360: ஈரோடு தமிழன்பனுக்கு விருது!

360: ஈரோடு தமிழன்பனுக்கு விருது!
Updated on
2 min read

ஈரோடு தமிழன்பனுக்கு விருது!

அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள 60 தமிழ்ச் சங்கங்கள் இணைந்த ‘வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை’ (FETNA) எனும் அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு தமிழ்ப் படைப்பாளிக்கு ‘உலகத் தமிழ் பீட விருது’ வழங்கிச் சிறப்பிக்கிறது. விருதுத் தொகை 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 11,29,000). கடந்த 2021-ம் ஆண்டுக்கான இந்த விருது கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு வழங்கப்படுகிறது என ‘FETNA’ அறிவித்துள்ளது. ‘உலகத் தமிழ் பீட விருது’ பெரும் ஈரோடு தமிழன்பனுக்கு வாழ்த்துகள்!

ஸ்ரீவள்ளியா, பெருந்தேவியா?

கவிதை உலகின் சமீபத்திய ‘சென்சேஷன்’ ஸ்ரீவள்ளி. அவரது இதுவரையிலான கவிதைகள் வெளியீடு இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் சித்ரா பாலசுப்ரமணியன், எல்.ஜே.வயலட், பூவிதழ் உமேஷ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். அதே அரங்கில் பெருந்தேவியின் நூல்கள் அறிமுக நிகழ்வும் இடம்பெறவிருக்கிறது. இந்நிகழ்வில் இசைக்கலைஞர் அனுராதா ராமன், எழுத்தாளர்கள் சுனில் கிருஷ்ணன், அரவிந்தன், தூயன், எம்.அண்ணாதுரை, ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். ரஜினி படமும் கமல் படமும் ஒரே நாளில் வெளியானால் மோதிக்கொள்வதுபோல் ஸ்ரீவள்ளி கவிதைகளின் ரசிகர்களும் பெருந்தேவி கவிதைகளின் ரசிகர்களும் மோதிக்கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

ஜெயந்தன் நினைவுகூடல்

எழுத்தாளர் ஜெயந்தனின்12-ம் ஆண்டு நினைவுதின நிகழ்வு இன்று நடைபெறுகிறது. சீராளன் ஜெயந்தன், இளம்பிறை, வேல்கண்ணன், பாலைவன லாந்தர், வேடியப்பன், ஜீவ கரிகாலன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். ஜெயந்தனின் ‘பாவப்பட்ட ஜீவன்கள்’ நாவல் யாவரும் பப்ளிஷரால் வெளியிடப்படுகிறது. சீராளன் ஜெயந்தனின் ஓவியக் கண்காட்சியும் இந்த நிகழ்வில் இடம்பெறுகிறது. இடம்: பி ஃபார் புக்ஸ், வேளச்சேரி, சென்னை. நேரம்: மாலை 6 மணி.

மகேந்திர பல்லவனின் நவீன அவதாரம்

ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய இரண்டு சம்ஸ்கிருத நாடகங்களுள் ஒன்று ‘மத்தவிலாசப் பிரகசனம்’. பௌத்த, சைவத் துறவிகளைப் பற்றிய அங்கத நாடகம் இது. இந்த நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு சென்னை ஆர்ட் தியேட்டர் குழுவின் பிரளயன் ‘மத்தவிலாசப் பிரகசனம்’ என்ற நாடகத்தை இயக்கி, நிகழ்த்தவிருக்கிறார். இடம்: அலியான்ஸ் ஃபிரான்சேஸ். நாள்: பிப்ரவரி 26. நேரம்: மாலை 4 & 7 மணி. டிக்கெட்டுகளுக்கு: Bookmyshow

புதுமைப்பித்தன் நினைவு நாவல் போட்டி!

கடந்த ஆண்டு யாவரும் பப்ளிஷர்ஸ் ‘புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி’ நடத்தினார்கள். அது இந்த முறை ‘புதுமைப்பித்தன் நினைவு நாவல் போட்டி-2022’ என்று பரிணாமமடைந்திருக்கிறது. மொத்தப் பரிசுத் தொகை ரூ.1,50,000. பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்படும் 5 நாவல்களுக்குத் தலா ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நாவல்கள் ‘யாவரும் பப்ளிஷ’ரால் பதிப்பிக்கப்படும். படைப்புகளை அனுப்ப வேண்டிய இறுதி நாள்: ஜூன் 30. நாவல் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: puthumaipithan.award@gmail.com

புத்தகக்காட்சி

குரோம்பேட்டையில் புதிதாக உதயமாகியிருக்கும் ‘வள்ளி புத்தக உலகம்’ கடந்த பிப்ரவரி 1-ம் தேதியில் ஒரு புத்தகக் காட்சியைத் தொடங்கியது. அந்தப் புத்தகக் காட்சி பிப்ரவரி 28 வரை நடைபெறும். இந்தப் புத்தகக்காட்சியில் ’இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் உட்பட அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. இடம்: ராதா நகர், பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில், குரோம்பேட்டை. தொடர்புக்கு: 9884355516.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in