

புதுமைப்பித்தன் கொண்டாட்டம்
தமிழ்ச் சிறுகதையின் பிரதான இடத்தை வகிக்கும் புதுமைப்பித்தனைக் கொண்டாட முடிவெடுத்திருக்கிறது சீர் வாசகர் வட்டம். ஆகவே, 640 பக்கங்களையும் 102 கதைகளையும் கொண்ட ‘புதுமைப்பித்தன் சிறுகதைகள்’ நூலை வெறும் ரூ.100-க்கு வெளியிடுகிறார்கள். இந்த நூலின் பதிப்பாசிரியர் வீ.அரசு. இந்த விலை முதல் 5 ஆயிரம் பிரதிகளுக்குத்தான். 45-வது சென்னைப் புத்தகக் காட்சியின் நாயகர்களுள் ஒருவராகப் புதுமைப்பித்தன் வலம்வருவார் என்பதில் சந்தேகமில்லை. வீடுதோறும் புதுமைப்பித்தனைக் கொண்டுசெல்ல இந்த முன்னெடுப்பு உதவட்டும். தொடர்புக்கு: 9566331195
புத்தகக் காட்சி
நாகர்கோவில் புத்தகக்காட்சி: ஆங்கிலப் புத்தாண்டையும், பொங்கல் திருநாளையும் முன்னிட்டு மக்கள் வாசிப்பு இயக்கம் நடத்தும் நாகர்கோவில் புத்தகக்காட்சி ஜனவரி 1 தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இடம்: வருவாய்த் துறை அலுவலர் சங்கக் கட்டிடம் (போத்தீஸ் எதிரில்), நாகர்கோவில். நேரம்: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை. தொடர்புக்கு: 9042189635.
சாகித்ய விருதுக்கு இணையாகக் கலைமாமணி!
சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் மொழிப் பிரிவில் அம்பைக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது. இந்திய இலக்கியத்துக்கு அரசால் வழங்கப்படும் உயரிய விருது என்ற வகையில் சாகித்ய அகாடமி விருதுக்கு பொதுமக்களிடமும் எழுத்தாளர்களிடமும் தனிமரியாதை உண்டு. கலைமாமணி விருது தமிழ்நாடு அரசால் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருது. அது தனது மாண்பை இழந்துவிட்டதாகப் பலரும் கருதுகிறார்கள். இந்த நிலையில் எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து எழுதியிருப்பது கவனிக்கத்தக்கது. ‘தமிழ்நாடு அரசு வழங்கும் கலைமாமணி விருதின் பெயரை மாற்றியமைத்து அதை சாகித்ய அகாடமி விருது அளவுக்காவது மதிப்பு மிக்கதாக மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த அரசு செய்யாவிட்டால் எப்போதுமே அதைச் செய்யமுடியாமல் போய்விடும்’ என்று முதல்வரை டேக் செய்து அவர் பதிவிட்டிருப்பது விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. பலரது ஆதங்கமே ரவிக்குமாரின் குரலாக வெளிப்பட்டிருக்கிறது. படைப்பாளிகள், கலைஞர்கள் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டிருக்கும் முதல்வர் நிச்சயம் இந்தக் குரலுக்குச் செவிசாய்ப்பார் என்று நம்புவோம்.
அயோத்திதாசர்-175
எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் குறித்த தொகுப்பு நூல்கள் சமீப காலமாக வெளியாகிவருவது ஆரோக்கியமான போக்கு. சமீபத்தில் தி.ஜானகிராமனைப் பற்றிய ‘ஜானகிராமம்’ பெருந்தொகுப்பு வெளியானது. பிரபஞ்சனைப் பற்றிய ‘பிரபஞ்ச கானம்’ பெருந்தொகுப்புக்கான அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. அடுத்த பெருந்தொகுப்பு 'அயோத்திதாசர்-175'. ஸ்டாலின் ராஜாங்கம் இந்த அறிவிப்பைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 2020-ல் அயோத்திதாசப் பண்டிதரின் 175-வது பிறந்த ஆண்டு வந்தபோது இந்தத் தொகுப்பைத் திட்டமிட்டதாக இந்த மலரின் தொகுப்பாசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் கூறுகிறார். அதன் தொடர்ச்சியாக, ‘கள ஆய்வு, ஆவணரீதியான தேடல்கள், மறுவிளக்கங்கள், மொழிபெயர்ப்புகள், படைப்புகள்’ என்று 28 பேர் பங்களிப்பில் இந்த மலர், ராயல் அளவில் அமைந்துள்ளது. நீலம் வெளியீடு இந்த மலரை வெளியிடுகிறது. புத்தகக்காட்சியின் அசத்தலான வரவுகளுள் ஒன்றாக இந்த மலர் நிச்சயம் இருக்கும்.
அகழாய்வுப் பயிலரங்கம்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் தொல்லியல் புலம் நடத்தும் ‘சிந்துவெளி முதல் கீழடி வரையிலான அகழாய்வுகளும் தமிழ்ச் செவ்விலக்கிய வரலாறும்’ என்ற பயிலரங்கம் வரும் ஜனவரி 18 முதல் 24-ம் தேதி வரை ஏழு நாட்கள் நடைபெறவுள்ளது. ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் நேரடியாகப் பயன்பெறும் வகையில் நடத்தப்பெறும் இப்பயிலரங்கில் தொல்லியல் துறை சார்ந்த வல்லுநர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர். பயிலரங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 25. பயிலரங்கில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டிய வேண்டிய இறுதி நாள் 10.01.2022. முழு விவரங்களுக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இணையதளப் பக்கத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.