

கவிஞர் யுகபாரதிக்கு சிற்பி அறக்கட்டளை வழங்கும் ‘சிற்பி இலக்கிய விருது’ அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிற்பி அறக்கட்டளையின் வெள்ளிவிழா ஆண்டில் இந்த விருதை யுகபாரதி பெறுகிறார். இந்த விருது ரூ.1 லட்சம் பரிசுத் தொகையையும் நினைவுக் கேடயத்தையும் உள்ளடக்கியது. விருது வழங்கும் விழாவும் கவிஞர் சிற்பியின் 85-ம் ஆண்டு நிறைவு விழாவும் டிசம்பர் 30 அன்று பொள்ளாச்சியில் நடைபெறுகின்றன. இந்த இரண்டு விழாக்களிலும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சு.வெங்கடேசன், க.பஞ்சாங்கம், பி.கே.கிருஷ்ணராஜ், இந்திரன், த.செ.ஞானவேல் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கிறார்கள். சிற்பிக்கும் யுகபாரதிக்கும் வாழ்த்துகள்!
ஸீரோ டிகிரி - தமிழரசி அறக்கட்டளை விருதுகள்
ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கும் தமிழரசி அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது பேராசிரியர் அ.மார்க்ஸுக்கு இன்று வழங்கப்படுகிறது. அவரை வாழ்த்திக் கல்வியாளர் பிரபா கல்விமணி, சாரு நிவேதிதா, ந.முருகேசபாண்டியன் ஆகியோர் பேசுகிறார்கள். அது மட்டுமல்லாமல், ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கும் தமிழரசி அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் இலக்கிய விருது – 2021 பரிசளிப்பு விழாவும் அன்று நடைபெறுகிறது.
நாராயணி கண்ணகியின் ‘வாதி’, கனகராஜ் பாலசுப்பிரமணியத்தின் ‘அல் கொஸாமா’, வாசு முருகவேலின் ‘மூத்த அகதி’, அபுல் கலாம் ஆசாதின் ‘உடல் வடித்தான்’, கணேசகுமாரனின் ‘சொர்க்கபுரம்’ ஆகிய 5 நாவல்களிலிருந்து முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளுக்குரிய நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான விருதுகளை வழங்கும் விழாவும், விருதுக்கான நெடும் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்களின் வெளியீடும் அன்றே நடைபெறவிருக்கிறது. விருதாளர்களுக்கு வாழ்த்துகள்! விழா நடைபெறும் இடம்: எழும்பூரில் உள்ள ஹோட்டல் அம்பாசடர் பல்லவா, நேரம்: இன்று மாலை 6.30.
கடிதம் வழியே இலக்கியம்…
கடிதத்தின் வழியே கவிதைகளுக்காக ‘வெளிச்சம்’ இலக்கியச் சிற்றிதழை நடத்திக்கொண்டிருக்கிறார் புதுவையைச் சேர்ந்த எழுத்தாளர் பாரதி வசந்தன். கடிதங்கள் வழக்கொழிந்துவிட்ட தற்காலத்தில் இது வியப்பளிக்கும் ஒன்றாகும். ஒருகாலத்தில் கி.ரா. தனது நண்பர்களுடன் தனிச்சுற்றில் கையெழுத்துக் கடித இதழ் ஒன்றை நடத்தினார். திருச்சியிலிருந்து தாமோதரக் கண்ணன் ஹைக்கூ கவிதைகளுக்காக ‘பாரதி’ என்ற கடித இதழும், குளித்தலையிலிருந்து வலம்புரி லேனா ‘மதுமலர்’ என்ற கடித இதழும் நடத்தினார்கள். 1990-ல் பாரதி வசந்தன் தொடங்கிய ‘வெளிச்சம்’ இதழைச் சிறுசிறு இடைவெளிகளில் தொடர்ந்து 30 ஆண்டுகளாக நடத்திக்கொண்டிருக்கிறார்.
இந்த இதழில் அமுதபாரதி, அய்யப்ப மாதவன், தமிழ்மகன், பொன்.குமார், ஆங்கரை பைரவி, பாப்லோ அறிவுக் குயில், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் உள்ளிட்ட பலரும் பங்களித்திருக்கிறார்கள். ஒவ்வொரு இதழுக்கும் ஒரு ஆளுமை தலையங்கம் எழுதுவார். கடந்த அக்டோபர் இதழில் கவிஞர் முத்துலிங்கம் தலையங்கம் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு இதழுக்கும் ஆயிரம் உள்நாட்டு அஞ்சல்களை வாங்கி, அவற்றில் அச்சடித்து எழுத்தாளர்கள், நண்பர்கள், வாசகர்களுக்கு பாரதி வசந்தன் அனுப்புகிறார்.
“ஆசிரியர் குழு என்றால் நானும், என் மனைவியும் பிள்ளைகளும்தான். அவர்கள்தான் பசை தடவி ஒட்டுவார்கள். முகவரி எழுதுவார்கள். பலரும் கேட்பதுண்டு... ஏன் இதை நடத்துகிறீர்கள் என்று. வாசகர்களுக்கு என் அன்பைத் தெரிவிப்பதற்கு ஒரு வழிமுறை இது. நான் எழுத வந்த பொன்விழா ஆண்டு இது என்பதால், உடல்நலம் குன்றியிருந்தால்கூட இந்தக் கடித இதழைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற உற்சாகம் கூடியிருக்கிறது” என்கிறார் பாரதி வசந்தன். வாழ்த்துகள் பாரதி வசந்தன்! தொடர்புக்கு: 9443338608.
தகடூர் புத்தகப் பேரவையின் ஜூம் கூட்டங்கள்
தகடூர் புத்தகப் பேரவை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு இணைய வழியில் நல்ல நூல்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்திவருகிறது. அந்த வரிசையில் வரும் வாரங்களில் ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகளான ‘கற்பிதம் அல்ல பெருமிதம்’ (ஆசிரியர் மா), ‘விழுவது எழுவதற்கே’ (ஆசிரியர் எஸ்.எல்.வி. மூர்த்தி) ஆகிய இரண்டு நூல்களும் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. நூலாசிரியர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார்கள். நேரம்: இரவு 8 மணி. நிகழ்ச்சியில் இணைவதற்கு Zoom ID: 9805204425. பாஸ்வேர்டு தேவை இல்லை.
புத்தகக்காட்சி
மடிப்பாக்கம் புத்தகக்காட்சி: மதுரை மீனாட்சி புத்தக நிலையமும் ‘இந்து தமிழ் திசை’யும் இணைந்து நடத்தும் புத்தகக்காட்சி கடந்த 12-ம் தேதி சென்னை மடிப்பாக்கத்தில் தொடங்கியது. இந்தப் புத்தகக்காட்சி நாளை வரை நடைபெறுகிறது. இந்தப் புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’யின் வெளியீடுகள் உட்பட அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. இடம்: செல்லம்மாள் சக்தி திருமண மாளிகை, மேடவாக்கம் பிரதான சாலை, மடிப்பாக்கம். நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை. தொடர்புக்கு: 9443262763.
களத்தில் இறங்கும் விஜய் மகேந்திரன்
எழுத்தாளர் விஜய் மகேந்திரன் ‘கடல் பதிப்பகம்’ என்ற புதிய பதிப்பகத்தைத் தொடங்குகிறார். மதுரையில் நாளை நடைபெறும் இதற்கான தொடக்க விழாவில், ந.முருகேச பாண்டியன், பா.தேவேந்திர பூபதி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள். இந்த விழாவில் விஜய் மகேந்திரனின் ‘இங்கேயும் இருக்கிறார்கள் மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பு, அதீதனின் ‘மேதகு அதிகாரி’ கவிதைத் தொகுப்பு, மஞ்சுளாவின் ‘வாகை மரத்தினடியில் ஒரு கொற்றவை’ ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்படவுள்ளன. விழாவில் வெளியிடப்படும் நூல்கள் குறித்துக் கவிஞர்கள் வசுமித்ர, ஆத்மார்த்தி, எழுத்தாளர் நவீனா உள்ளிட்டோர் கருத்துரை ஆற்றவுள்ளனர். முன்பதிவுச் சலுகைத் திட்டத்தின் கீழ் இம்மூன்று நூல்களையும் 20% தள்ளுபடி விலையில் ரூ.350-க்கு வாசகர்கள் வாங்கிக்கொள்ளலாம். விழா நடைபெறும் இடம் மதுரை காக்காதோப்பு தெருவில் உள்ள ஸ்ரீராம் மெஸ் மீட்டிங் ஹால்; நேரம்: மாலை 5.00 மணி. தொடர்புக்கு: 8680844408
பஞ்சு பரிசில்
பேராசிரியரும் எழுத்தாளருமான க.பஞ்சாங்கத்தின் பெயரில் ‘பஞ்சு பரிசில்-2021’ என்றொரு விருது உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்விருது ரூ.10 ஆயிரம், நினைவுக் கேடயம், சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இலக்கியம், இலக்கணம், மொழியியல், வரலாறு, நுண்கலைகள், தொல்லியல், நாட்டுப்புறவியல், மானுடவியல் ஆகிய துறைகளில் எழுதப்பட்ட திறனாய்வு நூல்களை (ஒரு நூலின் ஒரு படியை) இந்த விருதுக்கு அனுப்பலாம். 2021 ஜனவரியிலிருந்து 2022 ஜனவரிக்குள் வெளியிடப்பட்ட புத்தகங்களாக இருக்க வேண்டும் என்பது விதிமுறை. நூல்கள் வந்துசேர வேண்டிய இறுதி நாள்: 20.01.2022. தொடர்புக்கு: பாரதிபுத்திரன், 94442 34511.