

என் நினைவு தெரிந்து ‘ராம ராஜ்யம்’ என்ற படம்தான் முதன்முதலில் இந்தியில் இருந்து தமிழுக்கு ஒரு பாடலைக் கொண்டு ‘மொழிமாற்றம்’ செய்யப்பட்டது. விஜய் பட் என்பவர் முதலில் ‘பரத் மிலாப்’ என்றொரு படம் எடுத்தார். அது இரண்டாம் உலக யுத்த காலம். திரைப்படங்களுக்கு நீளக் கட்டுப்பாடு இருந்தது. ‘பரத் மிலாப்’ சுமார் இரண்டு மணி நேரம் ஓடும். ஆனால், தமிழ்நாட்டில்கூட மாதக் கணக்கில் ஓடியது. வேஷப் பொருத்தம் ஒரு முக்கிய காரணம். மிகை தவிர்த்தது இன்னொரு காரணம். கதையைச் சுருக்கமாக வைத்து எடுக்கப்பட்டது.
தசரதர் ராமருக்குப் பட்டாபிஷேகம் புரியத் தீர்மானிக்கிறார். அதுவும் அடுத்த நாளே. முதலில் மிகுந்த மகிழ்ச்சியடைந்த கைகேயி, கூனி என்ற முதியவளால் மனமாற்றம் அடைகிறாள். தசரதர் அவளுக்கு எப்போதோ கொடுத்த இரு வரங்களை இப்போதே தர வேண்டும் என்கிறாள். முதல் வரம், ராமன் உடனே காடு சென்று பதினான்கு ஆண்டுகள் அங்கு வசிக்க வேண்டும். இரண்டு, அவளுடைய மகனாகிய பரதனுக்கு முடி சூட்ட வேண்டும். தசரதர் இரண்டாம் வரத்தைத் தரத் தயார், ராமன் காட்டுக்கு ஏன் போக வேண்டும் என்று வாதாடுகிறார். தசரதர் முன்பு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற ராமன் வனவாசம் செல்கிறார். பரதன் அவரைத் தொடர்ந்து காட்டில் சந்திப்பதுதான் ‘பரத் மிலாப்.’ இந்தப் படம் நாடெங்கும் அமோகமாக ஓடிற்று
அதைத் தொடர்ந்து விஜய் பட் ‘ராம் ராஜ்’ என்ற படம் எடுத்தார். அதே நடிகர்கள். அப்போதும் யுத்த காலம். படம் இரண்டு மணிநேரத்தில் முடிந்துவிடும். இது ‘உத்தர ராம சரிதம்’ கதை. சீதைக்கு சீமந்தம் நடக்கிறது. ராமர் மாறுவேடத்தில் நகர்வலம் செல்கிறார். ஒரு சலவைத் தொழிலாளி தன் மனைவியை வீட்டைவிட்டு அடித்துத் துரத்துகிறார். ராமர் தடுக்கிறார். சலவைத் தொழிலாளி, “இவள் இன்னொருவன் வீட்டில் இருந்துவிட்டு வருகிறாள். நானென்ன ராமனா, இன்னொருவன் வீட்டில் இருந்தவளை மீண்டும் சேர்த்துக் கொள்ள?” என்று கேட்கிறார். ராமருக்கு மனவேதனை ஏற்படுகிறது. சீதையிடம் சொல்ல மனதில்லாமல் லட்சுமணனிடம் ‘‘உன் மதனியைக் காட்டில் விட்டு வா” என்கிறார். முன்பு ஒருமுறை சீதை மீண்டும் வால்மீகி ஆசிரமத்துக்குப் போக வேண்டும் என்ற விருப்பத்தை ராமரிடம் கூறியிருக்கிறாள். அதற்குத்தான் லட்சுமணன் அழைத்துச் செல்கிறான் என்று நினக்கிறாள். ஆனால் கர்ப்பிணி சீதையைக் காட்டில் விடும்போதுதான் ராமர் அவளைத் தள்ளி வைத்துவிட்டார் என்று லட்சுமணன் மிகுந்த துக்கத்துடன் கூறுகிறான்.
வால்மீகி ஆசிரமத்தில் சீதையின் இரட்டைக் குழந்தைகளாகிய லவ, குசன் வளர்கிறார்கள். ராமரின் கதையைச் சொல்லிக் கொடுக்கிற வால்மீகி, அவர்கள் தந்தை யார் என்று தெரிவிப்பதில்லை.
சிறுவர்கள் இருவரும் ராமரின் கதையைப் பாடிக்கொண்டு அயோத்தி செல்கின்றனர். ராமர் அவர்களை தன் சபைக்குக் கூப்பிட்டு அங்கு ராம கதையைப் பாடச் சொல்லிக் கேட்கிறார். அது பட்டாபிஷேகம் வரை. சிறுவர்கள் “கஹான் வைதேஹி?” (எங்கே சீதை?) என்று கேட்கின்றனர். ராமர் சீதையை மீண்டும் காட்டுக்கு அனுப்பிவிட்டார் என்று தெரிந்தவுடன், “நீ என்ன மனிதன்? உன் புகழ் பாடினோமே?” என்று கேட்டுவிட்டு வால்மீகி ஆசிரமம் திரும்புகின்றனர்.
சீதை அவர்களிடம் ராமர் பற்றிக் கேட்கிறாள். “அவன் மனிதனா? சீதையை மீண்டும் காட்டுக்கு அனுப்பிவிட்டானாம்” என்று கூறுகின்றனர். மீண்டும் ராமர் கதையைப் பாடுவதில்லை.
ராமர் துக்கம் குறைய ‘அசுவமேத யாகம்’ புரிகிறார். அவர் குதிரை வால்மீகி ஆசிரமத்துக்குள் வந்துவிடு கிறது. சிறுவர்கள் அதைக் கட்டிப் போட்டுவிடுகிறார்கள். முதலில் படைத் தலைவன் வருகிறான். ராமன் என்ற பெயரைக் கேட்டாலே சிறுவர்கள் நெருப்பாகிவிடுகிறார்கள். ராமரின் படையைத் தோற்கடித்துவிடுகிறார் கள். லட்சுமணனையும் மூர்ச்சை யடைய வைத்துவிடுகிறார்கள். ராமரே வருகிறார். அப்போது சீதை, ராமர்தான் அவர்களுடைய தந்தை என்கிறாள்.
“அப்படியென்றால் அம்மா இருக்கும் இடம் அயோத்தி. அங்கே அழைத்துப் போ” என்று தந்தையிடம் கூறுகிறார்கள். சீதை மீண்டும் அக்னிப் பிரவேசம் செய்ய வேண்டும் என்று ராமர் கூறு கிறார். “அம்மா!” என்று சீதை அலற, அவளுடைய தாயாகிய பூமி அவளை விழுங்கிவிடுகிறது.
இப்படமும் பெருத்த வெற்றி. இதில் இரண்டு பாடல்கள் மிகவும் பிரசித்த மானது. ஒன்று, ராமர் கதையைச் சிறுவர்கள் பாடுவது. இரண்டாவது, சீதையைக் காட்டுக்கு அனுப்புவதற்கு முந்தைய இரவு ஒரு பணிப் பெண் துக்கத்துடன் வீணை வாசிப்பாள். இது தெற்கே மதுரை மணி வரை எட்டி, அவர் அதே மெட்டில் ஒரு தமிழ்ப் பாட்டை பாடி, இசைத் தட்டாகவும் பதிப்பித்தார். ராஜரத்தினம் பிள்ளை இப்பாடலையும் ஒரு சைகல் பாடலையும் வாசித்து இசைத் தட்டாகப் பதிப்பித்திருக்கிறார். மூன்று நிமிட இந்திப் பாட்டு எந்த அளவுக்கு நாட்டைக் கைவசப்படுத்தியது என்பதற்குக் கர்னாடக இசை மகா வித்துவான்கள் பகிரங்கமாக அந்த மெட்டைப் பாடி, இசைத் தட்டாகவும் பதிப்பித்தது நிரூபிக்கும்.
ஏவி.எம். அவர்கள் எப்படி ஏற்பாடு செய்தார் என்று தெரியாது. ‘ராம் ராஜ்யா’ ஒரு தமிழ் பாட்டுடன் ‘ராம ராஜ்ஜியம்’என்று தென்னாட்டை வலம் வந்தது. அருணாசலக் கவிராயரின் ‘எனக்கின்னிரு பதம் அளிக்க வரம் அருள்வாய்’என்ற ராக மாலிகையை ஏவி.எம்மின் ‘ராம ராஜ்ஜிய’த்தில் டி.கே.பட்டம்மாள் பாடியிருப்பார். அதே பாடலை எம்.எஸ். அவர்களும் பாடி யிருகிறார்கள். விஜய் பட்டின் இவ்விரு படங்கள் நாட்டில் மூலை முடுக்கெல்லாம் சென்று வெற்றிபெற்றன. இரண்டும் யுத்த காலத்தில் எடுக்கப்பட்டதால் இரு மணி நேரம்தான் ஓடும். இரண்டு மணி நேரத்தில் படத்தை ஒரு வெற்றிப் படமாக்கலாம் என்பதற்கு இவ்விரு படங்கள் உதாரணம். அத்தோடு ராமா யணம் எந்த அளவுக்கு இந்திய மக்களு டன் ஒன்றிப்போயிருக்கிறது என்பதற்கும் இவ்விரு படங்கள் எடுத்துக்காட்டு.
‘ராம் ராஜ்யா’ வெளியிடப்பட்டு இன்று 70 ஆண்டுகள் முடிந்திருக்கும். இந்த இடைவெளியில் எனக்கு நினைவில் இருக்கும் ஒரே ஒரு தமிழ்ப் படம் ‘சம்பூர்ண ராமாயணம்’ மட்டும்தான். ஆனால் தெலுங்கு மொழியில் பத்தாண்டுக்கு ஒருமுறை ஒரு ராமாயணப் படம் வெளிவருகிறது. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடிகை நயன்தாரா அவர்களுக்கு ஓவியர் பாபு தயாரித்த ஒரு ராமாயணப் படம் பல விருதுகளும் ஒரு புது வாழ்வும் கொடுத்தது என்பார்கள்.
நான் சமீபத்தில் ‘ராம் ராஜ்யா’ இந்திப் படத்தில் ‘பீனா மதுர மதுர கச்சி போல்’ (வீணையே, மதுரமான சொல் சொல்லு) என்ற பாட்டைக் கேட்டேன். பாட்டின் இறுதியில் வீணை தந்தி ஒன்று அறுந்துவிடும். அடுத்த நாள் நிகழப் போகும் சோகத்தை அறிவிப்பது போல இருக்கும். இது 1943 அல்லது 1944-ல்.
மகாத்மா காந்திக்குப் பாமர மக் களைப் பிடிக்கும். ஆனால் மக்களைப் பாமரர்களாக்கும் சாதனம் மீது நம்பிக்கை கிடையாது. அவர் பார்த்த ஒரே திரைப்படம் ‘ராம் ராஜ்யா!
- புன்னகை படரும்...