நூல் வெளி |  கலைச்செல்வி

நூல் வெளி |  கலைச்செல்வி
Updated on
1 min read

ச.பாலமுருகனின் ‘டைகரிஸ்’ நாவலை (எதிர் வெளியீடு) வாசித்துக்கொண்டிருக்கிறேன். முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் என்ற ஒற்றை அடைமொழியின் கீழ் அடையாளமற்றுப்போன இந்தியர்களின் பங்களிப்பைப் பேசுகிறது இந்நாவல். போர் நமக்கானதல்ல. அந்நிய நிலத்தில் அந்நியருக்காக நடத்தப்படும் போர்.

அதற்கான மனநிலையைச் சமுதாயத்தில் ஊடுருவச் செய்து, அதன் கனியைச் சுவைத்து சக்கையாகத் துப்பப்பட்ட போர் வீரர்களின் வரலாற்றைச் சொல்லும் நாவல். சிலரின் அதிகாரப் பசிக்கு மனிதர்கள் இறைச்சித் துண்டுகளாகும் அவலத்தை டைகரிஸ் நதி தன்னுள் இழுத்துக்கொண்டு பாய்கிறது. வாசிப்புக்கு இடையூறில்லாத மொழியும் பதைக்க வைக்கும் வரலாறும் வாசிப்பைத் துரிதமாக்குகிறது.

சமீபத்தில் வெளியான ‘ஹரிலால் த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’ நாவலின் (தன்னறம் வெளியீடு) இரண்டாம் பாகத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். காந்தி இந்தியாவுக்குத் திரும்பியதிலிருந்து இந்தப் பாகம் தொடங்குகிறது. அவருக்கும் அவருடைய மகன் ஹரிலாலுக்குமான அன்பும் வெறுப்புமான உறவு இறுதி வரையிலும் நீடிக்கிறது. நினைத்திருந்தால் இருவருமே இருவரையுமே விட்டு நகர்ந்திருக்கலாம். ஆனால், இருவருமே அதை நினைத்திருக்கவில்லை. தெரிந்த கதையின் அறியாத இடைவெளிகளை முடிந்தவரை நிரப்ப முயல்கிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in