Published : 01 Jan 2022 07:39 AM
Last Updated : 01 Jan 2022 07:39 AM

நூல்நோக்கு: எல்லோருக்குமான மருத்துவக் களஞ்சியம்

மருத்துவ நூல்கள், சிறார் இலக்கியம் என்று 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பவர் மருத்துவர் கு.கணேசன். அது மட்டுமல்லாமல் பல்வேறு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் மின்னிதழ்களிலும் சுற்றிச்சுழன்று தொடர்ந்து எழுதிவருபவர் அவர். எளிய தமிழில் மருத்துவத்தை மக்களுக்குக் கொண்டுசெல்ல முடியும் என்று நிரூபித்திருப்பவரும்கூட. அவரது எழுத்துகளாலே தமிழர்கள் பலருக்கும் குடும்ப மருத்துவராகத் திகழ்கிறார். அவரது மற்றுமொரு முக்கியமான நூல் ‘நலம் நம் கையில்’, இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கிறது. இந்த நூல் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான நலக்கையேடாகத் திகழ்கிறது. இன்றைய நவீன வாழ்க்கை முறையின் கேடுகளைச் சுட்டிக்காட்டும் கணேசன் அதற்கான தீர்வுகளை முன்வைக்கிறார். உடற்பயிற்சி, சரியான உணவு முறை போன்றவற்றை மட்டுமல்ல சிரிப்பையும்கூட மருந்தாக முன்வைக்கிறார். மிகவும் விரிவான அளவில் பல்வேறு விஷயங்களைப் பற்றி அவர் இந்த நூலில் பேசியிருக்கிறார். தனிப்பட்ட உடலுறுப்புகள் மட்டுமன்றி, மூட்டுவலி, மாரடைப்பு, புற்றுநோய், பக்கவாதம், உணவு ஒவ்வாமை, மூப்புமறதி, கொசுப் பிரச்சினை, தூக்கக் கோளாறு, வெறிநாய்க் கடி, பெண்கள் பிரச்சினை என்று கணேசன் தொடாத விஷயங்களே இல்லை எனலாம். மருத்துவக் கட்டுரைகள் பலவும் நம்மை அதிகம் பயமுறுத்தும். கணேசன் முதலில் கொஞ்சம் பயமுறுத்திவிட்டு அதைப் போக்கும் நம்பிக்கையையும் தருகிறார். எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்.

நலம் நம் கையில் (இரண்டு பாகங்கள்)

டாக்டர் கு.கணேசன்

தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் வெளியீடு,

மதுரை-625003

விலை: ரூ. 380 (இரண்டு தொகுதிகளும் சேர்த்து)

தொடர்புக்கு: 18004257700

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x