

ச.தமிழ்ச்செல்வன் அறிவொளி இயக்கத்தில் தனக்குக் கிடைத்த அனுபவங்களைச் சுவைபட எழுதியிருக்கும் கட்டுரைத் தொகுப்பு இது. கட்சி, அமைப்பு, நிறுவனம் என்கிற பாகுபாடு இன்றி அனைவரும் ஒன்றுபட்டு நிகழ்த்த வேண்டியது அறிவொளிப் பணி என்பதை இந்நூலின் மூலம் சொல்கிறார் அவர். வீடு வீடாகச் சென்று சாக்பீஸால் கையெழுத்துப் போடக் கற்றுகொடுத்தது, ரத்தத்தில் ‘குரூப்’ இருக்கிறது என்பதைக் கூட கற்றுத்தராத கல்வித் திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வு என்றெல்லாம் அறிவொளி இயக்கத்தினுடனான தனது களப்பணிகளை ச. தமிழ்ச் செல்வன் பதிவு செய்த நூலின் மறுபதிப்பு இது.
-மானா
சாதியத்தின் முகம்
இரவீந்திர பாரதியின் இந்த நாவலில் கிராமத்து மனிதர்களுக்குள் இன்னமும் மண்டிக் கிடக்கும் சாதிய வன்மம் மிகச் சரியாகப் பதிவாகியுள்ளது.
பல்வேறு சாதி மக்களும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகப் பழகினாலும்கூட திருமண பந்தம் என்று வருகிறபோது தங்கள் சொந்த சாதிக்குள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்பதற்காக ’எதையும்’ செய்யத் தயாராய் இருக்கிறார்கள் என்பதே இந்த நாவலின் மையம். பாசாங்கற்ற மொழிநடையில் அசலான மனிதர்களையும், சமூகத்தின் சாதிய யதார்த்தத்தையும் நம்முன் இந்த நாவல் அசலாகக் காட்சிப்படுதுகிறது.
கருக்கலில் முறிபடும் சிறகுகள்
இரவீந்திரபாரதி
விலை: ரூ.180/-
வெளியீடு: காவ்யா, சென்னை 600 024.
98404 80232.
- மு.மு
ஆவண முயற்சி!
கலாச்சார வளம் மிக்க தமிழக ஊர்களுள் சங்கரன்கோவிலும் ஒன்று. சைவம், வைணவம், சாக்தம் போன்ற இந்து மதத்தின் பிரிவுகள் மட்டுமல்லாமல் இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களும் செழித்து வளர்ந்த ஊர். இந்த ஊரின் பழமை, சமீப காலத்துப் பழமை, தற்காலம் ஆகிய மூன்றையும் இணைக்கும் விதத்தில் இந்த நூல் அழகான ஒரு ஆவணமாக உருப்பெற்றிருக்கிறது. புகைப்படங்கள் இந்த நூலின் கூடுதல் பலம்.
சங்கரன்கோவில்
அ. பழநிசாமி, ப. அருணகிரிநாதன்
விலை: ரூ. 600
வெளியீடு: மங்கையர்க்கரசி பதிப்பகம்,
சங்கரன்கோவில் 627 756. 94443 93903.
- தம்பி
ஹைக்கூ சித்திரங்கள்
‘பிரியத்திற்கு/ உகந்ததொரு மலை/ முற்றிலும் தொலைவில்’ என்பது போன்ற ஹைக்கூ கவிதைகளைக் கொண்ட தொகுப்பு இது. நேர்த்தியான வடிவமைப்பும், ஹைக்கூவுக்குப் பொருத்தமான கு.கவிமணியின் கறுப்பு வெள்ளை ஓவியங் களும் இந்தத் தொகுப்புக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
நெற்றி சுருங்கிய புத்தர்
மணி சண்முகம்
விலை: ரூ. 80
வெளியீடு: விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் 01
0422 2382614.
- ஆபி