Last Updated : 01 Jan, 2022 07:38 AM

 

Published : 01 Jan 2022 07:38 AM
Last Updated : 01 Jan 2022 07:38 AM

ஞாலம் கருதினும் கைகூடும்!

அபுனைவில் தொடங்கிய நாவலாசிரியர் இரா. செல்வத்தின் எழுத்து வாழ்க்கை புனைவில் பூரணம் பெற்றுள்ளது. ஆனால், இந்த நாவல் முழுவதுமே புனைவு என்றும் கொண்டுவிடலாகாது. பெயர்களும் இடங்களும் சம்பவங்களும் கருத்துகளும் மாற்றிவைக்கப் பட்டிருக்கலாம். ஒரு நாவலில் தன்வரலாற்றுத் தன்மைகள் இடம்பெறுவது குற்றம் அல்ல.

வாசிப்பு ஈர்ப்பைக் கருத்தில் கொண்டு ஆடம்பரமும் அலங்காரமும் இல்லாத எளிய சொற்றொடர்களால் முழு நாவலுமே கட்டமைக்கப்பெற்றுள்ளது. சொந்த அனுபவங்களின் வலுவில் தனது இளம் பருவத்து வாழ்க்கையை புனைவாக்க முயன்றிருக்கிறார் நாவலாசிரியர். அந்த அனுபவப் பதிவுகளில் உண்மையையும் யதார்த்தத்தையும் உணர முடிகிறது. அய்யப்பநாயக்கன்பேட்டையின் புஞ்சை நிலப் பகுதியான பனையடி எனும் நிலப்பரப்பின் விவசாயிகளின் பாடுகளைப் பேசுகிறது நாவலின் முதல் பகுதி. உரையாடல்களும் சம்பவங்களும் மனித உறவுகளும் விவசாயச் செய்திகளும் எந்த மிகையும் இன்றிப் பதிவாகியுள்ளன. அணில், கொக்கு, எலி, பெருச்சாளி சுட்டுத்தின்ற வாழ்க்கையை நானும் அறிவேன். அனுபவத்தால் மட்டுமே கற்றுக்கொள்வது சாத்தியமாகிற மொழியில் அது பேசப்பட்டுள்ளது. உரையாடல்களில் மண்ணின் கூறுகளும் மாந்தரின் இயல்பும் புலனாகின்றன. விவசாயப் பெருமக்களுக்கே உரிய எள்ளலும் குத்தலும் நகையும் சிறப்பாகப் பதிவாகியுள்ளன.

குறு விவசாயிகளின் பிள்ளைகள் இன்னும் பள்ளிப் படிப்பைத் தாண்டுவது என்பது சாமானியமான சங்கதி அல்ல. கல்வி ஒன்றே மீட்சியின் தூதுவன் என்பது எனது அனுபவமும். நாற்பதாண்டுகள் முன்பு கல்வி என்பது எளிய மாணாக்கருக்கு எட்ட இயலாத வானத்து நிலவாக இருந்தது என்பதை நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் மிகையின்றி உரைக்கின்றன. காலமும் களமும் வேறு என்பதைத் தவிர எனக்கும் இந்தப் பாடுகள் இருந்தன.

தொடக்கப் பள்ளியைத் தாண்டி, உயர்நிலைப் பள்ளி, தொடர்ந்து விவசாயக் கல்லூரி வாழ்க்கை என நாவலின் களம் புலம்பெயர்கிறது. மாணவர் விடுதி அனுபவங்கள் சுவைபடப் பேசப்பெற்றுள்ளன. களம் மாறினாலும் நாவலின் நாயகன் பார்வையும் வாழ்க்கைப் போராட்டம் குறித்த அணுகுமுறையும் மாறவில்லை. கல்லக்காய் மூட்டைகளை அரசின் கொள்முதல் கூடங்களில் விற்கப் போவது தமிழின் அனுபவப் பரப்புக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு. அரசு அதிகாரங்கள் எனப்படும் ரத்த நாளங்களில் ஊழலும் சுரண்டலும் அநீதியும் ஆன கொழுப்புக்கள் படிந்து குருதிப் பாய்ச்சலின் வேகங்களைத் தடைப்படுத்தும் சாட்சிகள் இவ்வகை அனுபவங்கள்.

கிள்ளிகுளம் விவசாயக் கல்லூரியில் சேர்ந்த பிறகான கல்லூரி வாழ்க்கை நாவலின் இரண்டாம் பகுதியாகப் பேசப்படுகிறது. விரிவாகத் தொடர்ந்து அலுவலக வாழ்க்கை அனுபவங்கள். மூன்றாம் பகுதி தமிழ்ப் புனைவிலக்கியத்தில் பிறர் முனையாத பகுதி. சிறு கிராமத்து எளிய குடி மாணவனின் குடிமைப்பணித் தேர்வுகள்வென்றெடுக்கும் முயற்சிகள். ஒன்றல்ல, இரண்டுமல்ல. ஐந்து முறைகள் தேர்வெழுதி, நேர்காணல்களில் பங்கேற்று, இறுதியாக வென்று இ.ஆ.ப., அலுவலராக இலக்கை அடையும் போராட்டம். நாவல் நாயகனின் நம்பிக்கை, உழைப்பு, ஊக்கம், உறுதிப்பாடு. சற்றே சோர்ந்திருந்தால் தமிழ் விவசாயத் துறைஅதிகாரியாகவோ, ரயில்வேத் துறை அதிகாரியாகவோ, வாழ்க்கையை வெற்றிகொள்ளத் தீர்மானித்திருக்கலாம். ஐ.ஏ.எஸ். எனும்பெருங்கனவு சாத்தியமாகும் வரை களைப்பில்லை, கண்துஞ்சலும் இல்லை.

‘காலம் அறிதல்’ எனும்அதிகாரத்துக் குறளொன்று இப்படிக் கூறுகிறது: ‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம்/ கருதி இடத்தாற் செயின்’. இந்த நாவல் சொல்ல வரும் செய்தி அதுவேதான். இருண்மைச் சிந்தனை அற்று, நோய்மைச் சிந்தனை தவிர்த்து, யாவற்றையும் நம்பிக்கையுடன் முயன்று, உழைப்போம் எனில் ஞாலம் கருதினும் கைகூடும்!

நாவல் எனும் கலை அனுபவத்தின் தரிசனங்களைப் பெறுவதற்கு, நூலாசிரியர் இன்னும் கூர்த்த நோக்குடன் முனைய வேண்டும். மொழியிலும் உத்தியிலும் வாழ்க்கைப் போராட்ட உக்கிரங்களைக் கலைநுட்பங்களுடனும் காட்ட முயலலாம். ஒரு நாவலின் கலை வெற்றி என்பதுவும் உழைத்து, முயன்று, போராடிப் பெறும் காரியமே!

பெருங்கனவு கொண்ட இளைஞர்களுக்கு ‘பனையடி’ என்ற நாவலின் மூலம் ஒரு வழிகாட்டுதலைச்செய்திருக்கிறார் இரா. செல்வம், இ.ஆ.ப.

- நாஞ்சில் நாடன், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்.

------------------

பனையடி

இரா.செல்வம்

என்.சி.பி.எச். வெளியீடு

விலை: ரூ.200

தொடர்புக்கு: 94433 70015

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x