

திருப்புமுனை மாநாடுகள்’ நடக்கிற தேர்தல் காலத்தில் திருச்சியில் புத்தகத் திருவிழா தொடங்கியிருக்கிறது. இதுவரையில் சென்னை, மதுரை, கோவை போன்ற ஊர்களில் மட்டுமே நேரடி புத்தகக் காட்சிகளை நடத்திவந்த பபாசியின் பார்வை, இம்முறை திருச்சியின் பக்கம் திரும்பியிருக்கிறது.
ஜனவரியில் சென்னை புத்தகத் திருவிழா நடத்த முடியாத சூழலில், ஏதாவது புதிய முயற்சி செய்யலாமே என்றுதான் திருச்சியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், முன்பே திருச்சிக்கு வந்திருக்கலாமோ என்று ஆதங்கப்படும் அளவுக்கு ஆரம்ப நாளிலேயே அமோக வரவேற்பு.
நேற்று மாலையில் தொடங்கிய புத்தகக் காட்சிக்கு காலை 10 மணி முதலே வாசகர்கள் வரத் தொடங்கிவிட்டார்கள், அதுவும் குடும்பம் குடும்பமாக. தேர்வுக் காலமாக இருந்தபோதிலும் மாணவர்களையும் அதிக அளவில் அரங்கில் பார்க்க முடிந்தது உற்சாகமூட்டும் காட்சி!
தென்னூர் உக்கிரகாளியம்மன் கோயில் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில்தான் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. ஒரு காலத்தில் மாநகராட்சியின் அறிவியல் பூங்கா இருந்த இந்த இடத்தில், இப்போது அறிவுத் திருவிழா!
புத்தக விற்பனையாளர்களின் முகத்திலும் மகிழ்ச்சி. காரணம் புத்தக அரங்குகளின் வாடகை ரொம்பவும் குறைவு. ஒட்டுமொத்த மைதானத்தையும் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்ற வீதத்தில் மாநகராட்சி தந்திருப்பதால், அதன் பலன் தங்களுக்குக் கிடைத்திருப்பதாகச் சொன்னார் புத்தக விற்பனையாளர் ஒருவர்.
புத்தக ஆர்வம்
மாலை நேரம் நெருங்கியதும், வாசகர் கூட்டத்தால் அரங்கம் நிறைந்தேவிட்டது. புத்தகக் கடைகளில் மட்டுமே புத்தகங்களைத் தேர்வுசெய்து பழக்கப்பட்ட புது வாசகர்கள் பலர், அரங்குக்கு வந்திருந்தார்கள். குழந்தைகளைப் போல உற்சாகத்தோடு புத்தகங்களைப் பார்வையிட்டார்கள். தேர்தல் நேரம் என்பதாலோ என்னவோ, அரசியல் புத்தகங்களையும் இளைஞர்கள் தேடித் தேர்ந்தெடுத்தார்கள். குழந்தைகளுக்கான புத்தகத்தைத் தேடிக்கொண்டிருந்த பெற்றோரிடம், ‘நானே தேடிக்குறேன்’ என்று சொல்லிவிட்டுப் பிள்ளைகளே புத்தகம் தேடும் அழகிய காட்சிகளும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
‘பபாசி’யின் எதிர்பார்ப்பு
புத்தகக் காட்சிகள் திருச்சி மக்களின் வாசிப்பு பழக்கத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது ‘பபாசி’யின் எதிர்பார்ப்பு.
“1 லட்சம் தலைப்புகளில் சுமார் 20 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்துப் புத்தகங்களும் 10 சதவீதத் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன. மொத்தம் 125 அரங்குகள் புத்தகக் காட்சியில் இடம்பெற்றுள்ளன. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும். அனுமதி இலவசம். வாசகர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வெள்ளப் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு சென்னையில் புத்தகக் காட்சி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால், திருச்சியில் நடத்த ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமியிடம் அனுமதி கேட்டோம். அவர் மிகவும் ஆர்வமாக இந்த ஆண்டு மட்டுமின்றி ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். புத்தக விற்பனைக்காக அல்ல, வாசிப்பை ஊக்கப்படுத்துவதற்காகத்தான் ‘பபாசி’ இது போன்ற திருவிழாக்களை ஏற்பாடு செய்கிறது. புதிதாகப் புத்தகம் வாங்கி ருசி கண்டவர்கள், தொடர்ந்து புத்தக வாசிப்பில் இறங்குவார்கள் என்பதால் திருச்சி புத்தகக் கடைகளில் புத்தக விற்பனை மறுமலர்ச்சி பெறும் என்று நம்புகிறோம்” என்றார் பபாசி செயலாளர் புகழேந்தி.
திருச்சியில் பல புத்தகத் திருவிழாக்கள் நடைபெற்றிருக்கின்றன. சில வர்த்தகரீதியாக தோல்வியடைந்துவிட்டன. சில விழாக்கள் சந்தர்ப்ப சூழல்களால் தொடராமல் போய்விட்டது. ஆனால், வெற்றிக்கான அனைத்து முகாந்திரங்களுடன் தொடங்கியிருக்கிறது ‘பபாசி’ கண்காட்சி.
தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக விளங்கும் திருச்சி, புத்தக விற்பனையிலும் அந்த இடத்தை எட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.