Published : 08 Jan 2022 03:37 PM
Last Updated : 08 Jan 2022 03:37 PM

360: எல்லோருக்கும் ஆபிரகாம் பண்டிதர்!

தமிழிசைக்குச் செய்யப்பட்டிருக்கும் மிக முக்கியமான பங்களிப்புகளுள் ஒன்று ஆபிரகாம் பண்டிதரின் (1859-1919) ‘கருணாமிர்த சாகரத் திரட்டு’. இந்த நூலில் 95 தமிழிசைப் பாடல்கள் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. இந்த நூலை எல்லோருக்கும் கொண்டுசெல்லும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான் ஃபவுண்டேஷனும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கும் இணைந்து ‘தமிழிசையை எளிதாகக் கற்றுக் கொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் பதிப்பித்திருக்கிறார்கள். இந்த நூலை சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டிருக்கிறார்.

நூலைப் பெறுவதற்கான விவரங்களுக்கு இந்த இணையதளத்துக்குச் செல்லவும்: https://www.karunamirthasagaram.org/karuna-2022.php

தொல்காப்பியத்துக்குத் தனி இணைய தளம்

உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் தொல்காப்பியம் தொடர்பான தனி இணையதளத்தைத் தொடங்கி நடத்திவருகிறார் தமிழ்ப் பேராசிரியர் மு.இளங்கோவன். தொல்காப்பியம் முழுவதையும் அதிகாரம், இயல்கள் வாரியாகத் தனித்தனி வலைப்பக்கங்களில் விளக்கத்துடன் படிக்கும் வகையில் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியப் பதிப்புகள், தொல்காப்பிய அறிஞர்கள், அதை மொழிபெயர்த்தவர்கள் பற்றிய தகவல் சுரங்கமாக அமைந்துள்ள இத்தளத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, தொல்காப்பியம் பற்றிய தமிழறிஞர்களின் காணொளிகள்.

தொல்காப்பியம் குறித்து இரா.இளங்குமரனார் ஆற்றிய உரைகளும் அளித்த நேர்காணல்களும் இத்தளத்தின் வழியே நமக்குக் கிடைத்திருக்கும் அரிய ஆவணங்கள். கு.வெ.பாலசுப்பிரமணியன், ஊரன் அடிகளார், பொ.வேல்சாமி, ப.அருளி, கு.சிவமணி, கலியபெருமாள், சரசுவதி வேணுகோபால், தெ.முருகசாமி, பா.வளன் அரசு, எஸ்.ஆரோக்கியநாதன், ந.இரா.சென்னியப்பனார், கோ.விசயவேணுகோபால், கா.நாகராசன், இராச.கலைவாணி என்று தமிழறிஞர்கள் பலரின் தொல்காப்பிய உரைகள் காணொளியாக இத்தளத்தில் பார்க்கக் கிடைக்கின்றன. வயது முதிர்ந்த தமிழறிஞர்களின் தொல்காப்பிய ஆய்வுரைகளைக் காட்சி வடிவில் ஆவணப்படுத்தி வரும் பேராசிரியர் மு.இளங்கோவனின் பணிகள் பாராட்டுக்குரியவை.

இணையதள முகவரி: https://tholkappiyam.org/

நிலாகண்ணனும் புத்தர்சிலையும்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நிலாகண்ணன். சென்னையில் கார் ஓட்டுநராக வேலை செய்துவருகிறார். ‘பியானோவின் நறும்புகை’ என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்பை ‘படைப்பு பதிப்பகம்’ சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. ‘என் பெயரை உச்சரித்ததும்/ நீ எடுத்துக்கொண்ட மெளனம்/ சிறிய புத்தர்சிலை வைக்குமளவு இருந்தது’ என்பது போன்ற சிலாகிக்க வைக்கும் வரிகளைக் கொண்ட தொகுப்பு இது. கவிதை உலகுக்கு நிலாகண்ணன் ஒரு நல்வரவு!

விளக்கு விழா

அமெரிக்கத் தமிழர்களின் ‘விளக்கு இலக்கிய அமைப்பு’ வழங்கும் ‘புதுமைப்பித்தன் நினைவு விருதுகள்-2020’ விருது வழங்கும் விழா இன்று மதுரையில் நடைபெறுகிறது. கவிஞர் சுகிர்தராணிக்கும் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கத்துக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விழாவில் சுகிர்தராணியின் மொத்தக் கவிதைகளின் தொகுப்பாகிய ‘சுகிர்தராணி கவிதை’களும், ‘நீர் வளர் ஆம்பல்’ என்ற புதிய கவிதைத் தொகுப்பும் ‘காலச்சுவடு’ வெளியீடாக வெளியிடப்படுகின்றன. இந்நிகழ்வில் ரவிசுப்பிரமணியன், அ.வெற்றிவேல், லிபி ஆரண்யா, பிரேமா ரேவதி, பா.ஆனந்தகுமார், அழகரசன், மருதன், ஜெ.பாலசுப்பிரமணியம், மு.சுந்தரமூர்த்தி, பி.கே.சிவகுமார் உள்ளிட்ட முக்கியமான ஆளுமைகள் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள்.

விழா நடைபெறும் இடம்: ஹோட்டல் தி மெட்ரோபோல், மதுரை. நேரம்: மாலை 5.30.

சிறந்த மொழிபெயர்ப்புகளுக்கான பரிசுப் போட்டி

கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவாக ‘காக்கைச் சிறகினிலே’ இதழ் முன்னெடுக்கும் இலக்கியப் பரிசுப் போட்டி ஏழாவது ஆண்டாக இந்த ஆண்டிலும் தொடர்கிறது. இம்முறை 2000 முதல் 2020 டிசம்பர் வரை பிறமொழிகளிலிருந்து தமிழில் முதற்பதிப்பாக வெளிவந்த மொழிபெயர்ப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு நூல்களுக்குத் தலா ரூ.10,000; ஊக்கப்பரிசாக ஒரு நூலுக்கு ரூ.5,000; பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூலின் வெளியீட்டாளருக்கு ரூ.5,000; மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்குப் பங்களிக்கும் தமிழ்ச் சிற்றிதழ் ஒன்றுக்கு ரூ.5,000 என பல்வேறு பிரிவுகளில் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

போட்டிக்கு நூல்களை அனுப்பக் கடைசி நாள்: ஜனவரி 31, 2022. தொடர்புக்கு: kipian2022kaakkaicirakinile@gmail.com

துப்பாக்கிகளுக்கு நடுவே…

ஈழத்து இளந்தலைமுறை படைப்பாளிகளில் முக்கியமானவர்களில் ஒருவர் தீபச்செல்வன். இவரது ‘நடுகல்’ நாவல் (2018) சிங்களத்திலும் வெளியாகியிருக்கிறது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. தீபச்செல்வனின் அடுத்த நாவல் ‘பயங்கரவாதி’ டிஸ்கவரி புக் பேலஸால் வெளியிடப்பட்டிருக்கிறது. ராணுவம் சூழ்ந்த நகரத்தில், துப்பாக்கிகளுக்கு இடையில் இருந்துகொண்டு இந்த நாவலை எழுதியதாகக் கூறுகிறார் தீபச்செல்வன். இன அழிப்பில் தப்பும் ஒரு சிறுவன் கல்லூரி சென்று அங்கே ராணுவத்துக்கு எதிராகக் களத்தில் மேற்கொள்ளும் போராட்டம்தான் ‘பயங்கரவாதி’ நாவலின் கதை. இந்த நாவல் குறித்து இப்போதே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x