய ஆதவனை இன்றும் வாசகர்கள் கொண்டாடுகிறார்கள். சிறுகதைகளிலும் நாவல்களிலும் ஒருசேர சாதனை படைத்த வெகுசில எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். ஆண், பெண் உறவுச் சிக்கல்கள், நடுத்தர வர்க்க மனிதர்களின் பாவனைகள், பாசாங்குகள் இவையே ஆதவனின் கதைகளில் திரும்பத்திரும்ப இடம்பெறும் விஷயங்கள். ஆதவன் கதைகளின் ஆண்கள் தைரியமில்லாதவர்கள், பெண்கள் வார்த்தைகளில் வாள்வீச்சு நடத்துபவர்கள், தீர்க்கமானவர்கள். ஆதவன் அதிக அளவில் ரசிகைகளைக் கொண்டிருப்பதற்கு இதுவும்கூடக் காரணமாக இருக்கலாம்.

‘அப்பர் பர்த்’ என்ற சிறுகதை 50 ஆண்டுகளுக்கு முன் வந்தது, இன்றும் பொருத்தமாக இருப்பது. சமூகப் படிநிலையில் மிக விரைவாக முன்னேறுவதற்கு நாம் என்ன விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதைப் பற்றிய கதை. சிதம்பரத்துக்கு மற்றவர்களின் போலித்தனம் தெரியும் அளவுக்குத் தன்னுடைய போலித்தனம் கடைசிவரை தெரியாது. அபர்ணாவின் மூலமாக, பாலுவின் அம்மா மூலமாக ஆதவன் சிதம்பரத்துக்குச் சொல்ல நினைப்பது என்ன? எதை இழந்து எதைப் பெறப்போகிறான் சிதம்பரம்? அழகில்லாத கணவர்களை மணமுடித்த அழகான பெண்கள் எளிதில் வசப்படுபவர்களா? ஒரு சிறுகதையில் எத்தனை இழைகள்! கடைசியில் மணிவண்ணனை காரோட்டச் சொல்லிவிட்டு, இந்திராணியின் தோளில் கை போட்டுக்கொள்வது எவ்வளவு பெரிய சரிவு!

‘வீணை, விரல், மனம்...’ என்பது மற்றொரு சிறுகதை. தலைப்பில் இருக்கும் மனம் செய்யும் மாயம்தான் கதையே. குறிப்பாகச் சொல்லப்போனால், ஒருவகையான இரவல் உணர்வுதான் (Vicarious) மொத்தக் கதையே. ராமனிடம் ஏன் அம்மா, பெண் இருவரும் புகார் அளிக்கவில்லை? மனைவிக்குப் பெயர்கூட இல்லை. அவளால்தான் மொத்தக் கதையுமே. அவள் ஏன் வீணை கற்றுக்கொள்ளப்போகிறேன் என்று சொல்லிவிட்டு, இவர் முகத்தைத் துழாவ வேண்டும்? இவர் ஏன் அவள் பார்வையைத் தவிர்க்க வேண்டும்? இதுபோலப் பல கேள்விகள் கேட்டுக்கொண்டால், ஆதவன் இந்தக் கதையில் செய்திருக்கும் மாயம் விளங்கும். ‘சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்…

’ என்பது ஆதவனின் கதை. ‘சிறகுகள் முறியும்’ என்பது அம்பையின் கதை. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வந்தவை. ஆதவனின் நீலாவுக்கும் அம்பையின் சாயாவுக்கும் தாங்கள் மணமுடிக்கும் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதே இரண்டையும் இணைக்கும் மைய இழை, மற்றபடி முற்றிலும் வேறுபட்ட கதைகள். ஆனால், கடைசியில் சாயா என்ன செய்கிறாள், கடைசியில் நீலா என்ன செய்கிறாள் என்பதில்தான் சுவாரசியமே அடங்கியிருக்கிறது. ஆதவனின் கதைப் பெண்கள் ஆபத்தானவர்கள்.

‘காகித மலர்கள்’ ஆதவனின் முதல் நாவல். தமிழ் நாவல்களில் இது ஒரு மைல்கல் என்றார் சுஜாதா. ‘காகித மலர்கள்’ முழுமையான நாவல். அரசியல், சுற்றுச்சூழல், டெல்லி வாழ்க்கை, அதிகாரிகள், குமாஸ்தா உலகம் என்று அதில் இல்லாத விஷயமே இல்லை. 1977-ல் எழுதப்பட்ட நாவல். மூன்று பிள்ளைகள் கொண்ட உயர் மத்தியவர்க்க பிராமணக் குடும்பத்தில் இருக்கும் எல்லோருடைய அலைக்கழிப்புகள், அவர்கள் அணிந்த முகமூடிகள், ஓடிக் கடந்த தூரம் இவற்றுடன் 1970-களின் டெல்லி வாழ்க்கையும் அரசியலும் இணைத்துப் புனையப்பட்ட சிறந்த நாவல் இது. விசுவம், பத்ரி, செல்லப்பா இவர்களில் யாராவது ஒருவராகத்தான் அன்றைய இளைஞர்கள் இருந்திருக்கக்கூடும். கணேசனிடம் பாக்கியம் ஓரிடத்தில் சொல்வாள், ‘‘நான் அப்படியே இருந்தாலும் எதற்காக உன்னோடு?” அந்த வரியை நாவலின் முடிவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆதவன் அன்று கடந்து சென்ற பல நுட்பமான விஷயங்களை இன்றும் ஜீரணிக்கும் மனநிலையில் நம்மில் பலர் இல்லை.

‘என் பெயர் ராமசேஷன்’ அவருடைய இரண்டாவது நாவல். போலி, பாசாங்குத்தனம் இதிலும் வருவதைத் தவிர, முதல் நாவலுக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை. இது ஒரு மையக் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி நகர்வது, தன்னை அறிவுஜீவி என்று தீவிரமாக நம்பும் ஒருவனது சாதனைக்கான பயணத்தின் நடுவில் ஏற்படும் சிற்சில பாலியல் அனுபவங்கள் என்று சுருக்கமாக இந்த நாவலைப் பற்றிச் சொல்லலாம். எழுபதுகளில் ஆண்களின் முகத்தைப் பார்த்துப் பெண்கள் பேசத் தயங்கிய காலகட்டத்தில் இந்த நாவலின் பெண்கள் ஆண்களைவிட ஆளுமை மிக்கவர்களாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். மதுரை போன்ற சிறுநகர்ச் சூழலில் வளர்ந்த எனக்கு, இப்படிப்பட்ட பெண்கள் சாத்தியமா என்ற கேள்வி இருந்தது, இப்போது ஆதவன் காலத்தில் எவ்வளவு முன்னோக்கி நகர்ந்திருக்கிறார் என்று புரிகிறது. ஒருவேளை அவர் அவ்வளவு முன்னோக்கி நகர்ந்ததால் மரணம் அவர் வயதைத் தவறாகக் கணக்கெடுத்துக்கொண்டதா?

- சரவணன் மாணிக்கவாசகம், இலக்கிய விமர்சகர். தொடர்புக்கு: sarakavivar@gmail.com

21-03-2022 ஆதவனின் எண்பதாம் ஆண்டு நிறைவு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x