Last Updated : 11 Dec, 2021 03:07 AM

1  

Published : 11 Dec 2021 03:07 AM
Last Updated : 11 Dec 2021 03:07 AM

நூல் வெளி: எதிர்கால மனிதர்களுக்காக எழுதியவர் பாரதி! - பாரதியாரின் கொள்ளுப் பேத்தி மீரா சுந்தரராஜன் பேட்டி

பாரதியின் நினைவு நூற்றாண்டை உலகத் தமிழர்கள் அனைவரும் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். பேராசிரியரும் எழுத்தாளரும் இசைக் கலைஞருமான மீரா சுந்தரராஜனும் இத்தருணத்தைக் கொண்டாட நினைத்தார். அதன் விளைவு ‘தி கமிங் ஏஜ் – கலெக்ட்டட் இங்க்லீஷ் ரைட்டிங்ஸ்’ (பெங்குயின் பதிப்பகம்) என்ற பாரதியாரின் ஆங்கில எழுத்துகளின் தொகுப்பு. இவர், பாரதியின் கொள்ளுப் பேத்தி என்பது கூடுதல் சிறப்பு. மீரா சுந்தரராஜன் கனடா நாட்டின் குடிநபர். இவரது தாய் விஜயபாரதியும் முக்கியமான பாரதி அறிஞர்களுள் ஒருவர். தனது தாயின் கருப்பையில் இருந்தபோதே தனக்கு பாரதியின் உலகம் அறிமுகமாகிவிட்டது என்று சொல்லிக்கொள்ளும் மீரா சுந்தரராஜனுடன் உரையாடியதிலிருந்து…

தமிழ்ச் சமூகத்தில் பாரதியின் இடம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பாரதியாருக்கு மிகச் சிறப்பான இடத்தை வழங்கித் தமிழ்ச் சமூகம் கொண்டாடியிருக்கிறது. தமிழ்க் கலாச்சாரத்தின் பெருமைப்படத்தக்க அம்சங்கள் பலவற்றையும் அடையாளப்படுத்தும் முன்னோடியாக அவர் இருந்திருக்கிறார். அற்புதமான மேதை! மெய்ம்மையையும் உண்மையையும் காணக்கூடிய மேன்மையான மனது அவருக்கு வாய்த்திருந்தது. ஆனால், அதை அன்றைய சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைதான் இருந்தது.

இன்று மக்கள் அவரை ஒரு தலைவராகவும் தமிழ் மக்களின் கொடையாளராகவும் கருணையாளராகவும் ஞானியாகவும் கருதுகிறார்கள். சக மனிதர்களை எப்படி அணுகுவது, பெண்ணியம், சாதி ஏற்றத்தாழ்வின்மை போன்ற விஷயங்களில் அவரை ஒரு ஞானியாகவே மக்கள் கருதுகிறார்கள். அவரைப் பொறுத்தவரை இந்த விஷயங்களில் சமரசமே கிடையாது. முழுமுற்றான மனித விழுமியங்களை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இந்த விஷயங்களால்தான் அவர் ஒரு முன்னோடியாகவும் நாயகராகவும் முன்மாதிரியாகவும் உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகத்தால், எங்கள் குடும்பம் உட்பட, எல்லோராலும் பெருமையுடன் சொந்தம் கொண்டாடப்படுகிறார்.

பாரதியின் ஆங்கிலப் படைப்புகளைப் பதிப்பிக்கும் திட்டத்தில் நீங்கள் எப்படி ஈடுபடத் தொடங்கினீர்கள்?

1982-ல் பாரதியார் நூற்றாண்டு கொண்டாடப்பட்டபோது பாரதியின் ஆங்கிலப் படைப்புகளுடன் வேறு சிலவும் சேர்த்து ஒரே நூலாக வெளியிடப்பட்டன. அந்த நூல் வெகு காலமாக அச்சில் இல்லை. அது நல்ல முயற்சி என்றாலும் அச்சுப் பிழைகள் உள்ளிட்ட நிறைய பிழைகள் இருந்தன. வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பின்னணித் தகவல்கள் சரியாகக் கொடுக்கப்படவில்லை.

ஆகவே, பாரதியாரின் ஆங்கிலப் படைப்புகளுக்குத் தரமான பதிப்பு கொண்டுவர வேண்டும் என்று 2000-களின் தொடக்கத்தில் என் தாயும் தந்தை பி.கே.சுந்தரராஜனும் விரும்பினார்கள். பாரதியார் கவிதைகளின் செம்பதிப்பை வெளியிட்டாலும் அவரது உரைநடை நூல்களை வெளியிடுவதற்கு முன்பு என் தாய் காலமாகிவிட்டார். பாரதியாரின் ஆங்கிலப் படைப்புகளை வெளியிடும் பணியை ஆங்கிலப் பேராசிரியரான என் அப்பா எடுத்துக்கொண்டார். அந்தத் தொகுப்புக்கு நான் எடிட்டராக இருக்க வேண்டும் என்று என் தந்தை கேட்டுக்கொள்ளவே நானும் ஒப்புக்கொண்டேன்.

பாரதியின் தமிழ்ப் படைப்புகளுக்கும் ஆங்கிலப் படைப்புகளுக்கும் என்ன வேறுபாடு?

தமிழ்ப் படைப்புகளில் வெளிப்பட்ட அதே பாரதிதான் ஆங்கிலப் படைப்புகளிலும் வெளிப்படுகிறார். அதே நேரத்தில், இந்தக் கட்டுரைகளை அவர் யாருக்காக எழுதினார் என்ற கேள்வி எனக்கு எழுகிறது. அவருடைய காலத்து மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல், அவரது எதிர்கால மனிதர்களான நமக்காகவும் இந்தப் படைப்புகளை எழுதியதாக எனக்குத் தோன்றுகிறது. இந்தியக் கலாச்சாரம், தமிழ்க் கலாச்சாரம் போன்றவற்றைப் பற்றி நமக்கு அவர் இந்தக் கட்டுரைகளில் நிறைய சொல்லித்தருகிறார். அவர் எழுதிய விஷயங்களின் பன்மைத்தன்மை வியப்பளிக்கிறது.

பாரதி அறிஞர்களின் பணிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பாரதி அறிஞர்கள் மகத்தான பணியைச் செய்துவந்திருக்கிறார்கள். பாரதியின் பல படைப்புகளைக் கண்டுபிடித்து மக்களிடம் கொண்டுசேர்த்திருக்கிறார்கள். இதற்காக, அவர்களை எல்லோரும் ஊக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் மேலும் இந்தத் துறையில் அவர்கள் மிகுந்த உத்வேகத்துடன் செயல்படுவார்கள்.

பாரதியின் மனைவி செல்லம்மாள், மூத்த மகள் தங்கம்மாள், இளைய மகள் சகுந்தலா, என் தாய் விஜயபாரதி ஆகியோர் பாரதியார் தொடர்பாக மகத்தான பணிகளை ஆற்றியிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது குறித்து வருந்துகிறேன். பெண்களை ஒதுக்கும் போக்கு ஆய்வுத் துறையிலும் இருப்பதுதான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். அவர்களின் பணிகளுக்கும் சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

தற்காலத்தில் முன்வைக்கப்படும் தேசியவாதத்துடன் பாரதியின் தேசியவாதத்தை ஒப்பிட முடியுமா?

பாரதி காலத்து தேசியவாதமும் தற்காலத் தேசியவாதமும் வேறுபட்டவை. பாரதியின் தேசியவாதம் நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பானது. இந்திய விடுதலைக்காகப் பாடுபடும், இந்திய விடுதலையை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் தேசியச் சமூகத்தின் அங்கம் என்றே பாரதியார் கருதினார். மற்ற எல்லா விஷயங்களும் இரண்டாம்பட்சம்தான் என்றும் கருதினார். மதம், இனம் போன்றவை மக்களின் தனிப்பட்ட விஷயங்கள் என்றும் நாட்டுக்காக உழைக்கும் அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்றும் கருதினார்.

அவருடைய தேசியவாதம் ஒருபோதும் ஆதிக்கக் குணத்தைக் கொண்டிருக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் நான் பாரதியாரைப் படித்துவந்திருக்கிறேன். நம் கலாச்சாரத்தை உயர்த்திச் சொல்ல வேண்டும் என்பதற்காகப் பிற கலாச்சாரங்களை அவர் தாழ்த்திச் சொன்னதே இல்லை. மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என்று அவர் எண்ணினார். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தியக் கலாச்சாரத்தின் மேன்மை, தொன்மை, தனித்துவமான சாதனைகள், பங்களிப்புகள் ஆகியவை உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படவும் மதிக்கப்படவும் வேண்டும் என்பதுதான் அவர் விரும்பியது. பாரதியாரின் தேசியவாதம் விரிந்தது, அதை மனிதம் என்றும் சர்வதேசியம் என்றும் கூறலாம். உலக நாடுகளிடையே சமத்துவம் நிலவ வேண்டும் என்று அவர் விரும்பினார்.

ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரப் பன்மைத்துவமும் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். இதுதான் இன்றைக்குத் தங்களை தேசியவாதிகள் என்று சொல்லிக்கொள்வோருக்கும் பாரதிக்கும் இடையே உள்ள வேறுபாடு. உலகம் முழுவதும் தான் அறியப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்; உலகம் முழுவதும் உள்ள மக்களுடன் தொடர்புகொண்டு அவர்களுடன் உரையாடல் மேற்கொள்ள அவர் விரும்பினார்; உலகெங்கும் பயணம் செல்லவும், உலகக் குடிமகனாகவும், உலகின் இந்தியக் குடிமகனாகவும் ஆக விரும்பினார்.

பாரதியின் ஆன்மிகத்தை எப்படி விளக்குவீர்கள்?

ஆன்மிகம் என்பது பாரதியின் அடிப்படை. அது அவரது தமிழ்ப் படைப்புகளில் வெளிப்பட்டிருப்பதைப் போலவே ஆங்கிலப் படைப்புகளிலும் வெளிப்பட்டிருக்கிறது. பாரதி தமிழ்க் கவிமரபின், தமிழ்-இந்திய மரபின் ஆன்மிக வாரிசாகத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டுவருகிறார். இந்தப் பின்னணியில் அவரை நான் ஒரு நவீன யோகியாகக் கருதுகிறேன். மரபிலிருந்து ஆன்மிகத்தைத் தேடி, அகழ்ந்து அதனை நவீனமான தன் கவிதைகளுக்குச் செலுத்தினார்.

எனினும், அவர் தனது ஆங்கில எழுத்துகளில் ஒரு தனிப்பட்ட ஆன்மிக மரபை மட்டும் மற்றவற்றைவிட உயர்வானதாக முன்வைக்கவில்லை என்பது தெளிவு. அவர் ஒரு கட்டுரையில் மதப் பன்மைத்துவம் தவிர்க்க முடியாதது என்றும், அவசியமானது என்றும் கூறுகிறார். தெய்விக சக்தியானது இயற்கை, மெய்ம்மை என்று எல்லாவற்றிலும் ஊடுருவியிருப்பதாக அவர் கருதினார். இறைமையை அவர் எங்கெங்கும் கண்டார். அன்னை பராசக்தி இயற்கையின் வழியே தன்னைக் காட்டிக்கொள்கிறாள் என்று எழுதியிருக்கிறார்.

எல்லாத் தளைகளிலிருந்தும் விடுதலை பெற விரும்பியவர் பாரதி. இவ்வகையில், அவரை நீங்கள் யாருடன் ஒப்பிடுவீர்கள்?

பாரதியின் விடுதலை வேட்கை அவரை உலகக் கவிஞர்களில் தனித்துவமானவராக ஆக்குகிறது. பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் விடுதலை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்திருக்கிறார்கள், பாரதியின் ஆதர்சக் கவிஞர்களுள் ஒருவரான ஷெல்லியும் அவர்களில் ஒருவர். சோவியத் காலகட்டத்தில் நிலவிய ஒடுக்குமுறையின்போது எழுதிய ரஷ்ய எழுத்தாளர்களும் விடுதலைக்கான பெரும் வேட்கை கொண்டிருந்தார்கள்.

எனினும் விடுதலைக்கான பாரதியின் காதல் தனித்துவமானது என்று நினைக்கிறேன். ஏனெனில், விடுதலை என்ற கருத்தாக்கம்தான் அவரைப் பல தளங்களில் இயக்கிய ஒன்றாகும். தனிப்பட்ட நிலையிலிருந்து காலனியாதிக்கத் தளை, மூடநம்பிக்கைகள், ஏற்றத்தாழ்வு என்று வாழ்க்கையின் மகிழ்ச்சியை முடக்கிப்போடும், தெய்விகத் தன்மையைத் தடுக்கும் எதிலிருந்தும் விடுதலை பெற வேண்டும் என்று அவர் நினைத்தார். விடுதலைக்கு ஏங்குதல் என்பது அவருடைய டி.என்.ஏ.வின் ஒரு அங்கம். இது மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது, விளக்க முடியாதது.

பாரதியின் கவிதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?

இதுதான் இதுவரை நீங்கள் கேட்டதிலேயே மிகவும் கடினமான கேள்வி. இந்தத் தருணத்தில் ‘காட்சி’ என்ற வசன கவிதையைச் சொல்வேன். மிகவும் அற்புதமான வகையில் எளிமையான ஆனால், செறிவான சொற்களில் இயற்கை, மனித வாழ்க்கை, உலகம் குறித்த ஆழமான உண்மைகளைப் பற்றி அந்தக் கவிதையில் பேசியிருக்கிறார். அது மட்டுமல்ல, ‘காட்சி’ கவிதையில் ஒரு கவிப் பாணியை அவர் மேற்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. இந்தப் பாணியை, தன்னுடைய வேத வாசிப்பின் விளைவாக அவர் கற்றுக்கொண்டிருக்கலாம். மந்திரம் போன்ற தன்மை அந்தக் கவிதையில் காணப்படுகிறது. அற்புதமான சொற்கள், காட்சிகள் மூலமாக வாசகருக்குப் பரவச நிலை ஏற்படும் வகையில் பாரதி அந்தக் கவிதையைக் கட்டமைத்துக்கொண்டே போகிறார்.

பாரதியின் கவிதைகள் மொழிபெயர்க்க முடியாதவையா?

பாரதியின் படைப்புகள் ஆங்கிலத்துக்குப் பலராலும் மொழிபெயர்க்கப்பட்ட விதம் குறித்துச் சொன்னால், அவை பெருந் தோல்விகளாகவே முடிந்தன. அதனால், பாரதியின் கவிதைகள் மொழிபெயர்க்க முடியாதவை என்று அர்த்தமல்ல. தமிழ் மூலத்தில் உள்ள படைப்பு மிகவும் செழுமையாக இருக்கும்போது, அந்தக் கடினத்தன்மையில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏனெனில், மொழியின் அனைத்துச் செழுமையையும் அந்தப் படைப்பு கொண்டிருக்கிறது. ஒரு மகத்தான மனதின் செழுமை அதில் இருக்கிறது. கவிதையின் செழுமையும் அதில் இருக்கிறது. அதுவே மொழிபெயர்ப்பாளருக்கு மிகுந்த சவாலைத் தருகிறது. எதிர்காலத்தில் பாரதியின் கவிதையை மொழிபெயர்க்கவிருப்பவர்கள், நானும் அவர்களில் ஒருவராக இருப்பேன் என்று நம்புகிறேன். அந்த மொழிபெயர்ப்புகளுக்குக் கவித்துவச் செறிவூட்டக் கூடியவர்களாகவும், இரண்டு மொழிகளையும் அவற்றின் கலாச்சார மரபுகளையும் பற்றி நன்கு அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

தி கமிங் ஏஜ் – கலெக்ட்டட் இங்க்லீஷ் ரைட்டிங்ஸ்

சி.சுப்பிரமணிய பாரதி

பெங்குயின் புக்ஸ், குருகிராம், ஹரியாணா

விலை: ரூ. 399

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x