Published : 10 Apr 2016 12:26 PM
Last Updated : 10 Apr 2016 12:26 PM

விடுபூக்கள்: ஏகாதிபத்திய எழுத்தாளர்

இந்தியாவைக் கதைக்களமாக கொண்டு 1894-ம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளிவந்த சிறார் நாவல் ‘ஜங்கிள் புக்’. தற்போது இது திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. ஜங்கிள் புக்கை எழுதிய ருத்யார்ட் கிப்ளிங் பிரிட்டிஷ் இந்தியாவின் பம்பாய் மாகாணத்தில் பிறந்தவர். இலக்கியத்துக்காக நோபெல் பரிசைப் பெற்ற முதல் ஆங்கில எழுத்தாளர். அதிலும் இளம் வயதிலேயே அந்தப் பரிசை பெற்றவர். இலக்கிய நடைக்காகவும் அவரது குறுங்கதைகளின் வடிவச் சிறப்புக்காகவும் இன்றளவும் பாராட்டப்படுகிறார்.

கிப்ளிங் ஓர் ஏகாதிபத்தியவாதி. அவரது எழுத்துகளில் அதற்கான சான்றுகள் இருக்கின்றன என்று விமர்சகர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்திருக்கிறார்கள். கிப்ளிங்கின் ஆங்கிலேய ஏகாதிபத்தியப் பெருமிதம் அவரது எழுத்துகளில் தென்படலாம், ஆனால் செயல்பாடுகளில் நேரடியாகவே வெளிப்பட்டது.

1919 -ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதியன்று அமிர்தசரஸ் நகரத்தில் நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்தைத் தலைமையேற்று நடத்திய டயர் என்ற ஆங்கிலேயே ராணுவ அதிகாரிக்கு இந்தியாவில் எழுந்த பலத்த எதிர்ப்பின் காரணமாக அவர் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்றார். நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் சபை அவருக்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி வரவேற்றது. மார்னிங் போஸ்ட் செய்தித்தாள் அவர் பணி ஓய்வு பெற்றதையொட்டித் தனது வாசகர்களிடம் நிதி திரட்டி வழங்கியது. 26,000 ஆயிரம் பவுண்டுகள் நிதி திரட்டப்பட்டது. இந்த நிதியளிப்பில் பொதுமக்கள் மட்டுமில்லாமல் ருத்யார்ட் கிப்ளிங் போன்ற முக்கியப் பிரமுகர்களும் பங்களித்தார்கள் என்கின்றன பிரிட்டிஷ் வரலாற்று நூல்கள்.

எழுத்தாளர் ஈ.எம்.பார்ஸ்டர், மன முதிர்ச்சியில்லாத ஒருவர் நல்ல இலக்கியவாதியாக இருக்க முடியும் என்பதற்கு கிப்ளிங்கை உதாரணம் காட்டிப் பேசியிருக்கிறார். மன முதிர்ச்சியில்லாதவர்கள் மட்டுமல்ல கொடூரமான கொலை மனதினரும்கூட ஒரு நல்ல எழுத்தாளராக இருக்க முடியும். அதற்கும் கிப்ளிங்கே உதாரணம். ஜாலியன் வாலாபாக் சம்பவம் வரலாற்றுப் பாடத்திலும் அந்தக் கொலையை ஆதரித்த கிப்ளிங்கின் ‘ரிக்கி டிக்கி டாவி’ கதை ஆங்கிலப் பாடத்திலும் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x