Last Updated : 14 Jun, 2014 12:49 PM

 

Published : 14 Jun 2014 12:49 PM
Last Updated : 14 Jun 2014 12:49 PM

குழந்தைகளின் முதல் நண்பன்: வாண்டுமாமா

குழந்தை எழுத்தாளர் வாண்டு மாமா உடல்நலக்குறைவு காரணமாக தன்னுடைய 90-வது வயதில் சென்னையில் வியாழக்கிழமை இரவு காலமானார்.

புகழ்பெற்ற தமிழ் சிறுவர் இலக்கிய படைப்பாளிகளில் மறக்க முடியாத பெயர் வாண்டுமாமா. இன்றைய குழந்தைகளின் குழந்தைப் பருவத்தை கணினியும், தொலைக்காட்சி பெட்டிகளும் களவாடிக்கொள்கின்றன. ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு வாண்டுமாமாவின் படைப்புகள்தான் அன்றைய குழந்தைகளின் மிட்டாய் உலகம். தன்னுடைய சித்திரக் கதைகளின் வழியாக குழந்தைகளின் மனதில் விதவிதமான வண்ணக் காட்சிகளை விரிய வைத்தவர்.

அவரது ஓநாய் கோட்டை, அதிசய நாய், ஷீலாவைக் காணோம், மேஜிக் மாலினி, மந்திரச் சலங்கை, துப்பறியும் புலி போன்ற படைப்புகள் குழந்தைகளுக்குள் திருவிழாவை நிகழ்த்தும் ஆற்றல் பெற்றவை. தாத்தா பாட்டிகளிடம், அம்மா அத்தைகளிடம் கதை கேட்டு, அந்த மாய உலகம் தங்களுக்குள் சுழற்றும் ரங்க ராட்டினங்களில் பயணிக்கும் குழந்தைகளுக்கு, அந்த நாட்களில் வாண்டுமாமாவின் படைப்புகள் எல்லாம் தித்திப்பு அலையடிக்கும் சர்க்கரைக் கடல்.

1925-ம் ஆண்டு பிறந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற இயற்பெயரைக் கொண்ட வாண்டுமாமா, தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் குழந்தை இலக்கியத்துக்காகவே அர்ப்பணித்தவர். தமிழ்ப் பத்திரிகை உலகில் ஏறத்தாழ 60 ஆண்டுகளாக கெளசிகன், விசாகன், சாந்தா மூர்த்தி என்கிற புனைப்பெயர்களிலும் எழுதிவந்துள்ளார்.

வானவில், கிண்கிணி போன்ற சிறார் இதழ் களில்தான் இவரது எழுத்துப் பயணம் ஆரம்பித்தது. பின்னாட்களில் கோகுலம், பூந்தளிர் ஆகிய இதழ்களிலும் தொடர்ந்தது. கோகுலம் இதழில் 20 ஆண்டுகள் துணை ஆசிரியராகவும் பூந்தளிர் இதழின் ஆசிரியராக வும் பணியாற்றியுள்ள வாண்டுமாமா தமிழக அரசினுடைய தமிழ் வளர்ச்சித் துறையின் பல விருதுகளைப் பெற்றவர்.

இவர் எழுதிய 160 புத்தகங்களும் குழந்தை இலக்கிய உலகில் பொக்கிஷங்களாகப் போற்றப்பட வேண்டியவை. இன்றைய அதிவேக எந்திர உலகிலிருந்து கொஞ்சம் விடுபட்டு… இளைப்பாற விரும்பும் பெரியவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தை மீட்டெடுக்க விரும்பினால் இவரது படைப்புலகில் மனதை நுழைக்கலாம்.

‘தி இந்து' தமிழ் நாளிதழ் தொடங்கிய நாளிலிருந்து வாண்டுமாமாவின் வாண்டு தேசம், ராஜாளித் தீவில் பாலு ஆகிய படக்கதைகள் வெளிவந்து கொண்டிருப்பதும், இதைத் தொடர்ந்து திகில் தோட்டம் படக்கதையும் வரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x