

பொள்ளாச்சி கம்பன் கலைமன்றத்தின் தலைவர் கே.எம்.சண்முகம் எழுதிய 14 கதைகளின் சிறுகதைத் தொகுப்பு இது. முதல் தொகுப்புக்கான நிறைகுறைகள் உண்டு என்றாலும் மனிதர்களுக்கு இடையிலான உறவுகளை, நாம் இயல்பாகக் கடந்துசெல்லும் கவனிக்கத் தவறிய சமூகப் பிரச்சினைகளை அக்கறையுடன் கவனப்படுத்த இச்சிறுகதைகள் முயல்கின்றன.
தொகுப்பின் தலைப்புச் சிறுகதையான ‘தீர்வு’, உலகம் எதிர்கொண்டுள்ள தண்ணீர் நெருக்கடியையும், இயற்கையைக் காக்க வேண்டிய அவசியத்தையும், தூய்மைப் பணியாளர்களின் தூய உள்ளத்தையும் ஒருசேர எடுத்துக்காட்டுகிறது. மனிதர்களுக்கு இடையிலான மதிப்பு நிலைகள் அவர்களது பொருளாதார நிலையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதன் அபத்தங்கள், மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள் தன்னந்தனியராக நள்ளிரவில் வாடகை ஆட்டோக்களுக்காகக் காத்திருக்கும் நிலை, பக்கத்து மாநிலமான கேரளத்தில் நடைமுறையிலுள்ள ஆட்டோ கட்டணங்களைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியாத சிக்கல், விளம்பரங்களால் ஈர்க்கப்படும் நுகர்வோர்கள் அதன் பின்னால் உள்ள விபரீதங்களை அறியாமலிருப்பது என்று இந்தக் கதைகள் மனித மனங்களைப் படம்பிடித்துக் காட்டுபவையாக இருக்கின்றன. அதே நேரத்தில், அறிவுரைக் கதைகளுக்கான நோக்கத்தையும் இயல்பையும் கொண்டிருக்கின்றன.
- பி.எஸ்.கவின்