Last Updated : 18 Mar, 2016 10:46 AM

 

Published : 18 Mar 2016 10:46 AM
Last Updated : 18 Mar 2016 10:46 AM

மவுனத்தின் புன்னகை 12: சிலைகள்!

சென்னைப் பல்கலைக்கழகத்தை ஒட்டியிருக்கும் ஓரிடத்தில் விக்டோரியா ராணி சிலை இருக்கிறது. சமீபத்தில் இந்தச் சிலையின் பழைய புகைப்படத்தைப் பார்க்க நேரிட்டது. ராணியின் முதிய பிராயத்தில் அச்சிலை செய்திருக்க வேண்டும். அவருடைய சிலைகளை வேறிடத்திலும் பார்த்திருக்கிறேன். எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், புகைப்படத்தில் பார்த்தபோதுதான் அவருடைய சிலைகள் எவ்வளவு கம்பீரமாக இருந்தன என்று உணர முடிந்தது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆங்கிலப் பத்திரிகைக்குக் கட்டுரையுடன் சில புகைப்படங்களும் அனுப்ப வேண்டியிருந்தது. நான் சென்னை விக்டோரியா சிலையைப் புகைப்படம் எடுக்கப் போனேன். அது எமர்ஜென்சி காலம். எதையும் அரசு விரோதச் செயலாக எண்ணலாம். படம் எடுக்க முடியவில்லை. காரணம், சிலையை மேன்மைப்படுத்துவதாக எண்ணி அச்சிலைக்கு ஓர் மண்டபம் கட்டியிருந்தது. என்ன முயன்றும் ராணியின் முகம் தெரிகிறபடி படம் எடுக்கவே முடியவில்லை.

திறந்த வெளியில் வைக்கத்தான் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. ஒரு சிலையைச் சுற்றி மண்டபம் கட்டுவது மரியாதை காட்டுவதாக இருக்கலாம். ஆனால், சிலையைப் பார்க்க முடியாதபடி மண்டபத் தூண்கள், கூரையின் நிழல் ஆகியவை தடுத்துவிடுகின்றன.

புதுச்சேரியில் டியூப்ளெக்ஸ் சிலை முதலில் கடற்கரைச் சாலையில் இருந்தது. அந்த மனிதர் நல்லவரா? கெட்டவரா என்று நினையாமல் அச்சிலையைப் பார்த்தால் அது மிக அழகிய, கம்பீரமான சிலை. இப்போது அது இடம் மாறிவிட்டது.

சிலைகள் குறைந்தது ஐந்தாயிரம் ஆண்டுகளாக ஏதோ ஒரு காரணத் துக்காக நிறுவப்பட்டு வருகின்றன. எகிப்தில் ஓர் அணை கட்டாயம் கட்டியாக வேண்டிய இடத்தில் ராம்ஸேஸ் என்ற அரசனின் இரு மிகப் பெரிய சிலைகள் இருந்தன. அது மனிதனுக்காகக் கட்டப்பட்டிருந்தால்கூட அது ராம்ஸேஸ் ஆலயம் என்றே அழைக்கப் பட்டது. அந்த ஆலயத்தையே பிரித்து வேறிடத்தில் கட்டி, அணையையும் கட்டி முடித்தார்கள். இந்தியாவிலேயே நாகார்ஜுனசாகர் அணை சில சரித்திரச் சின்னங்களை மாற்று இடத்தில் அமர்த்திக் கட்டப்பட்டது.

சுமார் 25 ஆண்டுகள் முன்பு பொதுவுடைமை ஆட்சி இருக்காது என்று நிச்சயமானவுடன், கிழக்கு ஐரோப்பிய மக்கள் செய்த முதல் காரியம் ஸ்டாலின் சிலைகளைப் பீடத்தில் இருந்து தள்ளி உடைத்ததுதான். அவருடன் கூட லெனின் சிலைகளும் தகர்க்கப்பட்டன. ஸ்டாலினால் அவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், லெனின் 1925-லேயே இறந்துவிட்டார். சிஷ்யனை குட்டினால் போதாது, குருவையும் நாலு சாத்து சாத்தவேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது.

நான் புகைப்படங்களில்தான் பார்த்திருக்கிறேன். லெனின்கிராட், ஸ்டாலின்கிராட் நகரங்களில் மக்கள் நாஜிப் படைகளை எதிர்த்த வீரத்துக்காக வும் அவர்கள் புரிந்த தியாகங்களுக் காகவும் நன்றி தெரிவிக்கும் வகையில் பிரம்மாண்டமான சிலைகள் எழுப்பப்பட்டன. இரண்டாம் உலக யுத்தத்தில் ரஷ்ய மக்கள் புரிந்த தியாகத்தைக் கணக்கிடமுடியாது. உண்மையில் அந்தச் சிற்பங்கள் சின்ன அடையாளங்கள்தான்.

சென்னைக் கடற்கரை உலகத்தில் மிக அழகான கடற்கரைகளில் இரண்டாம் இடம் வகிக்கிறது என்பார்கள். அப்படி யானால் எது முதலிடம் என்ற கேள்வி உடனே தோன்றும். முதல் இடம் மியாமி கடற்கரை என்கிறார்கள். அந்தக் கடற்கரையின் புகைப்படங்கள் அனைத்திலும் கடல் மணலை விட அதிக மனிதர்கள் இருப்பார்கள். இவ்வளவு கூட்டத்தில் யாருக்கு அழகைப் பார்க்க அவகாசம் கிடைக்கும்?

நான் சிறுவனாக இருந்தபோது பல திரைப்படங்களிலும் பத்திரிகைக் கதைகளிலும் மகாமகத்தின்போது தொலைந்த குழந்தை பல ஆண்டுகள் கழித்துக் கிடைப்பதாகத் திருப்பம் வரும். கூட்டம் கூடும் இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்து வரலாமா என்று கேட்கத் தோன்றும். சில ஆண்டுகள் முன்பு இந்த மகாமகக்குளத்தில் பல நூறு உயிர்கள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு மகாமகக் காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது எதை நம்புவது என்று ஒரு கணம் திகைப்பு ஏற்படுகிறது. தண்ணீர் முழங்கால் அளவு கூட இல்லை. இதில் விழுந்து இறக்க வேண்டும் என்றால் அதுவே ஒரு சாதனை. ஆனால், இதே குளம் மிகவும் ஆழமாக இருந்திருக்கிறது. அதேபோல பல தென்னாட்டுக் கோயில் குளங்கள் ஆழமாக இருக்கின்றன. நானே ஒரு முறை குளத்தில் மூழ்கி இறக்க இருந்தேன். என் அம்மாதான் தலைமுடியைப் பிடித்து என்னை இழுத்துப்போட்டிருக்கிறாள்.

சென்னைக் கடற்கரையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது தமிழ் அறிஞர்கள் சிலைகள் சில நிறுவப் பட்டன. இவை போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தவில்லை. ஓர் அடிகுறிப்பு வேண்டுமானால் தரலாம்: இவை பார்க்கப்படுவதே இல்லை. அதே போல காந்தி சிலை. இதைக் கவனிக்காமல் இருக்க முடியாது. இது வெட்டவெளியில்தான் இருக்கிறது. இதை நேருவே திறந்து வைத்தார். அதேபோல காமராஜர் சிலை திறப்புக் கும் நேரு வந்திருந்தார். அன்று அவர் உரையின் முக்கிய பகுதி, ஒரு சிலை எப்போது நிறுவப்பட வேண்டும் என்பதைப் பற்றி இருந்தது. ஒருவர் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே அவருடைய சிலையை நிறுவலாமா? அவர் பேச்சு ஜோதிடக் குறிப்பு போல அடுத்த தேர்தலிலில் அறிமுகமே இல்லாத ஓர் இளைஞனால் காமராஜர் தோற்கடிக்கப்பட்டார்.

வாழ்நாளிலேயே சிலை நிறுவப் பட்டதன் இன்னொரு எடுத்துக்காட்டு அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலை. இன்னொரு சிலை அண்ணா சாலையிலேயே ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடை எதிரே நிறுவப்பட்டது. அதைப் புகைப்படம் எடுத்து பம்பாய்ப் பத்திரிகைக்கு அனுப்பினேன். பிரசுர மும் ஆயிற்று. ஆனால், நான் கையை விட்டுச் செலவழித்த பணம் கூட வர வில்லை. இன்று அந்தச் சிலை இல்லை.

ஓர் இத்தாலிய இசை மேதைக்கு அவர் வாழும்போதே சிலை நிறுவ ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. இத்தாலிய சலவைக் கல்லும் இத்தாலியச் சிலைகளும் இன்று வரை விஞ்சப்படவில்லை. அந்த இசை மேதை ஒரு குழந்தை போல, சிலையை நிறுவும் குழுவில் முக்கியமாக இருந்த ஒருவரிடம் “சிலை நிறுவ எவ்வளவு பணம் செலவாகிறது?’’ என்று விசாரித்தாராம்.

“இரண்டு கோடி லீரா” என்று சொல்ல, அதற்கு அவர் “இரண்டு கோடியா? அதில் பாதிப் பணத்துக்கு நானே மேடையில் நிற்பேனே!” என்று சொல்லியிருக்கிறார்.

உலகில் மிகப் புகழ்பெற்ற இரு சிற்பங்கள் மைக்கேல் ஆஞ்சலோ உருவாக்கிய ‘டேவிட்’ மற்றும் ‘பியேத்தா’. உலகின் பல பகுதிகளில் இச்சிலைகளின் பிரதிகள் உள்ளன. ‘பியேத்தா’ சிற்பத்தில் சிலுவையில் இருந்து இறக்கிய ஏசு கிறிஸ்துவை மடியில் கிடத்தியிருப்பார் மேரி.

டேவிட் சிலை 17 அடி உயரம். மிகவும் சிறப்பானது என்பதில் இரு அபிப்பிராயங் கள் இருக்க முடியாது. ஏனோ அச்சிற் பத்தைப் பிறந்த மேனியில் வடித்திருப் பார். நான் அசலைப் பார்த்ததில்லை. ஒரு பிரதியைப் பாத்திருக்கிறேன். அதில் சங்கடப்படுத்தக் கூடிய இடம் ஒரு பெரிய அத்தி இலையால் மூடப் பட்டு இருந்தது!

- புன்னகை படரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x