Published : 12 Mar 2022 08:29 AM
Last Updated : 12 Mar 2022 08:29 AM

பெண்ணெழுத்தைக் கொண்டாடுவோம்: மானுடத்தை வாரியணைக்கும் அன்னையரின் கதை

அருந்ததி ராயின் இரண்டாவது நாவலான ‘Ministry of Utmost Happiness’ ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் ‘பெருமகிழ்வின் பேரவை’ என்ற தலைப்பில் தமிழுக்கு வந்திருக்கிறது. புக்கர் பரிசுபெற்ற ‘The God of Small Things’ (தமிழில் ‘சின்னஞ்சிறிய விஷயங்களின் கடவுள்’, மொழிபெயர்ப்பு: ஜி.குப்புசாமி) நாவலுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான நாவல் இது.

இந்த நாவல், அஞ்சும் என்ற திருநங்கையின் வாழ்வு, திலோ என்ற வரைபடக் கட்டிடக் கலைப் பொறியாளரின் வாழ்வு என்ற இரு புள்ளிகளில் தொடங்கி விரிந்து, அவர்கள் இருவரும் வாழ்வின் பாதையில் ஒரு புள்ளியில் இணையும் இடத்தில் நிறைவுபெறுகிறது. இருவருக்குமான பாதைகளும் வாதைகளும் அனுபவங்களும் வேறுவேறானவை எனினும் மானுட மனங்களின் பல்வேறு கபடங்களையும் சூதினையும் வெளிப்படுத்துவதாகவே அவை அமைந்திருக்கின்றன.

இருவருமே அன்பைத் தேடுபவர்களாக இல்லாமல் அன்பை வெளிப்படுத்தத் தயாராகவே இருப்பதும் இருவருக்குமான ஒற்றுமை. இந்த நாவல் மயானத்தில் தொடங்கி மயானத்தில் முடிவடைகிறது. ஆனால், அங்கு மலரும் வாழ்வைப் பேசுகிறது. உண்மையில் முடிவிலிருந்து உண்டாகும் தெளிவான தொடக்கமாக இந்த இருவருமே வாழ்வை மாற்றிக்கொள்ளும் புள்ளியில் நாவல் நிறைவுகொள்கிறது. இந்த இருவருமே நாவலின் மையக் கதாபாத்திரங்கள். மற்றவர்கள் இவர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட பட்டுப் பூச்சிக் கூடுகள் மாத்திரமே.

தங்கள் வாழ்வின் அடையாளம் தேடுவதும் தங்கள் இருப்பு எது என்பதைத் தக்க வைத்துக்கொள்வதற்காக அவர்கள் போராடுவதுமே இந்த நாவல். ஆண் பிறப்பு என்று அன்னை நினைக்கும் ஆனால், ஆண்-பெண் என இரண்டும் கலந்த பிறப்பே அஃப்தாபுக்கு வாய்க்கிறது. அஃப்தாப், அஞ்சும் என மாறிப் பெண்ணாக வாழவே விரும்புகிறாள். ஒரு ஹிஜிராவின் வாழ்வே அவள் வாழ விரும்பும் வாழ்வு. ஆனால், ஒரு ஹிஜிராவுக்கு இச்சமூகத்தில் மரியாதையான இடம் உண்டா? அவளுக்குள் உறையும் ஆன்மா தேடுவதுதான் என்ன? இந்த நீண்ட வாதையின் பயணத்தை மயானத்துக்கு வந்து நிறைவுசெய்து அங்கிருந்து புதுவாழ்வைக் கண்டெடுக்கிறாள் அஞ்சும்.

தன்முனைப்பு மிக்க அறிவாளியான, அழகான திலோவுக்கும் வாழ்க்கைச் சிக்கல்கள் அவளது இருப்பும் சூழலும் சார்ந்து கனமும் அடர்த்தியும் கொள்கின்றன. அலைக்கழிக்கும் வாழ்க்கையில் மனிதர்களின் மீதான கரிசனம் என்ற புள்ளியில் இருவரும் இணைகிறார்கள். மயானத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களின் புது உலகம் கொண்டாட்டமாகத் தொடங்குகிறது.

நிறைய கவித்துவமான வரிகள் கொண்ட நாவலும்கூட இது. கவர்ந்த சில வரிகள்:

‘மொழிக்கு வெளியே வாழ்வது சாத்தியமாக இருந்ததா?’

‘வயதான பறவைகள் எங்கே சென்று சாகின்றன?’

‘தேவை என்பது கணிசமான அளவுக்குக் கொடூரங்களை உள்ளடக்கி வைத்துக்கொள்ளக் கூடிய கிடங்கு.’

இப்படிப் பல.

‘அவர்கள் என்னை நம்பாமல் இருப்பதற்கான காரணமே, நான் சொன்னது உண்மை என்று அவர்களுக்குத் தெரிந்திருப்பதுதான் என்பதுதான்’ என்ற ஜேம்ஸ் பால்ட்வின் வரிகள் சொல்லும் உண்மைதான் அரசியல் சூழலிலும், அரச வன்முறைகளிலும் சிக்கிப் பலியாகும் தனிமனிதர்களின் அவலம் என்பதை இந்நாவல் பேசுகிறது.

அந்தி நேர மரச்செறிவின் வெயில் திட்டுக்களாய் வரலாறு இந்நாவல் முழுக்க மாறி மாறி வெளிச்சத்தையும் மென்மையான இருளையும் காட்டுகிறது. அதன் வழியேதான் பாத்திரங்கள் செயல்படுகின்றன. வாழ்வின் போக்குகளைத் தீர்மானிப்பது எது? ஊழா... அவரவர் கர்ம வினைப் பயனா? அல்லது வரலாறா, அரசியலா? தனிமனிதர்களின் தன்முனைப்பால் சமூகத்தில் விளையும் பாதிப்பா? கூட்டு உளவியலின் எண்ணச் சேர்க்கையா? வரலாற்றின் கைப்பாவைகளாகப் பல வேளைகளில் சம்பந்தமேயின்றி சம்பந்தப்பட்டு, அதன் ராட்சசப் பற்களில் சிக்கிச் சிதையும் வாழ்க்கைக்குப் பொருள் உண்டா? பல அடுக்குகளாக மூடிப் புதைந்திருக்கும் சமூகத்தின் உளவியல்தான் புரிந்துகொள்ளக் கூடியதா? எந்த வகையிலும் தங்கள் வாழ்க்கைக்கான உத்தரவாதமோ நிலைத்தன்மையோ இல்லாத கல்பொரு சிறுநுரைபோலக் காலத்தின் முன் கையற்று நிற்கும் எளிய மனிதர்களின் பாடுகளையும் உதிரி மனிதர்களின் வேதனைகளையும் இந்நாவல் விரிவாகவே பேசுகிறது. அருந்ததி ராயின் இரு நாவல்களிலுமே பெண்களே பிரதானப் பாத்திரம் வகிக்கின்றனர். அதிலும் குறிப்பாக, பெண்ணின் உள்ளே உறையும் அன்னை என்ற ஓர்மை. இந்த நாவலிலும் திலோவும் அஞ்சுமும் மானுடத்தை வாரியணைக்கும் அன்னையராகவே துலங்குகின்றனர். ‘பெருமகிழ்வின் பேரவை’யில் மானுட நீசங்களுக்கு இடமில்லை.

அருந்ததி ராயின் மொழிநடையை முழுமையாக உள்வாங்கி, அதன் கட்டுக்கோப்பு சிதையாத வண்ணம் மொழிமாற்றித் தரும் சவாலான பணியைப் ‘பெருமகிழ்வின் பேரவை’ நாவல் மொழிபெயர்ப்பில் குப்புசாமி சாத்தியப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இந்த சவால்களைப் பற்றிப் பின்னுரையில் ஜி.குப்புசாமி எழுதியிருக்கிறார். நாவலின் தலைப்பைத் தமிழ்ப்படுத்தவே அவர் எவ்வளவு யோசிக்க வேண்டியிருந்தது என்பதொரு அழகிய மொழி விளையாட்டு.

- சித்ரா பாலசுப்ரமணியன், ‘மண்ணில் உப்பானவர்கள்’ நூலின் ஆசிரியர்.

தொடர்புக்கு: chithra.ananya@gmail.com

பெருமகிழ்வின் பேரவை

அருந்ததி ராய்

தமிழில்: ஜி.குப்புசாமி

காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் - 629 001

விலை: ரூ.550

தொடர்புக்கு: 96779 16696

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x