Published : 26 Dec 2021 07:12 AM
Last Updated : 26 Dec 2021 07:12 AM

கான்பூர் மாநாடு: விடுதலைப் போரின் புரட்சிமுகம்

த. லெனின்

இந்தியாவில் செயல்படும் பழமையான அரசியல் கட்சி என்றால் 1885-ல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ். அதற்கடுத்த நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சி கொண்ட அரசியல் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அது தனது 97-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு இந்திய விடுதலைப் போராளிகள் பலர் இந்திய விடுதலைக்கான, உறுதியான சாத்தியங்கள் குறித்துக் கனவு காண ஆரம்பித்தனர்.

இதன் வழியே நடைபெற்ற புரட்சிகரமான பல எழுச்சிகளுக்குப் பிறகு, இந்தியாவின் பல இடங்களில் கம்யூனிஸ்ட் குழுக்கள் செயல்பட ஆரம்பித்தன. அவற்றைத் தடுக்கும் நோக்கத்துடன் 1924-ல் எஸ்.ஏ.டாங்கே, முசாபர் அகமது, நளினி குப்தா, உஸ்மானி ஆகிய நான்கு பேருக்கும் நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கான்பூர் சதி வழக்குப் போடப்பட்டு, கம்யூனிஸ்ட்டுகளை ஒழித்துவிட்டோம் என்று வெற்றிக் களிப்பில் மிதந்தது ஆங்கிலேய அரசு. பிறக்காத கம்யூனிஸ்ட் கட்சியின் மீது தடையும் விதித்திருந்தது. இந்தத் தடையையும் மீறித்தான் அந்தக் கட்சி பிறந்தது.

புகழ்பெற்ற கவிஞரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஹஸ்ரத் மொஹானி வரவேற்புக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்க, தென்னகத்தின் முதல் கம்யூனிஸ்ட் மா.சிங்காரவேலர் தலைமை உரையுடன் அமைப்பின் முதல் மாநாடு தலைமறைவாக கான்பூர் நகரில் நடந்தேறியது. பலர் சதி வழக்குகளால் சிறைச்சாலையில் வாடிவந்த நிலையில், போர்க்குணமிக்க புரட்சியாளர்களும், தேசபக்தர்களும் இணைந்து உருவாக்கியதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. ஈடு இணையற்ற தியாகங்களால் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய தேசபக்தர்கள் புதிய வழியைக் காண இக்கட்சியில் சங்கமித்தனர்.

புகழ்பெற்ற கதார் கட்சியை (கதார் என்றால் புரட்சி என்று பொருள்) சார்ந்த லாலா ஹர்தயால், சர்தார் சிங், ராஷ்பிகாரி போஸ், சோகன்சிங் பாக்னா ஆகியோர் இந்தக் கட்சியில் இணைந்தனர். இந்தியாவை ஆயுதப் போராட்டம் மூலம் கைப்பற்றுவதற்காக வெளிநாட்டிலிருந்து காமகட்டமாரு கப்பல் மூலம் 1915-ல் பிப்ரவரி 15 அன்று வருகைதந்த போராளிகள் பலர் கொல்லப்பட்டனர், அவர்களில் எஞ்சியவர்களும் இந்தக் கட்சியில் இணைந்தனர்.

1922-லிருந்து 1924 வரை இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நுழைந்த முஹாஜிர்கள் எனப்படும் இஸ்லாமியப் புரட்சியாளர்கள் மீது நான்கு பெஷாவர் சதி வழக்குகள் போடப்பட்டன. இதிலிருந்து பலர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். நவஜவான் சோஷலிஸ்ட் படையை நடத்திய பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட பிறகு அவருடைய தோழர்கள் அஜய்கோஷ், ஷிவ்வர்மா, சோஹன் சிங் கோஷ் முதலானோர் இக்கட்சியில் இணைந்தனர். சிட்டகாங் ஆயுதக் கிடங்கு தாக்குதலால் பிரபலமான சூரியா சென்னின் சீடர்களும், புரட்சிப் போராளிகளுமான கணேஷ் கோஷ் மற்றும் கல்பனா தத் ஆகியோரும் இக்கட்சியில் இணைந்தனர்.

ஒத்துழையாமை இயக்கத்துக்கு காந்தி அறைகூவல் விடுத்தபோது, சத்தியாகிரகிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மறுத்த, கார்வால் ஆயுதப்படை சார்ஜன்ட் சந்திரசிங் கார்வாலி சிறைத் தண்டனைக்குப் பிறகு வெளியே வந்தவுடன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். காலனியாதிக்கத்துக்கு எதிராக வெகுண்டெழுந்து போராடிய மணிப்பூர் ஜன நேத்தா (மக்கள் தலைவர்) ராபோர்ட் சிங் சிறை வாசத்தின்போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

விடுதலைப் போராட்டப் புரட்சியின் பல்கலைக்கழகங்களாக விளங்கிய அந்தமான், தியோலி, பக்ஸா, ஹிஜ்லி மற்றும் பிற சிறைகளிலிருந்து விடுதலை அடைந்தவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இவர்கள் மீது வாசிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் பிரிட்டிஷ் இந்திய இறையாண்மையைப் பேரரசிடமிருந்து பறித்துக்கொள்ள இந்தியாவிலிருந்து தங்களுக்குத் தெரிந்த, தெரியாத ஒவ்வொருவருடனும் சேர்ந்து சதி செய்ததாக ஆங்கிலேயர்களின் காவல் துறை குற்றம் சுமத்தியது.

கல்வி கற்க வெளிநாட்டுக்குச் சென்ற எம்.என்.ராய், அபானி முகர்ஜி, வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா, டாக்டர் பூபேந்திரநாத் தத்தா (சுவாமி விவேகானந்தரின் தம்பி), எம்.பி.டி.ஆச்சார்யா எனும் திருமலாச்சாரி (சோவியத் நாட்டில் லெனினை நேரில் சந்தித்தவர்களில் இவரும் ஒருவர்) ஆகியோருடன் மேலும் சிலர் மாஸ்கோவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை 1920-ல் நிறுவினர். ஆனால், ஒன்றுபட்ட கட்சி வெளிநாட்டில் கட்சி உருவானதை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன், அதை ஒரு தொடக்க கால முயற்சியாக மட்டுமே எடுத்துக்கொண்டது. 1925 டிசம்பர் 26-தான் கட்சி அமைக்கப்பட்ட தினமாக அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

- த.லெனின், தொடர்புக்கு: dlenin.aiyf@gmail.com

டிசம்பர் 26: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவன தினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x