

திரையிசை தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’யில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவரும் பி.ஜி.எஸ்.மணியனின் சமீபத்திய நூல் இது. தமிழ்த் திரையிசைப் பாடல்களின் போக்குகளை மாற்றியமைத்த பழம்பெரும் இசையமைப்பாளர்கள் எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்பராமன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறாக மட்டுமின்றி, அவர்களுடன் பணியாற்றிய பாடகர்கள், பாடலாசிரியர்கள் என்று அன்றைய காலகட்டத்தின் திரையிசை வரலாறாகவும் இந்நூல் விளங்குகிறது.
பாய்ஸ் கம்பெனியில் நாடக நடிகராகத் தனது கலை வாழ்க்கையைத் தொடங்கிய எஸ்.வி.வெங்கட்ராமன் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி வெற்றிபெற்றாலும் விபத்தொன்றின் காரணமாக அவரால் நடிப்பைத் தொடர முடியவில்லை. ஏவி.எம். உடனான சந்திப்பு அவரது வாழ்வின் திருப்புமுனையானது. இசையமைப்பாளரானார். பி.யு.சின்னப்பா நடிப்பில் வெளிவந்த ‘கண்ணகி’யின் வெற்றி வெங்கட்ராமனையும் புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது. ஆனால், இரண்டாம் உலகப் போர் குறுக்கிட்டு அவருக்கு வாய்ப்பில்லாமல் செய்தது.
இந்த இடைவெளிக்குப் பிறகு அவர் இசையமைப்பில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி நடித்த ‘மீரா’ இந்திய அளவில் பெருவெற்றி பெற்றது. அதன் பிறகும் வெங்கட்ராமனுக்குத் தொடர்ச்சியாக நல்வாய்ப்புகள் அமையவில்லை. திரைவாய்ப்புகள் கிடைக்காத நிலையில், பக்திப் பாடல்களுக்கும் இசையமையத்தார். நாகூர் ஹனீபாவுக்காக அவர் இசையமைத்த ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ இன்னும் காற்றலையில் தவழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு கதவு மூடப்பட்டால், மற்றொரு கதவு ஏற்கெனவே திறந்திருக்கும் என்பதற்கு எஸ்.வி.வெங்கட்ராமனின் வாழ்க்கை ஒரு உதாரணம்.
ஆசியாவின் சிறந்த இசையமைப்பாளர் என்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதலாவது இசைமைப்பாளர் ராஜாமடம் ஜி.ராமநாதன். கர்னாடக சங்கீதத்தைக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டுசேர்த்தவர். ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பிரபல பாடல்களுக்கு இசையமைத்தவர். அண்ணன் சுந்தர பாகவதரின் கதாகாலட்சேபங்களில் ஹார்மோனியக் கலைஞராகத் தொடங்கியது அவரது இசை வாழ்க்கை. இந்நூலில், அதிக பக்கங்கள் அவருக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. ராமநாதனைக் குறித்த மணியனின் வார்த்தைகள், இசைக்காதலாய் மனமுருகி வெளிப்பட்டிருக்கின்றன.
இசைக் கச்சேரிகளில் கோலோச்சிக்கொண்டிருக்கும் பாரதியின் ‘சின்னஞ்சிறு கிளியே’, சி.ஆர்.சுப்பராமன் இசையமைத்த மெட்டு. பிறவி இசைமேதை. எதிர்பார்ப்புகளோடும் ஏமாற்றங்களோடும்தான் அவரது திரையுலகப் பயணமும் தொடங்கியது. 21 வயதில் எம்.கே.தியாகராஜ பாகவதர் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்த பிறகும், அது கைவிட்டுப்போனது. ஆனாலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாகவதர் சிறை மீண்ட பின், இருவரும் இணைந்தனர். 28 வயதில் அவரது வாழ்வு அகாலத்தில் முடிந்தாலும் தனக்குப் பின் ஒரு சிஷ்யப் பரம்பரையை உருவாக்கிச் சென்றிருப்பவர். அவர் எழுதிவைத்திருந்த இசைக் குறிப்புகளிலிருந்து உருவான ‘தேவதாஸ்’ பாடல்கள், காதலின் துயரத்தைத் தலைமுறைகளைத் தாண்டியும் கடத்திக்கொண்டிருக்கிறது.
படித்து முடித்த பிறகு திரையிசை மூவரின் பாடல்களையும் கேட்கத் தூண்டுவது இந்நூலின் வெற்றி. இசை ரசிகர்களுக்கு இதுவொரு காலப் பெட்டகம். இனிவரும் இசையமைப்பாளர்களுக்கு வழிகாட்டும் நூலாகவும் கொள்ளத்தக்கது.
திரை இசை மும்மூர்த்திகள்
பி.ஜி.எஸ்.மணியன்
வைகுந்த் பதிப்பகம்
நாகர்கோவில்
விலை: ரூ.325
தொடர்புக்கு: 94420 77268