புத்தகத் திருவிழா 2022 | சிறார் இலக்கியம்: செல்லும் பாதை?

புத்தகத் திருவிழா 2022 | சிறார் இலக்கியம்: செல்லும் பாதை?
Updated on
2 min read

சென்னை புத்தகக்காட்சியில் சிறார் இலக்கியம் சார்ந்த நூல்கள் சற்றே அதிகரித்திருப்பது போன்ற ஒரு போக்கு தென்படுகிறது. கரோனா பெருந்தொற்று ஊரடங்கு, ஒருபுறம் குழந்தைகளை வீட்டுக்குள் முடக்கியது. அதே நேரம், சிறார் எழுத்தாளர்கள் பெருகிவருகிறார்கள். சிறார் எழுத்து முயற்சிகள் அதிகரித்துவருகின்றன. இந்தப் போக்கு ஆரோக்கியமாக உள்ளதா?

சற்று பின்னோக்கிப் போவோம். தமிழ் சிறார் இலக்கியப் படைப்பாளிகளில் அபூர்வமானவர்களில் ஒருவர் முல்லை தங்கராசன். கார், லாரி ஓட்டுநராக வேலை பார்த்துள்ள இவர், பிற்காலத்தில் தமிழில் சித்திரக் கதைகளைப் பிரபலப்படுத்தினார். பெயர் பெற்ற மாயாஜாலக் கதைகளை எழுதியுள்ளார், பல சிறார் இதழ்களுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். சிறார் எழுத்தாளராவதற்கு முந்தைய அவருடைய வாழ்க்கை மேடு பள்ளம் நிறைந்தது.

முல்லை தங்கராசன்
முல்லை தங்கராசன்

நம்பிக்கையும் கேள்வியும்

அன்றைய தமிழ்ச் சிறார் எழுத்தாளர்களில் பலர் இப்படி வறிய பின்னணியில் இருந்து எழுத வந்தவர்கள். அவர்களுடைய எழுத்து உயர்ந்த சமூக மதிப்பீடுகளைக் குழந்தைகளுக்குக் கடத்துவதாக இருந்தது. ஒருபுறம் வேடிக்கையாகவும் உலகைத் தெரிந்துகொள்வதற்கான பலகணியாகவும் சிறார் இலக்கியம் திகழ்ந்தாலும், அன்றைக்கு இருந்த புரிதலின்படி சமூகத்துக்குக் குழந்தைகளைத் தயார்ப்படுத்தும் வகையிலேயே சிறார் இலக்கியம் இருந்தது. சிறார் இலக்கியம் குறித்த பார்வை இன்றைக்கு மேம்பட்டிருக்கிறது, ஒருங்கிணைந்த வளர்ச்சியின் கண்கொண்டு அது பார்க்கப்படுகிறது.

சிறார் பாலியல் சித்ரவதை பற்றிப் பேசும் யெஸ்.பாலபாரதியின் ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’, சாதியத்தின் மோசமான முகத்தைக் கூறும் விஷ்ணுபுரம் சரவணனின் ‘நீலப்பூ’, கொ.மா.கோ. இளங்கோவின் ‘சஞ்சீவி மாமா’, கல்வி ஏற்றத்தாழ்வுகள் குறித்துப் பேசும் விழியனின் ‘மலைப்பூ’ அரசையும் அதிகாரத்தையும் எதிர்த்துக் கேள்வி கேட்கும் உதயசங்கரின் ‘மாயக்கண்ணாடி’ உள்ளிட்ட சமகாலப் படைப்புகள் புதிய போக்கை உருவாக்கிவருகின்றன. இதுபோன்ற படைப்புகள் தமிழ்ச் சிறார் இலக்கியம் குறித்த நம்பிக்கையை அதிகரிக்கின்றன. அதே நேரம், நவீன சிறார் இலக்கியத்தை எப்படி அணுகுவது என்பது குறித்த கேள்விகளும் குழப்பங்களும் இன்றைய பெற்றோர் / ஆசிரியர்களுக்கு இருக்கிறது. இதற்குக் காரணம், திடீரென்று அதிகரித்துவரும் சிறார் இலக்கிய நூல்கள்.

சில கற்பிதங்கள்

30 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சிறார் எழுத்தாளர்களிடம் பரவலான கூட்டுச் செயல்பாடு காணப்பட்டது. ஆனால், தற்போது தமிழ்ச் சூழலில் நடந்துவருவது என்ன? ‘உயிரினங்களைப் பேச வைத்துவிட்டால் சிறார் இலக்கியம்’, ‘நீதி சொல்லிவிட்டால் சிறார் இலக்கியம்’, ‘குழந்தைகளுக்கு எதுவுமே தெரியாது-பெரியவர்கள்தான் அனைத்தையும் அவர்களுக்கு எடுத்து ஊட்ட வேண்டும்’ என்று பல கற்பிதங்கள் தமிழ்ச் சிறார் இலக்கியத் துறையில் ஈடுபடுபவர்களிடையே பரவிக் காணப்படுகின்றன. சிறார் இலக்கியம் சார்ந்த நெறிகள், மொழிநடை, செப்பம் செய்தல்–ஆசிரியர் குழு மதிப்பிடுதல் (எடிட்டிங்) சார்ந்த எந்த நடைமுறையும் பின்பற்றப்படாத தமிழ்ச் சூழலில், சிறார் இலக்கியப் படைப்புகள் நினைத்தபடியெல்லாம் வெளியாகிவருகின்றன. இணையம், அச்சிடுவதற்கு முதலீடு குறைந்த ‘பிரிண்ட் ஆன் டிமான்ட்’ போன்ற நவீனத் தொழில்நுட்ப வசதிகளைப் பலரும் எளிதாக அணுக முடிவதால், தாங்கள் நினைத்ததைப் புத்தகமாக்கிவிட வேண்டும் என்கிற அவசரத்தைப் பலரிடமும் பார்க்க முடிகிறது. எந்தத் துறையும் ஒருசிலர் ஆதிக்கம் செலுத்துவதற்கு மாறாக, ஜனநாயகத் தன்மையுடன் அனைவரையும் வரவேற்பதாக இருக்க வேண்டும். எல்லோரும் இயங்க இடம் இருக்க வேண்டிய அதே நேரம், தரமும் புதுமையும் மட்டுமே அந்தத் துறையை மேம்படுத்தவும், அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும் செய்யும் என்பதைச் சிறார் இலக்கியப் படைப்பாளிகள் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பொறுப்புணர்வு அவசியம்

மற்றொரு புறம், சிறார் இலக்கியம் என்கிற பெயரில் பெற்றோர் தூண்டிலிட்டுப் பிடிக்கப்பட்டுவருகின்றனர். ‘உங்கள் குழந்தையின் புத்தகத்தைப் பிரசுரிக்கிறோம்’, ‘ஓவியத்தைப் பிரசுரிக்கிறோம்’, ‘தொலைக்காட்சியில் பேச வைக்கிறோம்’ என ஒவ்வொன்றுக்கும் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கும் போக்கைப் பார்க்க முடிகிறது. சில எழுத்தாளர்கள்-அமைப்புகள் இதை வேலையாகவே செய்துவருகின்றனர். இதற்காகப் படைப்பு நெறிமுறைகளுக்கு மாறாக முயற்சிகள் அதிகரித்துவருவதைப் பார்க்க முடிகிறது. ஆங்கிலச் சிறார் இலக்கியத்துடன் ஒப்பிடக்கூடிய வகையில் தமிழ்ச் சிறார் இலக்கியமும் வளர வேண்டும். அதற்கான பொறுப்புணர்வுடன் சிறார் இலக்கியவாதிகளும் சிறார் செயல்பாட்டாளர்களும் இயங்க வேண்டும். குழந்தைகளைப் பற்றிய புரிதல், வளர்ச்சி, மேம்பாடு ஆகியவையே அதன் மையமாக இருக்க வேண்டும். அதுவே, இந்த உலகை நமக்குப் பிறகு தாங்கிப் பிடிக்கப்போகிற அடுத்த தலைமுறைக்கு உயிர்ப்பூட்டக்கூடியதாக இருக்கும்!

- தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in