நூல்நோக்கு: பூபேந்திரநாத் மறக்கப்பட்ட மாவீரர்
‘வெய்ய சிறைக்குள்ளே புன்னகையோடு போம்/ ஐயன் பூபேந்த்ரனுக்கு அடிமைக்காரன்’ என பாரதியே வியந்து போற்றிய பூபேந்திரநாத் தத்தா, சுவாமி விவேகானந்தரின் இளைய சகோதரர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இளைஞர்களை அணிதிரட்டிய அனுசீலன் சமிதியின் உறுப்பினர் மட்டுமின்றி அதன் வெளியீடான ‘யுகாந்தர்’ இதழின் ஆசிரியர். பொறிபறந்த அவரது எழுத்துக்கு பிரிட்டிஷ் ஆட்சி ஓராண்டு கடுங்காவல் தண்டனை கொடுத்தது.
சிறையிலிருந்து வெளியே வந்து, சகோதரி நிவேதிதா தேவியின் உதவியுடன் அமெரிக்கா சென்று, மேற்படிப்பு படித்து, பின்னர் ஜெர்மனியில் மானுடவியலில் டாக்டர் பட்டம் பெற்றார். பெர்லினிலிருந்து செயல்பட்ட இளைஞர்கள் குழுவிலும் இருந்தார். இந்திய விடுதலை குறித்து லெனினுடன் உரையாடியபோது, இந்திய தொழிலாளர்கள்-விவசாயிகளை அணிதிரட்டுவதன் மூலமே விடுதலை பெற முடியும் என்ற அவரது அறிவுரையைச் செவிமடுத்து, இந்தியா திரும்பி விவசாயிகளை அணிதிரட்டும் பணியில் ஈடுபட்டவர்.
இப்பணியில் அன்றைய இளம் தலைவர்களான ஜவாஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர். விவேகானந்தரை வேதாந்தச் சிமிழுக்குள் அடைக்க முற்படுவதைக் கண்டித்து, ‘சுவாமி விவேகானந்தா: ஓர் உண்மையான தேசபக்தரும் தீர்க்கதரிசியும்’ என்ற ஆய்வு நூலை ஆதாரங்களோடு வங்க மொழியில் எழுதியவர். இத்தகைய சிறப்புமிக்க பூபேந்திரரின் அறியப்படாத வாழ்க்கைப் பக்கங்களை இந்நூலின் மூலம் நமக்கு மீட்டெடுத்து வழங்கியுள்ள வழக்கறிஞர் கே.சுப்ரமணியன் நமது நன்றிக்குரியவர். விடுதலைப் போராட்டக் களத்தில் அறியாப் பருவத்திலிருந்து வாழ்நாளின் இறுதிவரை மக்கள் மத்தியில் தன்னலமற்றுச் செயல்பட்ட ஒரு மாவீரரை நாம் நினைவுகூர இந்நூல் வழிசெய்கிறது.
தலைவர்களை உருவாக்கிய தலைவர் பூபேந்திரநாத் தத்தா
கே.சுப்ரமணியன்
வெளியீடு: இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகம் -சரோஜினி பதிப்பகம், கோவை -18
விலை: ரூ.75
தொடர்புக்கு: 9486280307
