

சுந்தர ராமசாமியின் பிரபலமான சிறுகதைகளில் ஒன்று ‘கோவில் காளையும் உழவு மாடும்’. உழைப்பைச் சற்றும் விரும்பாத துறவு வாழ்க்கைக்கும், பிரதிபலன் கருதாத உழைப்புக்கும் நடுவில் ஒரு தத்துவப் போராட்டத்தை விவரிக்கும் கதை. ஊராரின் கேலிகளைப் பொருட்படுத்தாது, தன்னந்தனியராக ஒரு கிணற்றை வெட்டும் கிழவரின் கதை அது. சுந்தர ராமசாமியின் கதையில் இடம்பெற்ற அதுபோன்ற கதாநாயகர்கள் நம்மோடும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி ஒருவருக்கு இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளரான அமை மகாலிங்க நாயக், தன் உழைப்புக்குப் பரிசாக உள்ளூர் நிலக்கிழாரிடமிருந்து தரிசு நிலத்தைப் பெற்றவர்.
மலைப் பகுதியில் இருந்த அந்த நிலத்துக்குப் பாசன வசதிகள் எதுவும் இல்லாத நிலையில், பாரம்பரிய முறைப்படி சுரங்கம் தோண்டி நிலத்துக்குப் பாசன வசதியை உருவாக்கியுள்ளார் மகாலிங்க நாயக். நான்கு முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், ஐந்தாவது முயற்சியாக சுமார் 315 அடி சுரங்கம் தோண்டியபோது, அவரது விடாமுயற்சிக்குப் பலன் கிடைத்தது. தரிசு நிலம் இப்போது நூற்றுக்கணக்கான பாக்கு, முந்திரி, தென்னை மரங்களோடு பெரும் பண்ணையாகவே மாறியிருக்கிறது. ‘சிங்கிள் மேன் ஆர்மி’ என்று அழைக்கப்படும் மகாலிங்க நாயக், நடமாடும் ஓர் இலக்கியம்.