Published : 16 Jan 2022 08:16 AM
Last Updated : 16 Jan 2022 08:16 AM

கோவில்பட்டி நால்வரும் இலக்கியப் பித்தும்

நெல்லை மா.கண்ணன்

சாரதி, உதயசங்கர் இருவரும் கல்லூரிப் படிப்பு முடிந்து, வேலை தேடும் பருவத்தில் இருந்தனர். ஒருநாள் சாயங்காலம் ஆறரை மணிக்கு ரஷ்ய இலக்கியவாதிகளான டால்ஸ்டாய், ஆண்டன் செகாவ், தஸ்தயேவ்ஸ்கி, துர்கனேவ் போன்றவர்களின் கதைகள் குறித்துத் தெருவில் நின்று இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எப்போதுமே அந்த இடத்தில் உட்கார்ந்து பேசுவது வழக்கம்தான். ஆனால், அன்று அப்படி முடிந்துவிடவில்லை. சாமத்தை நெருங்கிய நேரத்தில் பக்கத்து வீட்டு அக்காவும் எட்டிப்பார்த்துவிட்டுக் கதவைச் சாத்திவிட்டார். தெருக்கள் அடங்கின.

அப்போதும் இருவருக்குள் ‘வெண்ணிற இரவுகள்’ நாவலைப் பற்றிய விவாதம் சூடுபிடித்தது. கடையைப் பூட்டிவிட்டு நடுச்சாமத்தில் வரும் கடையாட்கள் சிலர் இவர்களைப் பார்த்தும் பாராமலும் கடந்து சென்றார்கள். இரவுக் காட்சி சினிமா பார்த்துவிட்டு வந்தவர்கள் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே போனார்கள். பொழுதும் விடிந்தது, பக்கத்து வீட்டு அக்கா வாசல் தெளித்துக் கோலம் போட கதவைத் திறந்தபோதும், நேற்று இருந்த இடத்திலேயே இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் வாளியைக் கீழே போட்டுவிட்டு “யக்கா” என்று சத்தம்போட்டுப் பதற்றத்துடன் உள்ளே கூப்பிட்டார். “இங்கே பாருங்க. நேற்று சாயங்காலம் ஆறு மணிக்குப் பேசத் தொடங்குனாங்க. இந்தா விடிஞ்சிட்டு. இப்பவும் பேசிட்டு இருக்காங்க. பேய் ஏதாவது பிடிச்சிட்டுதா? என்னனு வந்து கேளுங்க....” என்று கேட்டார். உதயசங்கரின் அம்மா ஓடிவந்து பார்த்தார். “அதுக அப்படித்தான் பேசிக்கிட்டு இருக்கும். ரெண்டும் லூசுக, விடு” என்றபடியே சாவதானமாக அவர் போய்விட்டார். இந்த நிகழ்வை நேற்று நடந்ததுபோல் நெகிழ்ச்சியோடு விவரிக்கிறார் சாரதி. தற்போது ஊரக வளர்ச்சித் துறையில் வேலை செய்து பணி ஓய்வுபெற்றுவிட்டார். இவரது ‘கண்ணாடியுள் விரியும் ஸ்தெப்பி வெளி’ அண்மையில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு.

பால்யகாலச் சேக்காளிகளான எழுத்தாளர்கள் உதயசங்கர், நாறும்பூநாதன், மாரீஸ், சாரதி நால்வரும் 1980-களில் இப்படிப் பல விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள். ஒரு நல்ல திரைப்படத்திற்காக, முகிழும் காதலின் தருணத்துக்காக, ஒரு நாவலுக்காக, புதிய சொற்களுக்காக, நட்புக்காக அந்திப் பொழுதிலிருந்து கோவில்பட்டி காந்தி மைதானத்தில் இவர்கள் காத்திருப்பது வழக்கம். விடியவிடியப் பேசிப்பேசியே அக்காலத்தைக் கடந்த, அவர்களின் பேசித் தீர்க்கப்படாத உரையாடல் இன்னும் கோவில்பட்டியில் சுழன்றுகொண்டுள்ளது.

வானம் பார்த்த கரிசல் பூமியான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளுமைகளைத் தந்த ஊர். கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் எனத் தமிழின் மூத்த படைப்பாளிகள் தொடங்கி பூமணி, சோ.தர்மன், கோணங்கி, தேவதச்சன், முருகபூபதி என்று தொடர்ந்து சபரிநாதன், கருத்தடையான், ஆகாசமூர்த்தி என இளம் படைப்பாளிகள் வரை ஒரு பெரும் பட்டாளமே கோவில்பட்டியை மையமாகக்கொண்டு இயங்கிவருகிறது.

கோவில்பட்டியில் சோவியத் இலக்கியப் புத்தகங்கள் புழக்கத்தில் இருந்ததால் வெவ்வேறு பார்வையுடைய நவீன எழுத்தாளர்கள் உருவானார்கள். இந்தச் சூழலில்தான் சிறு வயதிலே இவர்களால் ‘வெண்ணிற இரவுகள்’ கதையை விவாதிக்க முடிந்தது. இவர்கள் இலக்கிய உலகத்துக்குள் நுழைந்த காலத்தில் தமிழின் முக்கிய நாவலான கோபல்ல கிராமத்தையும், ‘கதவு’ சிறுகதைத் தொகுப்பையும் கையில் வைத்துக்கொண்டு கி.ரா. இவர்களை வரவேற்றார். எழுத்தாளர் பூமணி ‘பிறகு’ நாவலையும் ‘வயிறுகள்’ சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டிருந்தார். இப்படியாகக் கோவில்பட்டியில் முக்கிய எழுத்தாளர்கள் புதிய படைப்புகளோடு இருந்தார்கள். வாசகர்களோ இளம் எழுத்தாளர்களோ உருவாவதற்கான களம் தயாராகவே இருந்தது. கோவில்பட்டியின் அரசியல் - இலக்கியம் ஈடுபாடு குறித்த வரலாற்றுப் பின்னணி இது. இப்படியாக இந்த நான்கு சேக்காளிகளும் எழுத்தாளர் புதுமைப்பித்தனின் கதைகளில் தங்களைத் தொலைத்தார்கள். புதுக்கவிதைக்குள் மூழ்கி எழுந்தார்கள். இதனால், சுலபமாக நவீன இலக்கியம் சார்ந்த பல்வேறு படைப்புகளை மட்டுமல்ல, வெவ்வேறு பார்வைகளையும் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார் எழுத்தாளர் உதயசங்கர். தென்னக ரயில்வேயில் நிலைய அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் இவர். குறிப்பிடத்தக்க பல சிறுகதைகள், சிறார் படைப்புகளை எழுதியுள்ளார். சிறார் இலக்கியத்துக்காக விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.

துணுக்கில் தொடங்கிய வாசிப்பு

1970-களில், பதின்பருவத்தில் உதயசங்கர், நாறும்பூநாதன், மாரீஸ், சாரதி ஆகிய நால்வரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாமல் அடுத்தடுத்த தெருவில் வசித்துவந்தனர். உதயசங்கரின் அம்மாவழித் தாத்தா கன்னி விநாயகர் கோயிலில் திருவாதிரைக்கு இசைக் கச்சேரி ஏற்பாடு செய்வார். இரவில் இசைக் கச்சேரி நடக்கும்பொழுது புழுதி பறக்க, டவுசர் போட்டு விளையாடியிருக்கிறார் உதயசங்கர். சாரதியும் அந்தக் கூட்டத்தில் இருந்திருக்கலாம். பிரபல காலண்டர் ஓவியர் சுப்பையாவின் மகன் மாரீஸ் இசைக் கச்சேரி நடக்கும் அந்த மைதானத்தின் ஒரு மூலையில் உட்கார்ந்து சிலேட்டில் பிள்ளையார் படம் வரைந்து கொடுத்து ஆச்சரியப்படுத்திக்கொண்டிருந்தார். ஒடுங்கிய சந்தில் ஓட்டு வீட்டில் உதயசங்கர் குடியிருந்தார். அப்பா மில் தொழிலாளி. பசித்தபோது மட்டுமல்ல நினைத்தபோதுகூட சாப்பிட முடியாது. தீப்பெட்டிக் கட்டையின் கரிமருந்து வாசனையையும் மூட்டைபூச்சி கடியையும் மறக்க எப்போதும் நண்பர்களுடன் இருக்கவே விரும்பினார் உதயசங்கர்.

நண்பர்கள் சந்திப்பு

கண்டிப்பான தன் தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு குடும்பத்துடன் கழுகுமலையில் இருந்து குடிபெயர்ந்து உதயசங்கரின் பக்கத்துத் தெருவுக்கு வந்தார் நாறும்பூநாதன். திருநெல்வேலி என்கிற ஊரின் பிரதிநிதியாகவும் கதைசொல்லல், பேச்சால் அடையாளம் பெற்றவராகவும் இருக்கிறார் நாறும்பூநாதன். ‘கனவில் உதிர்ந்த பூ’, ‘தட்டச்சுக் கால கனவுகள்’ உள்ளிட்ட சிறுகதை, கட்டுரைத் தொகுப்புகளை இவர் எழுதியுள்ளார்.

உதயசங்கர், சாரதி இருவரும் நாறும்பூநாதனுடன் எட்டாம் வகுப்பில் ஹாக்கி விளையாடியபோதுதான் அறிமுகமானார்கள். அடுத்தடுத்த தெருவான இவர்கள் எல்லோரையும் இணைத்தது நூலகமும் வாசிப்பும். நாறும்பூநாதனுடைய அண்ணன் ஆர்.எஸ். மணி இடதுசாரி இயக்கத்தில் இருந்ததால் சோவியத் சிறுவர் இதழ்கள், தாமரை, செம்மலர் போன்ற இதழ்கள் அவரது வீட்டிற்கு வந்தன. அவற்றில் சில புத்தகங்களை அவ்வப்போது நண்பர்களுக்குக் படிக்கக் கொடுப்பார். இவரும் இதழ்களைப் படித்துவிட்டு நண்பர்கள் சந்திப்பின்போது தன்னுடைய சொந்த சரக்கையும் சேர்த்துக் கதைகளைச் சொல்லி அசத்துவார். அந்தக் கதைகளைக் கேட்பதற்காவே உதயசங்கர் ஏங்கியிருக்கிறார். சாரதியும் ஒருகணம்கூட அவரை விட்டுப் பிரியமாட்டார். இப்படியாக அவர்களுக்குள் ஒரு பிணைப்பைக் காலம் ஏற்படுத்திக் கொடுத்தது.

மாரீஸ் வீட்டுக் கொலுவுக்கு உதயசங்கரும் சாரதியும் சுண்டல் சாப்பிடப் போகும்போது நெருக்கமானார்கள். மாரீஸின் குடும்பத்தினர் காலண்டர் ஓவியர்கள். ஓவியரான இவரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு அட்டைப்படங்கள் வரைந்திருக்கிறார். மாரீஸ் குடும்பத்தின் சாரதா ஒளிக்கூடத்துக்கு வராத இலக்கியவாதிகளே இல்லை என்று சொல்லலாம். கி. ராஜநாராயணன் மாரீஸைத் தன்னுடைய ‘இன்னொரு கை’ என்று செல்லமாக எல்லோரிடமும் சொல்லுவார். தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் கோவில்பட்டியில் அனைவரையும் சந்திக்க இணைப்பு மையமாகத் திகழ்ந்தவர் மாரீஸ்தான். “பூமணி வந்திருக்கிறார், கி.ரா. வந்திருக்கிறார்” என்று இவர் தகவல் தெரிவிப்பார். உடனே சாரதா ஒளிக்கூடத்தில் சபை கூடிவிடும். இவர்களது பேச்சுக்கு இடையேதான் கோவில்பட்டி விடியும்.

கவனம் ஈர்த்த கையெழுத்துப் பத்திரிகைகள்

இந்தியாவில் நெருக்கடி நிலை முடிந்த நேரத்தில் இவர்கள் கல்லூரி வாழ்க்கைக்குள் நுழைந்தனர். மாரீஸ் ‘ஆம்லெட்’ என்கிற ஒரு கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினார். ‘ஆம்லெட்’ கையெழுத்துப் பத்திரிகைக்குப் போட்டியாகக் கல்லூரி முதல் வருடம் படித்தபோது நாறும்பூநாதன், உதயசங்கர், சாரதி இணைந்து ‘மொட்டுகள்’ கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார்கள். நாறும்பூநாதன் தன்னுடைய அழகான கையெழுத்தால் பத்திரிகையை உருவாக்கினார். பேராசிரியர்களும் வாங்கிப் படித்ததால், இவர்களுக்கு எழுத்தின் மீதான பித்து ஏறியது. அதில் எழுதுவதும், படம் வரைவதும் நாறும்பூநாதன்தான். உதயங்கர் கதை, கவிதை எழுதுவார். சில நேரம் சாரதியும் எழுதுவார். முத்துசாமி நகைச்சுவைத் துணுக்கு எழுதுவார். ஐந்து இதழ்கள் வெளிவந்தன. அதில் ஒரு கையெழுத்துப் பத்திரிகையில் கோணங்கியின் தொடக்கக்காலக் கதையான ‘கருப்பு ரயில்’ வெளியாகியிருந்தது. அந்த நேரத்தில் ‘மொட்டுகள்’ இதழ் நாறும்பூநாதன் மூலம் இடதுசாரித் தோழர்கள் பால்வண்ணம், ஆர்.எஸ். மணி, ‘சுவடி’ பாலு போன்றவர்களிடமும் மாரீஸ் மூலமாகத் தீவிர இலக்கியவாதிகளான தேவதச்சன், கௌரிசங்கர், துரை, அப்பாஸ் ஆகியோரிடமும் சென்றுசேர்ந்தது.

ஒரு பக்கம் இடதுசாரி இயக்கத் தோழர்கள், இன்னொரு பக்கம் தீவிர இலக்கியம் பேசியவர்கள், மற்ற கோவில்பட்டி அமைப்புகள் எனப் பல வழிகளில் இருந்து கருத்துகள், விவாதங்கள் இவர்களை வந்தடைந்தன. இப்படி வேறு எந்த ஊரிலாவது, யாருக்கும் கிடைத்திருக்குமா என்பது தெரியவில்லை. மற்றவர்கள் தேடிப்போய் அலைந்து திரிந்து தெரிந்துகொண்டதை, இவர்கள் எளிமையாகப் பெற்றுக்கொண்டார்கள். இன்றும் கோவில்பட்டி தெருக் களிலும், தேநீர்க் கடைகளிலும், காந்தி மைதானத்து இருளிலும், எட்டையபுரத்துச் சாலையிலும், தொடர்வண்டி நிலையத்திலும், தேநீர், சிகரெட் புகைமூட்டத்துக்கு நடுவே சேக்காளிகளும், இளம் எழுத்தாளர்களும் தங்களது படைப்புகள் குறித்துப் பேசுவதைக் கேட்க அன்றைக்கு இருந்த அதே ஆர்வத்துடன் இவர்கள் காத்திருக்கிறார்கள். l

நெல்லை மா. கண்ணன், பத்திரிகையாளர், தொடர்புக்கு: mkannanjournalist@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x