

சினிமாவைப் பற்றி சத்யஜித் ரே எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘Our Films, Their Films’ என்ற தலைப்பில் 1976-ல் வெளியானது. அந்நாட்களில் நாடு முழுவதிலும் இருந்த திரைப்படக் கழக இயக்க உறுப்பினர்களின் விரிவான கவனத்தைப் பெற்றதாக இந்த ஆங்கில நூல் இருந்தது. இதுபோக, 1955-லிருந்து சினிமாவின் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் வங்க மொழியில் எழுதிய கட்டுரைகள், ஆற்றிய உரைகளெல்லாம் பதேர் பாஞ்சாலி வெளிவந்த 50-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் 2005-ல் முதன்முதலாக ‘Speaking of Films’ என்ற தலைப்பில் கோபா மஜும்தார் மொழிபெயர்ப்பில் வெளியானது. இப்போது ரேயின் நூற்றாண்டை ஒட்டி அதன் இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது.
ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் பங்களிக்கும் அதன் கட்டமைப்பு, மொழி, நடை ஆகியவை குறித்தும், சோவியத் சினிமாவின் பங்களிப்பு பற்றியும், சினிமாவின் முற்கால, தற்கால மொழி குறித்தும், கடந்த காலத்திய வங்காள சினிமா குறித்தும், சினிமாவில் பின்னணி இசை, வசனம் ஆகியவை குறித்தும் ஆழமான கருத்துகளைக் கொண்டதாக இந்நூல் இருக்கிறது. ரேயின் முதல் திரைப்படமான ‘பதேர் பாஞ்சாலி’யில் இந்தர் தாக்ருனாக சிறப்பாக நடித்த சுனிபாலா தேவியின் தனித்தன்மை, அனுபவமற்றவர்கள் தனது திரைப்படங்களில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு, சாந்தி நிகேதனில் அவரது ஓவிய ஆசிரியரான வினோத் பிஹாரி முகர்ஜியின் பங்களிப்பு ஆகியவற்றோடு தனது 25 ஆண்டு காலத் திரைப்பட உலக வாழ்க்கை குறித்தும் இந்நூலில் விரிவாக எழுதியுள்ளார். திரைப்பட ரசனையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்நூல் ஒரு பொக்கிஷம்.
ஸ்பீக்கிங் ஆஃப் ஃபிலிம்ஸ்
சத்யஜித் ரே
பெங்குவின் புக்ஸ், ஹரியாணா
விலை: ரூ.299