

மா.மணி (31.12.1931–24.2.2022) என்ற எளிய மனிதர் ‘முகம்’ மாமணி என்று தமிழுலகில் அறியப்பட்ட பிரமுகராக உருமாறியது ஒரு வரலாறு. வெறும் முதலெழுத்தாக இருந்த ‘மா’ முன்னொட்டாக மாறிச் சிறப்புப் பெயராக நிலைத்தது. பின்னர் ‘முகம்’ என்ற அடைமொழியும் சேர்ந்துகொண்டது.
வறுமையினால் மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க இயலாமல் பீடி சுற்றுதல், தையல் கடை, கருமார் வேலை, சுருட்டுச் சிப்பம் கட்டும் வேலை, எண்ணெய்க் கிடங்கில் சுமை தூக்குதல், மளிகைக்கடை வேலை, அச்சுத் தொழிலாளி என்று பாட்டாளியாக வாழ்க்கையைத் தொடங்கித் தன் முயற்சியால் படித்து, பட்டதாரியாகி, நல்ல பணிக்கு உயர்ந்து, தமிழுலகில் பலரின் மதிப்புக்கு உரியவராக விளங்கிய மாமணியின் வாழ்க்கை அசாதாரணமானது.
உயிரோடு கலந்து மாமணியை இயக்கிய ஈரோடு அவருடைய வாழ்க்கையை உருவாக்கியது. சிறுவனாகப் பெரியார், அண்ணாவின் சொற்பொழிவுகளால் அவர் ஈர்க்கப்பட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நடராசன் தாளமுத்து புரிந்த உயிர்த் தியாகம் உக்கிரப்படுத்திய வடசென்னைச் சூழலில் அவர் வளர்ந்தார். 1949 செப்டம்பர் 18-ல் திமுக தோன்றிய நாளன்று ராபின்சன் பூங்காவில் மழையில் நனைந்தவர் மாமணி.
திராவிட இயக்கத்தில் இரு மரபுகள் உண்டு. ஒன்று புலமைப் போக்கு. மற்றொன்று செயல் தளம். மாமணி இரண்டிலும் கால்கொண்டிருந்தார். முதற்கட்டம் முழுவதும் படிப்பும் எழுத்துமாக இருந்தது. ‘விடுதலை’ அச்சகத்தில் அச்சுக்கோப்பாளராக இருந்துகொண்டே அதில் கட்டுரையும் எழுதினார். ‘மதுரை மகாஜனம்’ தொடங்கி அன்றைய பத்திரிகைகள் அனைத்திலும் எழுதினார். இரண்டாம் கட்டத்தில் செயல் களம் முதன்மை பெற்றது. 1980-களின் தொடக்கம் முதல் அவர் நடத்திவந்த ‘முகம்’ மாத இதழும் சென்னை கலைஞர் கருணாநிதி நகர் இலக்கிய வட்டமும் பலரின்மீது செல்வாக்குச் செலுத்தின. பலரும் மறந்துபோன கா.அப்பாத்துரை, நாரண.துரைக்கண்ணன் ஆகியோருக்குப் புத்துயிர் ஊட்டியவர் மாமணிதான்.
மாமணியோடு உறவாடிய எவரும் அவர் செல்வாக்குக்கு ஆட்படாமல் தப்ப முடியாது. அவரை அறிந்தவர்கள் சுட்டமண்ணாக இல்லாதவரையில், தம் வாழ்வை ஓர் அங்குலமேனும் உயர்த்திக்கொண்டிருப்பார்கள். ஒழுங்கும் நெறியும் அவரது ஆதார சுருதி. அவர் வீட்டருகிலுள்ள பூங்கா பிறவற்றைவிடப் பசுமையாக இருப்பது தற்செயலானதல்ல. எல்லாரையும் அணைத்துச் செல்ல முயல்வார். ஆனால், எவர் ஒருவரையும் சார்ந்திராமல் தன்னை மட்டுமே நம்பி வினையாற்றுவார். எறும்பு, தேனீ என்ற தேய்ந்துபோன உவமைகளே நினைவுக்கு வந்து தொலைக்கின்றன. பொற்கால உலகத்தின் ஆதர்சக் குடிமகனாக இருக்கும் எல்லாப் பண்புகளும் அவரிடம் குடிகொண்டிருந்தன.
என்னைத் தமிழ்ச் சமூகத்தின் மாணவனாக மாற்றியவர் மாமணி.1981-ன் தொடக்கம். கே.கே.நகரின் சில விளக்குக் கம்பங்களில் கட்டையான பேனா கொண்டு ரப்பர் முத்திரையிடும் ஊதா மையால் எழுதிய விளம்பரத் தட்டிகள் தொங்கிக்கொண்டிருந்தன. இலக்கிய வட்டம் என்ற அமைப்பின் மாதக் கூட்டத்துக்கான அறிவிப்பில் மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி என்ற செய்தி என்னை ஈர்த்தது. போட்டியில் கலந்துகொள்ளச் சென்றேன்.
போட்டியை நடத்திய மாமணி அப்போதே என்னை விடவும் உயரம் குறைவு. வழுக்கைத் தலை. வேட்டி. பொலிந்த முகம். தெளிவான குரலில் பேச்சு. மாமணி ஒரு பகுத்தறிவாளர். தெருமுனையில் நின்று கூவுவது மட்டுமல்ல, தன் கருத்தை மெல்ல எடுத்தூட்டித் தம் பக்கம் ஈர்ப்பதும் மதப் பிரச்சாரம்தான் என்று பொருள்கொண்டால், அவரை ஒரு மதப் பிரச்சாரகர் என்றே கொள்ள வேண்டும். கையில் மிட்டாயும் அக்குளில் கோணிப்பையும் இல்லாதது மட்டுமே குறை. விரைவிலேயே என்னை அவர் ஆட்கொண்டுவிட்டார். சுரதா, ஜெயகாந்தன், பூவண்ணன், ‘தீபம்’ நா.பார்த்தசாரதி, அவ்வை நடராசன், பெ.நா.அப்புஸ்வாமி என்று இலக்கிய வட்டக் கூட்டங்களில் பலர் சிறப்புரையாற்றிச் சென்றனர். ஆனால், தொ.மு.சி. ரகுநாதனும் த.கோவேந்தனும்தான் உளத்தீயை மூட்டினார்கள். ஒவ்வொரு சிறப்புப் பேச்சாளர் வருமுன்னும் அவர் பேசும் பொருள் தொடர்பான நூல் ஒன்றை மாமணி கொடுப்பார்.
பெரும்பாலும், அவர் சிறுவயதில் காலணா காலணாவாகச் சேர்த்து வாங்கிய நூற்பிரதியாக அது இருக்கும். கூட்டம் நடப்பதற்கு முன் அதை வாசித்து முடிப்பதோடு, ஒரு சிறு கட்டுரையும் எழுதிக் கூட்டத்தில் படிக்க வேண்டும். கருத்துப்பதியன் போடுவதற்கு அவர் கையாண்ட வழிமுறை இது.
ஞாயிறு மதியங்கள்தோறும் சந்தித்துவிடுவோம். இரண்டு மணி நேரம் அவர் உரையாடலை வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருப்பேன். தமிழகத்தின் சமூக, அரசியல், இலக்கிய வரலாறுகளின் பாலபாடங்களை அவர் போதித்தார். தமக்குத் தெரிந்ததை எடுத்துரைப்பதில் அவருக்குச் சலிப்பு ஏற்பட்டதேயில்லை. அந்த ஆண்டுகள் மிகவும் உக்கிரமானவை. எனக்குப் பதினான்கு வயது என்றால், மாமணிக்கு ஐம்பது. ஆனால், ஒரு நாளும் அவர் என்னை ஒருமையில் விளித்ததில்லை. சக மனிதர்களை மதித்தல் என்பது மாமணியிடம் ஊறிய பண்பு. இதற்கு மேலும் சிறந்த பண்புகள் அவரிடம் மண்டியிருந்தன.
நட்சத்திரங்களால் மட்டுமே நடப்பதல்ல உலகம். சமூகத்திலிருந்து தமக்குக் கிடைத்ததைவிடச் சமூகத்துக்கு அதிகம் பங்களிப்பவர்களே இவ்வுலகை இயக்குகிறார்கள். உண்டால் அம்ம உலகம்.
- ஆ.இரா.வேங்கடாசலபதி வரலாற்று ஆய்வாளர், ‘வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: chalapathy@mids.ac.in