உருவாகிறதா புதிய அரேபியா?

உருவாகிறதா புதிய அரேபியா?
Updated on
3 min read

மதத்தை அடிப்படையாகக் கொண்ட நாடான சவுதி அரேபியாவில், 2019 வரை கலாச்சாரம் என்கிற சொல்லுக்கு ஒற்றைப் பொருள்தான் இருந்தது; அது மதம் சார்ந்ததாக இருந்ததால் கலாச்சாரத்தின் பன்மையான முகங்களுக்கு இடம் இருக்கவில்லை. நாடகம், சினிமா, சுற்றுலா, வரலாறு, பாரம்பரியம், இலக்கியம் முதலான கலாச்சாரப் படிமங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனால், இன்றைய நிலைமை அப்படியில்லை.

‘சவுதி விஷன்-2030’ என்கிற கனவுத் திட்டத்தை ஆரம்பித்துள்ள சவுதி அரசு, புதிய நாடொன்றை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறது. தன் இளைஞர்கள் மத அடிப்படைவாதத்துக்குப் பலியாகக் கூடாது என்கிற நோக்கத்திலும் ஆரம்பமாகியுள்ள இந்தத் திட்டத்தின் மூல நோக்கம், அரேபியாவின் பொருளாதார அடித்தளத்தை விரிவுபடுத்துவதுதான். எண்ணெய்க் கிணறுகளையே சார்ந்துள்ள அரேபியாவின் வருமானத்தைப் பல்வகைத் துறைகளிலும் மீட்டெடுத்து, வருங்காலத்தைத் திடமாக எதிர்கொள்ள உருவாகியிருக்கும் வரைபடம்தான் இது என்று கூறப்படுகிறது.

சவுதி இளவரசர் மொகமத் பின் சல்மானின் கனவுத் திட்டமான இந்த ‘சவுதி விஷன்-2030’ அரேபியாவில் புதிய நகர்வுகளைச் செய்துள்ளது. மத அடிப்படைவாதத்தை முழுமையாக எதிர்க்கும் அரசு, சில காரணங்களுக்காக இதுவரையிலும் நாட்டில் தடைசெய்யப்பட்டிருந்த கலாச்சாரப் பண்பாட்டு மையங்களை மீண்டும் தொடங்கி, புதிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படிப் பார்த்தால், பழைய அரேபியா உலகக் கலாச்சாரத்தின் அதிசயம் எனக் கூறலாம். கவிதையைக் கொண்டாடிய வெகுசில தொல்சமூகங்களுள் அரேபியாவும் ஒன்று. அரபு உலகில் கவிதை என்பது தவிர்க்க முடியாத வாழ்க்கையின் ஓர் அங்கம். இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பிருந்தே கவிதையானது அரபு வாழ்க்கை முறையின் ஒரு பாகமாகத்தான் இருந்திருக்கிறது. இன்றும்கூட அரேபியாவின் பூர்வகுடி மக்களான பதூவன் வாழ்க்கையில் கவிதை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

கவிதைகளுக்காகப் போர்களே நடந்த வரலாறுள்ள அரேபியா சில காரணங்களுக்காக இலக்கியத்தின் பாதையிலிருந்து விலகி, தார்மிக அறம் சார்ந்த வாழ்க்கை நோக்கி நகர்ந்தது. ஆனால், தற்போது பழைய அரேபியாவின் சுவடுகள் மீள ஆரம்பித்துள்ளன. நாடகம், கவிதைப் போட்டிகள், சினிமா போன்ற மனிதப் படைப்பாற்றலை நீட்சிப்படுத்தும் சாத்தியப்பாடுகள் பெரும் வீச்சில் படர்கின்றன. இதுவரையில் பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்டிருந்த பழைய அரேபியாவின் (இஸ்லாமுக்கு முன்னிருந்த) தடயங்களைப் பாதுகாக்கும் வேலைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

அல் உலா போன்ற இஸ்லாமுக்கு முன்பிருந்த நபாத்திய வரலாற்று இடங்களை இப்போது ஐரோப்பிய நிறுவனங்களோடு சேர்ந்து சுற்றுலாத் தலங்களாக சவுதி அரசு மாற்றியிருக்கிறது. தாயிஃப் என்கிற பழமை வாய்ந்த கவிதை நகரம் இப்போது புதுப் பொலிவுடன் ஜொலிக்கிறது. இஸ்லாமுக்கு முன்பிருந்த அரபு சமூகத்தின் காவியத் தலைநகரம்தான் இந்த தாயிஃப். இங்குதான் ‘ஸூக் ஒகாஸ்’ என்கிற அரபு காவியத்தின் முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.

இஸ்லாமுக்கு முந்தைய நாட்களில் இங்கு கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு அவற்றில் தேர்வுசெய்யப்பட்ட கவிதைகள் நீளமான, உன்னத ரகக் கைத்தறி துணியில் தங்க எழுத்துக்களால் வரைந்து காபாவின் வெளிச்சுவரில் தொங்க விடப்பட்டன. சில காரணங்களால் விடுபட்டிருந்த அந்தக் ஏழு கவிதைகள் மீட்டெடுக்கப்பட்டு அச்சிடப்பட்டது மட்டுமல்லாமல் தாயிஃப் நகரத்தின் கோடைக் கால உற்சவத்தில் அவை நாடகம்போல் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.

2019 வரையில் வெளிநாட்டவர் அரேபியாவுக்குள் சுற்றுலா வர அனுமதி இருக்கவில்லை. ஆனால், இப்போது சுற்றுலா இங்கு வளர்ந்துவரும் துறைகளில் ஒன்று! அரேபியா வெறும் பாலைவன நிலப்பரப்பைக் கொண்டுள்ள நாடல்ல. இங்கு மலை, காடு, சிறிய ஆறுகள் கொண்ட நிலப்பரப்புகளும் உள்ளன. இவ்வகையான இடங்களை உலகத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களாக மாற்ற முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

கலாச்சார அமைச்சகம், சுற்றுலா அமைச்சகம் என்கிற புதிய அமைச்சகங்கள் உருவாக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், ‘நியோம்’ என்கிற புதியதோர் மாபெரும் நகரத்தை உருவாக்கக் கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுகிறது. உலக வர்த்தக மற்றும் கலாச்சாரத் தலைநகரமாக ‘நியோம்’ உருவாக வேண்டும் என்கிற இளவரசர் மொகமத் பின் சல்மானின் கனவு 2030-ல் செயல்பாட்டுக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தம்மாம் நகரத்தை ஒட்டியிருக்கும் ‘இத்ரா’ என்கிற (அரசர் அப்துல் அஸீஸ் உலகக் கலாச்சார மையம்) அருங்காட்சியகம் அரேபியாவின் முக்கியமான கலாச்சாரத் தலம். நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலப் பருவத்தில், தலைநகர் ரியாத் உள்ளிட்ட சில நகரங்களில் ‘ரியாத் ஸீஸன்’, ‘தாயிஃப் ஸீஸன்’ என்கிற பெயர்களில் கலை உற்சவங்கள் நடைபெறுகின்றன. ‘ஜனாத்ரியா’, ‘ஒட்டகப் போட்டிகள்’ போன்ற பழைய உற்சவங்கள் தற்போது புதிய பொலிவுடன் மக்களைக் கவர்ந்திழுக்கின்றன.

1983-ல் தடைசெய்யப்பட்டிருந்த திரையரங்குகள் இப்போது செயல்பட ஆரம்பித்துள்ளன. ஐ-மாக்ஸ், மூவீ போன்ற அயல்நாட்டுப் பெருநிறுவனங்கள், சொகுசு அரங்கங்களைத் தொடங்கியுள்ளன. ரியாத், தம்மாம், ஜித்தா போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே இருக்கும் திரையரங்கங்கள் 2030-க்குள் வேறு பல நகரங்களிலும் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. திரைப்பட விழாக்கள், ஓவியக் கண்காட்சி, நாடக மேடைகள் என அரேபியா புதிதாக மலர்கிறது. கான் (Cannes) போன்ற உலகின் மிகச் சிறந்த திரைப்பட விழாக்களில் பங்கு பெறுவதற்குச் சுயாதீன சினிமாவுக்கும் ஊக்கம் தரப்படுகிறது. ‘ரெட் ஸீ இண்டெர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்’ எனும் சர்வதேசத் திரைப்பட விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

கூடவே, வாகனம் ஓட்டும் சுதந்திரம் மட்டுமல்லாது, பிற உரிமைகளையும் பெற்றிருக்கும் இந்நாட்டுப் பெண்கள், புதிய அரேபியாவை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு புதிய பாதையில் சென்றுகொண்டிருக்கும் அரேபியா, வரும் நாட்களில் உலகக் கலாச்சார மையமாக மாறவும் வாய்ப்புள்ளது. துபாய் நகரத்தைப் போன்று, அரேபியாவின் ‘நியோம்’கூட ஒரு அற்புதத் தலமாக மாறலாம். இஸ்லாத்தின் மையமாக இருக்கும் அரேபியா, சமகால உலகத்தின் முக்கியக் கலாச்சார நாடுகளில் ஒன்றாகவும் திகழலாம். பழைய காவிய அரேபியா மீட்டெடுக்கப்பட்டு, உலகத்தின் கலை இலக்கிய விழாக் கொண்டாட்டமாகவும் அது உருவாகக் கூடும்!

- கனகராஜ் பாலசுப்பிரமணியம், தமிழ்-கன்னடம் ஆகிய இருமொழி எழுத்தாளர், ‘அல்-கொஸாமா’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.தொடர்புக்கு: kanakzen@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in