Published : 12 Dec 2021 03:08 AM
Last Updated : 12 Dec 2021 03:08 AM

கோவை ஞானிக்கும் தொ.பரமசிவனுக்கும் சாகித்ய விருது எப்போது?

தமிழ்ப் படைப்புகளுக்கு 1955 முதல் 2020 வரை அறுபது சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. (ஐந்து ஆண்டுகள் விருதுகள் வழங்கப்படவில்லை.) இதில் புனைவுக்கும் கவிதைக்கும் மட்டும் நாற்பத்திரண்டு முறை வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நாவலுக்கு இருபத்தெட்டு முறை. இதில் கடைசி மூன்று ஆண்டுகளாக நாவல்களே (‘சஞ்சாரம்’, ‘சூல்’, ‘செல்லாத பணம்’) இவ்விருதைப் பெற்றுள்ளன. ‘இந்த ஆண்டு எந்த நாவலுக்கு விருது கிடைக்கும்?” என்ற பாணியிலேயே சமீப காலங்களில் பொதுவெளியில் உரையாடல்கள் நடப்பதையும் அவதானிக்க வேண்டும். இது ஆரோக்கியமான போக்காக இருக்குமா என்று சாகித்ய அகாடமி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கடந்த அறுபது ஆண்டுகால சாகித்ய விருதுகளில் 18 முறை மட்டுமே அபுனைவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அபுனைவில் கட்டுரை, இலக்கியத் திறனாய்வு, தன்வரலாறு, வாழ்க்கை வரலாறு, இலக்கிய வரலாறு, பயண இலக்கியம், உரையாக்கம் ஆகிய ஏழு பிரிவுகளில் இந்த 18 விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. சமூக வரலாறு, பண்பாட்டு வரலாறு, மொழி ஆய்வுகள், இலக்கண ஆய்வுகள், தொல்பொருள் ஆய்வுகள், கல்வெட்டு ஆய்வுகள், இலக்கியக் கோட்பாடுகள், நினைவுகள், கலை வரலாறு, தத்துவம், நாட்டுப்புறவியல் உள்ளிட்ட ஏராளமான பிரிவுகள் அபுனைவில் உள்ளன. மேற்கண்ட பிரிவுகளில் ஒரு விருதைக்கூடத் தமிழுக்கு சாகித்ய அகாடமி வழங்கவில்லை. எடுத்துக்காட்டாக, உருது மொழியில் முதல் விருதே (1955) தத்துவம் சார்ந்த நூலுக்கு வழங்கப்பட்டது. நாட்டுப்புறக் கதைகள் (ராஜஸ்தானி, 1974), வாய்மொழி வரலாறு (சம்ஸ்கிருதம், 1970), பண்பாட்டு ஆய்வு (மராத்தி 1955, ஒரியா 1994) போன்ற வெவ்வேறு அபுனைவு நூல்களுக்குப் பிற மொழிகளில் விருதுகள் வழங்கி அங்கீகரிக்கும்போது, தமிழில் மட்டும் நாவலை மட்டுமே இலக்கியமெனக் கருதித் தொங்கிக்கொண்டிருப்பதேன்?

தமிழில் புனைவிலக்கியச் செயல்பாடுகள் மட்டுமே காத்திரமாக நடைபெறுகின்றன என்ற வாதம் ஏற்புடையதாக இருக்காது. அவ்வாதம் ஏற்கப்பட்டால், அதனை இலக்கியரீதியிலான குறைபாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. சாகித்ய விருதுகள் வழங்கப்பட்ட தொடக்கக் காலத்தில் புனைவு, அபுனைவு என இரண்டுக்கும் இணையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, முதல் பத்தாண்டுகளில் (1955-1964) ஆறு விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் மூன்று புனைவுக்கும், மூன்று அபுனைவுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த பத்தாண்டுகளில் புனைவுக்கும் கவிதைக்கும் சேர்த்து ஆறு விருதுகளும் அபுனைவுக்கு நான்கு விருதுகளும் கொடுக்கப்பட்டன. மூன்றாவது பத்தாண்டில் (1975-1984) கொடுக்கப்பட்ட ஒன்பது விருதுகளில் ஐந்தை அபுனைவு பெற்றிருக்கிறது. அதன் பிறகு அபுனைவு மீது பாராமுகம்தான். 1995-2004 காலகட்டங்களில் ஒரே ஒருமுறை (தி.க.சிவசங்கரன்) மட்டுமே அபுனைவுக்கு விருது வழங்கப்பட்டது. இதைவிடக் கொடுமை, அடுத்த பத்தாண்டுகளில் (2005-2014) ஒருமுறைகூட அபுனைவுக்கு விருது வழங்கப்படவில்லை. 1989-ல் லா.ச.ரா.வின் ‘சிந்தாநதி’ என்ற தன்வரலாற்றுக் கட்டுரை நூலுக்கு விருது வழங்கப்பட்டது. அதற்குப் பிறகான 31 ஆண்டுகளில் (1990-2020) இருமுறை மட்டுமே புனைவல்லாத நூலுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. 2000-ல் தி.க.சிவசங்கரனுக்கும் (’விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள்’), 2015-ல் ஆ.மாதவனுக்கும் (’இலக்கியச் சுவடுகள்’) கொடுக்கப்பட்டது. இதில் பின்னவர் ஒரு புனைகதையாளர். அபுனைவு அவருக்குப் பிரதானம் கிடையாது. அவரது முந்தைய படைப்புகளுக்காகவே இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதனால், இவ்விருதை அபுனைவுக்கு மதிப்பளித்துக் கொடுக்கப்பட்ட விருதாக ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது.

தமிழ்ச் சமூகத்தில் ஆய்வுகளுக்குப் பெரிய அங்கீகாரம் இல்லை. அ.கா.பெருமாள், ‘தமிழறிஞர்கள்’ என்ற நூலில் 40 தமிழ் ஆய்வாளர்கள் குறித்து எழுதியுள்ளார். அதில், பி.ஸ்ரீ.ஆச்சார்யா, கி.வா.ஜகந்நாதன் ஆகிய இருவர் மட்டுமே சாகித்ய விருது பெற்றவர்கள். சாகித்ய விருதுகள் தொடங்கப்படுவதற்கு முன்பே இறந்துபோனவர்கள் அதில் பலர். அவர்களைத் தவிர, ச.வையாபுரி, மு.இராகவன், சோமசுந்தர பாரதியார், தேவநேயப் பாவாணர், பெ.தூரன் உள்ளிட்ட பலர் அகாடமியின் பார்வைக்குப் படாமலேயே போய்விட்டார்கள். இதெல்லாம் கடந்த காலச் சான்றுகள். இனி வரும் காலத்திலும் அப்படி நடந்துவிடக் கூடாது. சமூகவியல், வரலாறு, பண்பாடு குறித்த ஆய்வுகள் சில சமயம் புனைவைவிடக் கடும் உழைப்பைக் கோருபவை.

சாகித்ய அகாடமி அமைப்பு, ‘யுவபுரஸ்கார்’ எனும் விருதை, 35 வயதுக்குட்பட்ட எழுத்தாளர்களுக்கு 2011 முதல் வழங்கிவருகிறது. இதன் தற்போதைய பரிசுத் தொகை ஐம்பதாயிரம். இவ்விருதும் 24 மொழிகளில் வழங்கப்படுகிறது. இந்த விருது புனைவுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற விதியைச் சாகித்ய அகாடமி வரையறை செய்யவில்லை. அவ்வாறு இருக்கும்போது, 2011 முதல் 2020 வரை தமிழுக்கு வழங்கப்பட்ட பத்து ‘யுவபுரஸ்கார்’ விருதுகளில் ஒன்றுகூட அபுனைவுக்கு வழங்கப்படவில்லை. இதிலும் ஐந்து முறை நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. 35 வயதுக்குட்பட்ட ஒரு அபுனைவு எழுத்தாளர்கூடத் தமிழில் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளில் தெலுங்கில் மட்டும் ஒருமுறை (2014) கட்டுரைத் தொகுப்புக்கு ‘யுவபுரஸ்கார்’ விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழில் மட்டும் புறக்கணிப்பு ஏன்? இப்படி இருந்தால், இளம் தலைமுறையினர் ஆய்வுகளின் பக்கம் எப்படி வருவார்கள்?

இந்தக் கட்டுரையின் நோக்கம், புனைவு நூல்களைவிட ஆய்வு நூல்கள் சிறந்தவை என்று நிறுவுவது அல்ல. புனைவுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் புனைவல்லாத எழுத்துக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான். விருதுக்குத் தேர்வாகும் ஒரு படைப்பாளரின் ஒரு நூலை மட்டும் பார்க்கக் கூடாது; அவரின் தொடர்ச்சியான இலக்கியச் செயல்பாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சாகித்ய அகாடமி கூறுகிறது. புனைவெழுத்தாளர்களுக்கு நிகரான ஆய்வாளர்களும் தமிழில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றனர். ஆ.சிவசுப்பிரமணியன், எஸ்.வி.ராஜதுரை, அ.கா.பெருமாள், ராஜ் கௌதமன், அ.மார்க்ஸ், குடவாயில் பாலசுப்ரமணியன், தமிழவன், மு.இராமசாமி, க.பஞ்சாங்கம், க.பூரணச்சந்திரன், பக்தவத்சல பாரதி, அ.ராமசாமி, ஆ.இரா.வேங்கடாசலபதி, ஸ்டாலின் ராஜாங்கம் போன்ற பலரைச் சொல்லலாம். இவர்கள் அனைவரும் அபுனைவில் வெவ்வேறு துறைகள் சார்ந்து இயங்குபவர்கள். வெங்கட் சாமிநாதனுக்கு இனி வாய்ப்பில்லை. ஆனால், தொ.பரமசிவனுக்கும் கோவை ஞானிக்கும் இன்னும்கூட வாய்ப்பிருக்கிறது. இன்குலாப் இறந்த பின் அவருக்கு சாகித்ய அகாடமி செய்த மரியாதையை இந்த ஆண்டு இவர்களில் ஒருவருக்குச் செய்யலாம். தமிழ் சாகித்ய விருதுகளின் ஒட்டுமொத்த விருதுப் பட்டியலில் தொ.பரமசிவனும் கோவை ஞானியும் விடுபட்டால் பெரும் வரலாற்றுப் பிழையாக ஆகிவிடும் என்பதை சாகித்ய அகாடமி உணர வேண்டும்.

- சுப்பிரமணி இரமேஷ், ‘எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: ramesh5480@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x