

தமிழின் நெடிய இலக்கிய மரபு தொன்மைக் காலந்தொட்டே கதை சொல்லிக்கொண்டுவருகிறது என்றாலும் சிறுகதையை மேற்கத்திய மரபிடமிருந்தே கடன்வாங்கியது. வடிவத்தைக் கடன் வாங்கினாலும் நவீன நாவல், நவீனக் கவிதையைவிட உலக இலக்கியத்துக்கு இணையான சாதனைகளைத் தமிழ்ச் சிறுகதைகளே படைத்திருக்கின்றன என்று பலரும் கருதுகிறார்கள்.
ஆயினும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்படுவதில் ஒரு சதவீதம்கூட தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்படுவதில்லை என்ற குறை இருக்கவே செய்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொள்ளப்படும் சில முயற்சிகள் சற்றே ஆறுதல் அளிக்கின்றன. அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்திருப்பதுதான் ‘த கிரேட்டஸ்ட் தமிழ் ஸ்டோரீஸ் எவெர் டோல்டு’. எஸ்.வி.வி., பாரதியார், கல்கியில் தொடங்கி எஸ்.ராமகிருஷ்ணன், எஸ்.தேன்மொழி வரை 30 எழுத்தாளர்களின் முக்கியமான சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.
இந்தக் கதைகளை மொழிபெயர்த்த 11 மொழிபெயர்ப்பாளர்களில் ஏழு பேர் பெண்கள் என்பது கூடுதல் சிறப்பு. ஆங்கிலத்திலும் இந்தக் கதைகள் ஈர்க்கின்றன. இந்தப் புத்தகத்தை சுஜாதா விஜயராகவனும் மினி கிருஷ்ணனும் நேர்த்தியாகத் தொகுத்திருக்கிறார்கள். எனினும் விடுபாடுகள் குறித்தும் புத்தகத்தின் தலைப்பு குறித்தும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஏனெனில், இந்த நூலில் உள்ளவற்றைத் தாண்டியும் ஏராளமான சிறந்த தமிழ்க் கதைகளும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள் அல்லவா. ‘எமது தேர்வு’, ‘எமது விருப்பத்துக்குரிய கதைகள்’ என்பதுபோல் தலைப்பு வைத்திருக்கலாம்.
-மணி
த கிரேட்டஸ்ட் தமிழ் ஸ்டோரீஸ் எவெர் டோல்டு
தெரிவும் தொகுப்பும்: சுஜாதா விஜயராகவன்