

பி.ஏ. வரலாறுபடிக்கும் மாணவர்களுக்காகப் பேராசிரியர் கே.கே.பிள்ளை (கோலப்ப கனகசபாபதி பிள்ளை) ‘தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்’ என்றொரு நூலை எழுதினார். நவம்பர் 1972-ல் நூலின் முதல் பதிப்பைத் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்டது. நூலின் அட்டையில் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் முத்திரை மட்டும் இடம்பெற்றுள்ளது. எவ்விதப் படங்களும் இல்லாத கறுப்பு வெள்ளையில் முதல் பதிப்பின் அட்டை அமைந்துள்ளது. இதே நிலையில் அடுத்த இரு பதிப்புகளை (1975, 1977) த.பா.நி இந்நூலை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்காக எழுதப்பட்ட ஒரு பாடநூல், அரசியல் சதுரங்க விளையாட்டுக்குள் சிக்கிக்கொண்டு எப்படியெல்லாம் தன் உருவத்தைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இந்நூல் ஓர் எடுத்துக்காட்டு.
1981-ல் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கே.கே.பிள்ளை இந்நூலை திருத்தி வெளியிட்ட நான்காவது பதிப்பில், முந்தைய பதிப்பில் இருந்த இரா.நெடுஞ்செழியனின் அணிந்துரை நீக்கப்பட்டு, எம்.ஜி.ஆர். அமைச்சரவையின் கல்வித் துறை அமைச்சர் செ.அரங்கநாயகத்தின் அணிந்துரை சேர்க்கப்பட்டது. இந்நான்கு பதிப்புகளின் அட்டையும் எந்தவித மாற்றத்துக்கும் உள்ளாகவில்லை. 1981 முதல் 2000 வரை இந்நூல் மீள்பதிப்பு செய்யப்படவில்லை. கே.கே.பிள்ளை 26 செப்டம்பர் 1981-ல் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2000-ல் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட இந்நூலின் மறுபதிப்புக்கு அணிந்துரை எழுதியவர் மு.தமிழ்க்குடிமகன். உ.த.நி. இயக்குநராக இருந்த ச.சு.இராமர் இளங்கோ விரிவான பதிப்புரை ஒன்றை எழுதியுள்ளார். த.பா.நிறுவனத்தின் பதிப்புகளில் இருந்த இரு கல்வி அமைச்சர்களின் அணிந்துரைகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், முந்தைய பதிப்புகளின் விவரங்கள் பதிப்புரையில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் மீண்டும் 2002-ல் மறுபதிப்பு செய்யப்பட்டது. அட்டை மாறிவிட்டது. தமிழ்நாடு வரைபடத்தைப் பின்னணியாகக் கொண்டு தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் அட்டையில் இடம்பெற்றுள்ளது. அப்போது கல்வித் துறை அமைச்சராக இருந்த மு.தம்பிதுரை அணிந்துரை எழுதியிருக்கிறார். இதில் கவனிக்க வேண்டியது, ஐந்தாம் பதிப்பில் இடம்பெற்றிருந்த மு.தமிழ்க்குடிமகனின் அணிந்துரை நீக்கப்படவில்லை.
உ.த.நி. இயக்குநராக கோ.விசயராகவன் இருந்த காலத்தில் (2012-2021) இந்நூல் பல பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இக்காலத்தில் (12-ம் பதிப்பு, 2016) நூலின் அட்டை மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்குப் பிடித்த பச்சை நிறத்துக்கு மாறியிருக்கிறது. முகப்பில் தமிழ்நாடு அரசின் முத்திரை கூடுதலாக இடம்பெற்றுள்ளது. மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் அட்டையில் இடம்பெற்றிருந்தாலும் புத்தகத்தின் முன்னும் பின்னுமாகக் காட்சியளிக்கும் அடர் பச்சைநிறம், அதிமுக அரசின் தேர்தல் அறிக்கையையே நினைவூட்டுகிறது. இப்பதிப்பில் இதற்கு முன்னர் எழுதப்பட்ட பதிப்புரைகளும் அணிந்துரைகளும் நீக்கப்பட்டு, இயக்குநர் கோ.விசயராகவனின் அணிந்துரை மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்த அணிந்துரையில் தமிழ்நாட்டின் அன்றைய முதல்வர் முதல் செய்தித் துறைச் செயலர்வரை இரு பத்திகள் நன்றியுரைக்கு மட்டும். இத்தன்மை இதற்கு முன்பு எந்தப் பதிப்பிலும் இல்லாத ஒன்று.
தற்போது ஆட்சி மாறியிருக்கிறது; உ.த.நி. இயக்குநர் மாறியிருக்கிறார். ‘தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்’ நூல் புதிய பதிப்பை (அக்டோபர் 2021) கண்டிருக்கிறது. கே.கே.பிள்ளை தற்போது ஆளும் கட்சிக்கேற்ப சட்டையை மாற்றிக்கொண்டிருக்கிறார். அதே மாமல்லபுரம் கடற்கரைக் கோயில். பின்னணியில் கறுப்பும் சிவப்பும் கலந்த நிறம்; செஞ்சூரியன் எழுந்து வருகிறான். இது ஆளும் திமுக அரசைத் திருப்திப்படுத்தும் செயலாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. முன்னாள் இயக்குநர் செய்த அதே தவறைத்தான் புதிய இயக்குநரும் செய்திருக்கிறார். கூடவே, புதிய அணிந்துரை. அணிந்துரையில் முன்னாள் இயக்குநரின் அதே பாணியை இவரும் பின்பற்றி, நூலுக்கு மீண்டும் அரசியல் சாயம் பூசியுள்ளார். என் புரிதலில் அதிக அணிந்துரைகளைக் கண்ட நூல் இதுவாகத்தான் இருக்கும். கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலையைப் பின்னணியாகக் கொண்டு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் இந்நூலுக்குப் புதிய வண்ண அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனமும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் தமிழக அரசின் கீழ் இயங்கும் அமைப்புகள். த.பா.நி., அரசியல் சார்பற்று நூல்களை அணுகும்போது உ.த.நி. மட்டும் அரசியல் சார்புடன் நூல்களைப் பதிப்பிப்பதன் காரணம் விளங்கவில்லை. கே.கே.பிள்ளைக்கு மட்டுமல்ல, மு.சண்முகம் பிள்ளையின் தமிழ்-தமிழ் அகரமுதலிக்கும் இந்நிலைதான். த.பா.நி. பதிப்பு, கறுப்பு நிற அட்டை; உ.த.நி. பதிப்பு, பச்சை நிறம். இதுபோன்று பல உதாரணங்களைக் கூற முடியும்.
மாறி மாறி இந்நூலுக்கு அரசியல் சாயம் பூசிக்கொண்டிருக்கும் அதிகாரிகள், இதுவரை கே.கே.பிள்ளையின் சிறு புகைப்படத்தைக்கூட நூலில் இடம்பெறச் செய்யவில்லை. அவரைப் பற்றிய எந்தக் குறிப்பும் நூலில் இல்லை. இவ்வளவு ஏன், அவரது முழுப் பெயர்கூட இந்நூலை வாசிப்பவர்களுக்குத் தெரியாது. கே.கே.பிள்ளையின் புகைப்படத்துடன் அவரைப் பற்றிய குறிப்புகளையும் சேர்த்துத் தரமான பதிப்பாகக் குறைந்த விலையில் மாணவர்களிடம் இந்நூலைக் கொண்டுசேர்க்க வேண்டும். இதற்கு உதவுவதுதான் உ.த.நி. போன்ற நிறுவனங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.
- சுப்பிரமணி இரமேஷ், ‘தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: ramesh5480@gmail.com