Last Updated : 11 Dec, 2021 03:07 AM

 

Published : 11 Dec 2021 03:07 AM
Last Updated : 11 Dec 2021 03:07 AM

சிறுவர்களுக்குத் தத்துவக் கல்வி ஏன் அவசியம்?

சிறுவர்களுக்குத் தத்துவமா என்று அதிர்ச்சியில் வீழ்பவர்களுக்கு நூலை நாமாக முயன்று நியாயப்படுத்திக் காட்ட வேண்டியதில்லை. நூலின் அவசியம், அவசரம் பற்றி சுந்தர் சருக்கை சொல்வதை நாம் சுருக்கித் தரலாம்:

நம் கல்வி முறை (கவனிக்கவும் — ஏதோ ஒரு குறிப்பிட்ட கல்வித் திட்டமல்ல), இதர பாடங்களைவிட அறிவியல் பாடங்களை முக்கியமாகக் கருதுகிறது. விரல் சொடுக்கில் அளவுக்கு அதிகமான தகவல்கள் மாணவர்களுக்கு இப்போது எட்டுகின்றன (தகவல்கள் அறிவாக மாற அவை இன்னொரு கட்டத்தைத் தாண்ட வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள்). இவற்றால் கற்றுக்கொள்வதன் தன்மை மாறியிருக்கிறது.

கல்வி முறையின் அங்கமாகவே இருக்கும் அழுத்தம், அச்சம், போட்டி மனப்பான்மை ஒரு இணக்கமான, சமத்துவமான சமுதாயம் உருவாகத் தடைகளாக இருக்கும். இந்த நூல் மாணவர்களுக்கு இன்னொரு பாடமாக அமையாமல், மற்ற பாடங்களை ஆழமாகக் கற்கும் திறனைத் தரும். இங்கே காட்டும் தத்துவ அடிப்படையில் சிந்திப்பது அவர்களை மேலும் சுதந்திரமானவர்களாகவும், எதையும் விமர்சன நோக்கில் பார்க்கக்கூடியவர்களாகவும், படைப்பூக்கம் உள்ளவர்களாகவும் மாற்றும். ஆக, சுந்தர் சருக்கையின் இந்த நூல், நம் கல்விமுறையின் நச்சுக்கு ஒரு முறிமருந்து என்று கொள்ளலாம்.

அவர் குறிப்பிடும் தத்துவம் சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் போன்ற தத்துவஞானிகளின் தத்துவங்கள் அல்ல. ஒன்று நமக்குத் தெரியும் என்று நினைக்கும்போது, தெரியும் என்ற முடிவுக்கு நாம் எப்படி வந்துசேர்கிறோம் என்று சிந்திப்பதே தத்துவம்தான். இது உண்மை, இது பொய் என்று பிரிக்கும்போதும் நமக்குள் தத்துவ அடிப்படை ஒன்று செயல்படுகிறது. இப்படி, தத்துவம் நாம் அன்றாடம் கற்றுக்கொள்பவற்றின் அங்கமாக, சிந்திக்கும் வழிமுறையாக இருக்கிறது.

பார்க்கத் தகுந்தது எது, தகாதது எது என்று சுந்தர் சருக்கை சொல்வதில்லை. பார்க்கும்போது பார்த்தல் என்ற அந்தச் செயலில் என்னென்ன நிகழ்கிறது என்று கவனிக்கச் சொல்கிறார். பச்சையாக இருக்கும் இலை பழுப்பாக மாறுவதைப் பார்த்தாலும் அதை ஏன் நாம் அதே இலை என்று சொல்கிறோம்? கண்களை மூடித் தூங்கினாலும் கனவில் வருவதைப் ‘பார்த்தோம்’ என்று எப்படிச் சொல்கிறோம்?

இப்படி கேள்வியும், அதற்கு விடையாக அடுத்து வரும் ஒரு கேள்வியுமாக சுந்தர் சருக்கை தன் நூலை அமைத்திருக்கிறார். கணக்குப் போடும்போதும், தேர்வு எழுதும்போதும் மட்டும்தான் சிந்திக்கிறோம் என்றில்லை. நாம் சிந்திக்காத நேரம் ஏதேனும் உண்டா என்று சோதித்துப் பாருங்கள். நம்மோடு நடத்திக்கொள்ளும் உரையாடலைத்தானே சிந்திப்பது என்று நாம் சொல்கிறோம்? நிறைய சொற்களைத் தெரிந்துவைத்திருப்பவர் நல்ல சிந்தனையாளரா? நிறைய கருத்தாக்கங்களைத் தெரிந்தவர் அவரைவிட ஆழமாகச் சிந்திக்கக் கூடியவர்தானே?

படிப்பது என்பது ஒரு கருத்து நம்மை எப்படி அடுத்து வரும் கருத்துக்கு அழைத்துச்செல்கிறது என்ற தர்க்கத் தடத்தைத் தெரிந்துகொள்வதுதான். சிந்தித்தல் என்பது ஒரு புள்ளியிலிருந்து அடுத்த புள்ளிக்கு நகர்வது என்றால், படிப்பதும் எழுதுவதும்கூட அதுவேதான். எல்லாவற்றையும் தொடுதல், முகர்தல் போன்ற புலன்வழிச் செயல்களால் அறிந்துகொள்கிறோம் என்றால் ஏழு, எட்டு, என்ற எண்களை முகர்ந்தோ ருசித்தோவா அறிந்துகொள்கிறோம்? புற உலகிலிருந்து புலன் வழியாகப் பெறாத அறிவும் உள்ளுக்குள் செயல்படுகிறது.

ஒரு வகுத்தல் கணக்கைச் செய்து சரியான ஈவு கண்டுபிடித்தாலும் ஒரு ஓவியத்தைப் பார்த்தாலும் அற்புதம் என்கிறோம். இந்த இரண்டு அற்புதங்கள் தரும் மகிழ்ச்சியும் ஒரே தன்மையானவையா? நல்லவராக இருப்பது என்பது நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பது இல்லை என்று தெரியும். இருந்தாலும், நல்லவராக இருக்க முயல்கிறோம். நமக்கு இது தகாது என்று யாரும் சொல்லித்தராவிட்டாலும் நாம் இன்னொருவரைக் காயப்படுத்த மாட்டோம். அப்படியானால், உயரம், எடை போன்றே தார்மிகப் பண்புகளும் நம்மிடமே உள்ளார்ந்தவையாக இருப்பவைதான். கேள்விகளைக் கொண்டே சுந்தர் சருக்கை தர்க்க முடிவுகளுக்கு நாமாகவே வரச்செய்கிறார்.

இவை ஒவ்வொன்றும் வரலாற்றில் தனித்தனித் தத்துவ மரபுகளாகவே வளர்ந்துள்ளன. சுந்தர் சருக்கை அவற்றைக் கருத்துச் செறிவு குறையாமல் எளிமையாக்குகிறார். சிறுவர்களுக்குத் தகுந்த நூலின் மொழிநடைக்குக் குறை ஏதும் இல்லாமல் மொழிபெயர்த்திருக்கிறார்கள் த.ராஜனும், சீனிவாச ராமாநுஜமும். விவாதம் அடுத்து எந்தப் புள்ளிக்கு நகரும் என்பதை வாசிப்பவர்கள் எதிர்பார்ப்பார்கள் என்ற கற்பனைத் திறத்தோடு நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது. சித்திரங்களும் வடிவமைப்பும் அந்த ஓட்டத்தை உணர்வுபூர்வமாக உள்வாங்கிக்கொண்டவை. நூலுக்கு அறிமுகமாகும் சிறுவர்கள் புதிய தலைமுறையின் தொடக்கமாக இருப்பார்கள்.

- தங்க.ஜெயராமன், ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com

சிறுவர்களுக்கான தத்துவம்

சுந்தர் சருக்கை

தமிழில்: த.ராஜன், சீனிவாச ராமாநுஜம்

எதிர் வெளியீடு, பொள்ளாச்சி – 642002

விலை: ரூ.300

தொடர்புக்கு: 9942511302

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x