

கடந்த ஆண்டு அகால மரணமடைந்த பிரான்சிஸ் கிருபாவின் அனைத்துக் கவிதைகளையும் ஒன்றாக ‘சாந்தா குருஸ்' என்ற தலைப்பில் ‘தமிழினி’ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 500-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகம், விலையில்லாப் பதிப்பு என்பது கூடுதல் சிறப்பு. பிரான்சிஸைக் குறித்த விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பான ‘கடலாகத் துணிந்தவன்’ நூலும் விலையில்லாத பதிப்பே.
தமிழின் முக்கியமான நாவல்களுள் ஒன்றாகக் கருதப்படும் பிரான்சிஸின் ‘கன்னி’க்குப் புதிய பதிப்பொன்றும் வெளியாகியிருக்கிறது. விலையில்லாப் புத்தகங்களை வாங்குபவர்கள் ‘கன்னி’யையும் வாங்கிச்சென்றால், பிரான்சிஸின் படைப்புலகம் முழுவதையும் வசப்படுத்திக்கொள்ளலாம்! பிரான்சிஸ் கிருபாவை எல்லோருக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்ற இலக்கோடு இந்தப் புத்தகங்களை வெளியிட்டிருக்கும் ‘தமிழினி’ வசந்தகுமாருக்கு இலக்கிய வாசகர்கள் என்றும் கடமைப்பட்டிருக்கிறார்கள். (அரங்கு எண்கள்: 401-402, 165-166)
அரசுப் பள்ளியில் மின்னூலாக்கம்
கும்பகோணம் ‘அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி’யில், தலைமை ஆசிரியர் ஆதரவுடன், மாணவர்களுடன் ஆசிரியர்கள் இணைந்து, 'Operation - Digi' என்ற திட்டத்தை உருவாக்கி, ‘பள்ளி நூலகத்தைப் பாதுகாப்போம்' என்ற தாரக மந்திரத்துடன், பள்ளி நூலகத்தில் உள்ள பழமையான, அரிய, காப்புரிமையற்ற நூல்களை செல்பேசியில் ஸ்கேன் செய்து, புத்தகத்தை பிடிஎஃப் ஆக மாற்றி, www.aaghsskumbakonam.blogspot.in என்று தங்கள் பள்ளிக்கெனத் தொடங்கப்பட்ட வலைப்பூவில் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பள்ளியில் ஏற்கெனவே மாணவர்களின் படைப்புகளைக் கொண்டு பொங்கல் மலர் (Pdf) வெளியிட்டது, மாணவரின் ஓவியங்களை வைத்து மேசை நாள்காட்டி, ஆண்டு நாள்காட்டி வெளியிட்டது, வாசிப்புத் திறன் வளர்க்கும் வகையில், வாசிப்பு ஏடு உருவாக்கியது எனப் பல செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். தன் வாழ்நாள் முடிவை எண்ணிக்கொண்டிருக்கும் சில புத்தகங்களை டிஜிட்டல் வடிவில் மாற்றுவது என்னும் செயல்பாட்டை இப்பள்ளி மாணவர்களே பெரும்பாலும் செய்துவருகின்றனர். மாணவர்கள் மொபைல் கேம் விளையாடுவார்கள் என்ற பொதுவான கருத்தைச் சிதறடிக்கும்படி, பொங்கல் விடுமுறையில் கொடுக்கப்பட்ட 40 புத்தகங்களில், தற்போது 25 புத்தகங்களை ஸ்கேன் செய்து, பிடிஎஃப் ஆக உருவாக்கப்பட்டிருக்கின்றன.
புத்தகக்காட்சி:
குரோம்பேட்டையில் புதிதாக உதயமாகியிருக்கும் ‘வள்ளி புத்தக உலகம்’ கடந்த பிப்ரவரி 1-ம் தேதியில் ஒரு புத்தகக் காட்சியைத் தொடங்கியது. அந்தப் புத்தகக் காட்சி பிப்ரவரி 28 வரை நடைபெறும். இந்தப் புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் உட்பட அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. இடம்: ராதா நகர், பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில், குரோம்பேட்டை. தொடர்புக்கு: 9884355516.