Last Updated : 01 Jan, 2022 07:36 AM

 

Published : 01 Jan 2022 07:36 AM
Last Updated : 01 Jan 2022 07:36 AM

முரண்பாடுகளின் போராட்டமும் ஓர் ஆயுதமும்

சிந்துவெளி நாகரிகம் நம் கவனத்தில் பட ஆரம்பித்து நூறாண்டுகள் கடந்துவிட்டன. இந்த நூறாண்டுகளில் சிந்துவெளிப் பண்பாட்டுக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் இடையேயுள்ள உறவு பற்றிய ஆய்வுகளும் மிகத் தீவிரமாகக் களத்தில் முன்நிற்கின்றன. வடமொழியும் அதன் வேதங்களும் ஆட்சி செலுத்தும் முன்பே இந்த மண்ணில் நிலவிய நாகரிகம் தமிழர்களின் நாகரிகம் என்பதை நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இவை அனைத்துக்கும் மேலாக சமீபத்திய கீழடி ஆய்வுகள் இதுவரை பொதுவெளியில் கேட்டுவந்த எதிர்ப்புக் குரல்களை வாயடைக்கச் செய்துள்ளன.

தொல்காப்பியத்திலிருந்து திருக்குறள் வரை எல்லாமே வடமொழியிலிருந்து வந்த மொழிபெயர்ப்புகள் என்று குரலெழும்பிவரும் இத்தருணத்தில் தமிழகத்துக்கே தனித்துவமாகத் திகழும் சைவ சமயத்தை ஒரு புதிய பார்வையுடன் அறிமுகம் செய்ய முனைந்திருக்கும் ‘சிகரம்’ ச. செந்தில்நாதன் தனது நூலில் எதிர்வாதங்களின் செல்லாத் தன்மையை அடுக்கடுக்காகத் தோலுரிக்கிறார்.

சமூகத்தில் மனிதர்கள் உருவாக்கிய முரண்பாட்டை மனிதர்களால் அகற்ற முடியும் என்ற நம்பிக்கை எழும்போது, சமயம் சார்ந்த நம்பிக்கையிலும் அவர்களால் குறுக்கிட முடியும். ஏனெனில் அந்த நம்பிக்கையும்கூட மனிதர்கள் உருவாக்கியதே. மனித முரண்பாடுகள் அவற்றிலும் பிரதிபலிக்கின்றன. இந்தப் பின்னணியில் ஒரு பண்பாடு மற்றொரு பண்பாட்டைத் தன் ஆதிக்கத்துக்கு உட்படுத்த முனையும்போது ஆதிக்கத்துக்குள் தள்ளப்படும் பண்பாடு அதனோடு முரண்படுகிறது. இதைத்தான் சித்தர்கள் காலம் தொடங்கி, திருமந்திரம் உள்ளிட்ட சைவ சித்தாந்த நூல்கள் வழியாக, சமயச் சழக்கர்களை வசைபாடிய வள்ளலார் வரையிலான எழுத்துக்கள் தெரிவிக்கின்றன.

தொல்காப்பியர் காலத்திலேயே ஆரியம் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிட்டது என்ற வரலாற்று உண்மையை எவரும் மறுக்கவில்லை. ஆனால் ஆரியம்தான், அதன் வேத மரபுதான் தமிழரின் கடவுள், கடவுள் தத்துவம், வேதம் என்பதுதான் இங்கே மறுக்கப்படுகிறது. இவ்வகையில் ஆரியர்களின் வைதிக மதமும் தமிழர் மதமும் முரண்படுகின்றன. வடமொழியும் தமிழும் ஆதிசங்கரரின் அத்வைதமும் சைவசித்தாந்தமும் கீதையும் குறளும் விவேகானந்தரும் வள்ளலாரும் இத்தகைய முரண்பாடுகளை வெளிச்சமிடுகின்றன/ வெளிச்சமிடுகிறார்கள். நற்றமிழால் பாடிய ஞானசம்பந்தரும் சுந்தரரும் கோலோச்சிய ஆலயங்கள் இன்று முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இருக்கின்றன. ஆலயத்தின் கருவறைக்குள் நுழைய முடியாமல் தவிக்கும் ஒடுக்கப்பட்ட தமிழுக்கும் தமிழருக்கும் இடையேயுள்ள முரண்பாட்டினையும் இந்நூல் விதந்தோதுகிறது.

வேதமரபு மேல்படிகளில் ஏறிப் போனபிறகு, தமிழ் சைவம் தான் தூங்கியதை, தூங்க வைக்கப்பட்டதை உணர்ந்துகொண்ட காலகட்டத்தில்தான் சைவசித்தாந்த சாத்திர நூல்கள் தோன்றின. இவ்வாறு சைவசித்தாந்தத்துக்கு இலக்கணம் வகுக்கப்பட்டபோதிலும் தமிழ் சைவம் மேல்தட்டு மக்களிடமே நின்றுவிட்டது. சாதாரண மனிதர்களை அது எட்டவில்லை. அவ்வாறே சமூகத்தில் இருந்த பிராமணிய செல்வாக்கையும் அதனால் தகர்க்க முடியவில்லை.

இவ்வாறு சைவசித்தாந்தம் முரண்பட்டு நடத்திவந்த உள்போராட்டத்தைத் தொடர்ந்து அதில் நவீன கருத்தியலுக்கு அடித்தளமிட்டார் வள்ளலார். அவர் வழியை அங்கீகரித்த மறைமலை அடிகளால் இதற்கென ஓர் இயக்கமும் காண முடிந்தது. தமிழ் மண் இவ்வாறு பல்வேறு வகையான ஆதிக்கங்களுக்கு எதிராகவும் போரிட்டுத் தன் உயிர்ப்பைத் தக்கவைத்துக்கொண்டபோதிலும், ‘ஒற்றைப் பண்பாடு’ என்ற முழக்கம் எழுந்துள்ள சூழலில், இதுவரை தான் பெற்ற வெற்றியை தக்கவைத்துக்கொள்ளவும் பண்பாட்டுத் தளத்தில் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. இல்லையெனில் பெற்ற வெற்றியும் பறிபோய்விடும். இந்தப் போராட்டம் எந்தவொரு இயக்கத்துக்கும் எதிரானதல்ல; ஆதிக்கத்துக்கு எதிரானது. அவரவருக்கு அவரவர் பண்பாட்டைப் பேணிக்காக்க உரிமை உண்டு. ஆனால், அடுத்தவர் மீது ஆதிக்கம் செலுத்த உரிமை கிடையாது என்பதை வலுவாக முரசறைகிறது இந்நூல்.

பதி, பசு, பாசம் பேசும் சைவசித்தாந்தம் என்பது மற்றொரு தளத்தில் அறம், பொருள், இன்பம், வீடுபேற்றைப் பேசும் தமிழரின் சித்தாந்தமாகவும் திகழ்கிறது. பிரம்மம் என்ற கருத்தியலை ஏற்காத தமிழர் சமயமே சைவ சமயம் என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் இந்நூல் நிறுவுகிறது. தமிழர் பக்கமும் தமிழின் பக்கமும் நின்று ஒரு புதிய பார்வையில் சைவ சமயத்தை நமக்கு எடுத்துக்காட்டியுள்ள ‘சிகரம்’ ச. செந்தில்நாதனின் இந்நூல் தமிழர் பண்பாட்டை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய ஓர் ஆயுதமாகவும் திகழ்கிறது.

- வீ.பா.கணேசன், பத்திரிகையாளர், நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு: vbganesan@gmail.com

-------

சைவ சமயம் – ஒரு புதிய பார்வை

சிகரம் ச. செந்தில்நாதன்

சந்தியா பதிப்பகம்,சென்னை – 600 083.

விலை: ரூ. 250

தொடர்புக்கு: 044 – 24896979

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x