Published : 12 Feb 2022 12:03 PM
Last Updated : 12 Feb 2022 12:03 PM

முழுமையான கிரிக்கெட் கையேடு

தமிழில் கிரிக்கெட் விளையாட்டின் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் அலசும் ஆழமான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர் தினேஷ் அகிரா. ‘இந்து தமிழ்’, ‘விகடன்’, ‘மின்னம்பலம்’, ‘சமயம்’ உள்ளிட்ட இதழ்களிலும் இணைய இதழ்களிலும் வெளியான அவருடைய 26 கிரிக்கெட் கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

‘இந்திய கிரிக்கெட்டுக்கு இடஒதுக்கீடு தேவையா?’ என்னும் முதல் கட்டுரையில் இந்தியாவில் கிரிக்கெட் நுழைந்த காலனி ஆட்சிக் காலத்திலிருந்து பிராமணர்கள் உள்ளிட்ட உயர் சாதியினர் மட்டைவீச்சிலும், இஸ்லாமியர்களும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் வேகப்பந்து வீச்சிலும் சீக்கியர்கள் சுழல் பந்துவீச்சிலும் அதிகமாகச் சாதித்ததைத் தரவுகளுடன் முன்வைக்கிறார். இதை சமூகப் படிநிலையை அடிப்படையாகக் கொண்ட வேலைப் பகுப்பாக அடையாளப்படுத்துகிறார். தலித்துகளும் பழங்குடியினரும் சொற்ப எண்ணிக்கையிலேயே இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற முடிந்ததற்கான சமூகக் காரணிகளை அலசுகிறார். ‘சச்சின் டெண்டுல்கர் என்னும் புனிதப்பசு’ என்கிற இரண்டாம் கட்டுரையானது சச்சினின் ஆளுமை, சமூகப் பின்னணி, உளவியல் ஆகியவற்றோடு அவருக்கு இருக்கக்கூடிய அரசியல் அழுத்தங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் முதிர்ச்சியான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.

‘விராட் கோலியை எனக்குப் பிடிக்காது’ என்னும் கட்டுரையில் கோலியை ஆசிரியர் விமர்சிப்பதுபோல் பாராட்டுகிறாரா பாராட்டுவதுபோல் விமர்சிக்கிறாரா என்பதைப் புரிந்துகொள்ள உன்னிப்பான வாசிப்பு தேவை. இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கும் விதம் விளையாட்டு தொடர்பான கட்டுரைகளிலும் மொழியின் வெவ்வேறு சாத்தியங்களை பரீட்சித்துப் பார்ப்பதற்கான வாசலைத் திறந்துவைக்கிறது.

பாட் கம்மின்ஸ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை முன்வைத்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் அந்த வீரர்களின் தனித்துவத்தையும் சிறப்புகளையும் மட்டுமல்லாமல் முறையே சீம், ஸ்விங், சுழல்பந்துவீச்சு என மூன்று வகையான பந்துவீச்சுகளின் நுட்பங்கள், வெவ்வேறு வகைமைகள், அவற்றின் சாதக-பாதகங்கள், ஒவ்வொரு வகைமையிலும் இடம்பெறும் முக்கியமான ஆளுமைகள் ஆகியோர் குறித்த சிறப்பான அறிமுகத்தை அளிக்கின்றன. ரோஹித் ஷர்மா, ஏபி டிவிலியர்ஸ், ஜோ ரூட், பாபர் ஆஸம் உள்ளிட்ட தலைசிறந்த மட்டையாளர்கள் குறித்த கட்டுரைகள் மட்டைவீச்சின் பல்வேறு நுணுக்கங்களை மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மட்டையாளர்களின் பாரம்பரியம், அவர்கள் விளையாட்டை அணுகும் போக்கு, ஒரே நாட்டைச் சேர்ந்த மட்டையாளர்களுக்கு இடையே நிலவிய வெவ்வேறு அணுகுமுறைகள், பார்வைகள் ஆகியவற்றை விளக்குகின்றன.

ரோஹித் ஷர்மா குறித்த கட்டுரையில் ‘இவரால் மலையை எல்லாம் புரட்டிப் போட்டுவிட முடியாது, ஆனால், மலையை ரசிப்பது எப்படி என நமக்குக் கற்றுக்கொடுக்க முடியும்’ என்னும் வரியின் மூலம் ரோஹித்தின் போதாமைகளாகப் பார்க்கப்படும் விஷயங்களைத் தாண்டி, அவருடைய முக்கியத்துவத்தைப் புலப்படுத்தும் கண்ணாடியை நமக்கு அணிவிக்கிறார். விராட் கோலி, கேன் வில்லியம்ஸன், பாபர் ஆஸம் ஆகியோரின் கவர் டிரைவ்கள் குறித்த வர்ணனை விளையாட்டை இப்படி எல்லாம்கூட ரசிக்க முடியுமா என்று வியப்பை ஏற்படுத்துகின்றன.

கிரிக்கெட்டின் அழகியல், கிரிக்கெட்டில் நிலவும் அரசியல், கிரிக்கெட்டில் தாக்கம் செலுத்தும் இயற்பியல், புவியியல், உளவியல், மானுடவியல், சமூகவியல், காலநிலை என பல்வேறு துறைகளில் ஆசிரியருக்கு இருக்கும் பரிச்சயமும் தனித்துவமான அரசியல் பார்வையும் இந்தக் கட்டுரைகளில் புலப்படுகின்றன. சி.எல்.ஆர்.ஜேம்ஸ், ராமசந்திர குஹா உள்ளிட்ட கிரிக்கெட் எழுத்து முன்னோடிகளை நோக்கிப் புதிய வாசகர்களை நகர்த்தும் வகையில் கட்டுரைகளில் அவர்களின் மேற்கோள்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கிரிக்கெட் விளையாட்டில் அரசியல் கலக்கக் கூடாது என்னும் மேல்தட்டு மனநிலை கொண்டோர், கிரிக்கெட் என்றாலே மேலாதிக்கம், சூதாட்டம், வணிகமயம் ஆகியவற்றுடன் மட்டும் தொடர்புபடுத்தி, அந்த விளையாட்டை நிராகரிக்கும்/ மட்டம்தட்டும் தூய்மைவாத மனநிலை கொண்டோர் ஆகிய இரு தரப்பினரும் கிரிக்கெட் குறித்த தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலிக்கத் தூண்டியிருக்கிறார் தினேஷ் அகிரா. தமிழில் கிரிக்கெட் தொடர்பான ஆட்ட நுணுக்கங்கள், அரசியல், உளவியல் ஆகியவை குறித்த அலசல்களின் எல்லையைத் தன்னுடைய கட்டுரைகளின் மூலம் விரிவுபடுத்தியிருக்கும் தினேஷ் அகிராவுக்கு வாழ்த்துகள்!

ஆடுகளம்: அரசியல், அழகியல், ஆன்மிகம்

தினேஷ் அகிரா

வெளியீடு: வாசகசாலை பதிப்பகம், சென்னை-73

விலை: ரூ.200

தொடர்புக்கு: 9942633833

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x