Last Updated : 08 Mar, 2016 12:42 PM

 

Published : 08 Mar 2016 12:42 PM
Last Updated : 08 Mar 2016 12:42 PM

கதாநதி 8: மா.அரங்கநாதன் - நவீன எழுத்து யோகி

1932-ல் பிறந்த நாஞ்சில் நாட்டு மண் மணத்துக்கும் மொழிக்கும் சொந்தக்காரர் மா.அரங்கநாதனுக்கு இப்போது வயது 84-தான். அவர் ஞானத்துக்கும் மக்கள் திரள் மேல் அவர் வைத்திருக்கும் வாஞ்சைக்கும் வயது பல்லாயிரம். சில ஆண்டுகளுக்கு முன்னால், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று மா.அரங்கநாதனைக் குறிப்பிட்டிருந்தேன். இப்போது அவருடைய 90 சிறுகதைகளும், இரண்டு நாவல்களும், கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு, ‘மா.அரங்கநாதன் படைப்புகள்' என்ற பெயரில் ‘நற்றினை’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்தப் பெரும் புத்தகத்தை ஒருசேரப் படித்த பிறகு தமிழின் மிகச் சிறந்த சிறுகதையாளர், படைப்பாளி அவர் என்று தோன்றுகிறது.

இரண்டு கதைகளைப் பார்த்து விட்டு அவரின் பொதுவெளிக்குச் செல்வோம்.

அவன் ஓடிக் கொண்டிருந்தான். ஓடுவதில் அவன் மகிழ்ச்சி அடைந் திருந்தான்.

அவனுக்குப் பெரியவர் ஒருவரின் முகவரி தரப்பட்டு அவரைச் சந்திப்பது அவனுக்கு நலம் பயக்கும் என்று சொல்லப்பட்டது. அவன் அவரைச் சந்தித்தான். இந்த நாடு இளைஞர்களை நம்பித்தான் இருக்கிறது என்கிறார் அவர். அவன் நடந்து வந்தபோதே அவருக்கு என்னவோ தோன்றியது. ‘ஏன் இத்தனை நாள்? முன்பே ஏன் வரவில்லை’என்று கேட்கவும் எண்ணினார்.

பெரியவருக்கு வயது 60 இருக்கும். விளையாட்டு விஷயங்களில் தன்னை மூழ்கடித்துக் கொண்டவர். அந்த நாட்டின் எல்லாச் செய்தித்தாள்களிலும் அவர் புகைப்படம் வந்திருக்கும். ‘‘நான் என் நாட்டுக்காக என் விளையாட்டுக் கலையை அர்ப்பணித்தவன்” என்று அவர் சொன்னார்.

அவர் அவனுக்கு விளையாட்டுப் பயிற்சி அளித்தார். விடிவதற்கு முன் எழுந்து அவன் ஓடத் தொடங்கினான். நெடுஞ்சாலையில் ஓடும் பழக்கம் கொண்டான். தம்பியைத் தோளில் வைத்துக்கொண்டு ஓடிப் பயிற்சி பெற்றான். பெரியவர் அவன் சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்தார். கொழுப்பற்ற உணவு வகைகள் அவனுக்குத் தரப்பட்டன.

வீடியோவில் உலக வீரர்கள் பற்றி அவனுக்குப் போட்டுக் காட்டப்பட்டது. ஒரு மல்யுத்தப் போட்டியில் வேற்று அணி நாட்டுக்காரன் குத்துவாங்கி மூக்கு நிறைய ரத்தம் வருகையில் பார்த்தவர்களின் சத்தம் - அதோடு இடையே ஒரு பார்வையாளன் முடிந்து விட்ட தனது சிகரெட் துண்டை ஆக்ரோஷத்துடன் கீழே நசுக்கி துவம்சம் செய்தல் -இவ்வகைக் காட்சி களைக் கண்டு முடிக்கையில் அவன் தனக்குள் ஏதோ ஒன்று ஏற்பட்டிருப் பதாக உணர்ந்தான். அன்றிரவு தொலைக்காட்சியில் ‘இந்த நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்’ என்று அவன் அறிமுகப்படுத்தப்பட்டான்.

ஆனால் நெடுஞ்சாலையில் அவன் அதிகாலை ஓட்டம் தொடர்ந்தது. 22 மைல் ஒடி இருக்கிறான். உலக ரிகார்டை அவன் நெடுஞ்சாலையிலேயே முறி யடித்துவிட்டான் என்று பெரியவர் சொல்லி மகிழ்வார். ‘ஒரு மராத்தான் தேறிவிட்டான். இந்த நாடு தலை நிமிரும்’ என்று பத்திரிகை நிருபர்களிடம் சொல்லி மகிழ்ந்தார்.

அவன் பெயர் முத்துக்கருப்பன் அடுத்த ஒலிம்பிக் வீரன் என்று பத்திரிகைகள் எழுதின அன்றுதான் அதிகாரபூர்வமாக ஒலிபரப்பாக இருந்தது. கையில் சுருட்டுடன் பெரியவர் சற்று தூரத்தில் அமர்ந்திருந்தார்.

பேட்டி தொடங்கியது.

‘‘நீங்கள் போட்டியிடும் வீரராக-ஒலிப்பிக்கில் கலந்துகொண்டால் மகிழ்ச்சிதானே?’’

‘‘எனக்கு ஓடுவதில் ரெம்பவும் மகிழ்ச்சி!’’

‘‘நமது நாட்டுக்குப் பெருமை தேடித் தருவீர்கள் அல்லவா?’’

‘‘ஓடுவது ரொம்பவும் நன்றாக இருக்கிறது…’’

‘‘போன ஒலிம்பிக்கில் வென்ற வீரர் பற்றி உங்கள் கருத்து?’’

‘‘ஓடுபவர்கள் எல்லோருமே மகிழ்ச்சி அடைவார்கள்.’’

‘‘நமது நாடு விளையாட்டில் முன் னேறுமா..?’’

அவன் பேசாதிருந்தான். பெரியவர் தலை குனிந்திருந்தார்.

அவன் மீண்டும் சொன்னான்:

‘‘எனக்கு ஓட மட்டுமே தெரியும். அதிலே எனக்குக் கிடைப்பதுதான் நான் ஓடுவதற்குக் காரணம். நான் எனக்காகவே ஓடுகிறேன். ஓட்டத்தின் சிறப்புத்தான் அதன் காரணம். நான் பொய் சொல்ல முடியாது. எனக்கு வேறேதுவும் தெரியாது.’’

பெரியவர் சுருட்டைக் கீழே போட்டு நசுக்கித் தள்ளினார்.

பேட்டி முடிந்தது.

பெரியவர் காரின் கதவைத் திறந்தார்.

அவன் வெகு தூரத்துக்கு அப்பால் இருந்த குன்றுகளைப் பார்த்தவாறே அவரிடம் கெஞ்சலுடன் கூறினான்.

‘‘இந்த அருமையான நிலவில் ஓட முடிந்தால் எப்படி இருக்கும் என்கிறீர்கள்?’’

‘‘நன்றாக இருக்கும். வேண்டுமானால் நீ இப்பவே ஓடு. அந்தக் குன்றின் உச்சிக்கே போய் அங்கிருந்து கீழே குதித்துச் செத்துத் தொலை…’’

இக்கதையின் தலைப்பு ‘சித்தி’. ஓடுபவனாகிய அவன், தன்னை ஓட்டத் தில் இனம் காண்கிறான். ஓட்டம் வேறு அவன் வேறல்ல. ஓட்டத்துக்குள் அவனும்; அவனுக்குள் ஓட்டமும் இருக்கும்போது, ஓட்டம் அவனுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவே அவன் சித்தம். ஓட்டத்தை மட்டுமே அவன் அறிவான். அவன், அவனுக்காகவே ஓடுகிறான். ‘சித்தத்தைச் சிவன்பால் வைத்தல்’ என்பார்கள் சைவர்கள். அவன் ஓட்டத்தில் வைத்தான். விஷயம் எதுவானால் என்ன? தன்னையே அர்ப் பணிப்பு செய்கிறவனுக்குக் கற்பூரம், ஆரத்தி, மாலை மரியாதை என்னத் துக்கு? பெரியவர், கரடிக்குச் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கிறார். யானையை ஸ்டூலின் மேல் நிற்கச் சொல்கிறார். மனசுக்குள் காடுள்ள மிருகத்தை யார்தான் பழக்க முடியும்? இதுதான் பிரச்சினை.

குழந்தைகள் விளையாட்டை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு குழந்தை ‘‘கைப் பொம்மைக்கு ஜுரம்; ஐயோ, டாக்டர் என் குழந்தையைப் பாருங்களேன்” என்று சொல்லும். இன் னொரு குழந்தை டாக்டராக இருந்து மருந்து எழுதிக் கொடுக்கும். பொம்மை யின் தாயான குழந்தையின் முகத்தைப் பார்த்திருக்கிறீ்ர்களா? சோகம் வடியும். இதுதான் ‘சித்தி’. தானே அதுவாக ஆதல். வீரன் என்பவனுக்குத்தான் வில்லும் அம்பும் தேவை. சுத்த வீரனுக்கு அது தேவை இல்லை.

மா.அரங்கநாதன் நம்மை யோசிக்கச் சொல்கிறார். அவர் கதையில் பல பாத்திரங்கள் நட்சத்திரத்தை, வானத் தைப் பார்த்துக்கொண்டு அப்படியே நிலைகுத்தி இருப்பார்கள்.

அந்தச் சுற்றுலாக் குழுவுக்கு 20 பேர்தான் என்று முதலில் தீர்மானம். 21 நல்ல நம்பர் என்பது குழுத் தலைவரின் எண் கணித நம்பிக்கை. முத்துக்கருப்பன் இணைக்கப்படுகிறார். சமதரையில் நடந்து படிக்கட்டுகளில் கீழே வந்தால் அந்தக் கோயில். அம்மன் சந்நிதியில் கூட்டம். ஒரு மூதாட்டி ‘நாராயணி’ என்று பக்கத்து வீட்டுக்காரியைக் கூப்பிடுவது போல அம்மையை அழைத்து அரற்றுகிறாள். இறைவி பக்கத்து வீட்டுக்காரிதான். எல்லோரும் பேசிக்கொண்டு, அம்மனில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கத்தில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு சில பெண்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இடை இடையே ‘அம்மே அம்மே’என்று ஒரு சத்தம். அது அப்பெண்கள் போடும் சத்தம் இல்லை. அடிக்கடி கேட்கும் சத்தம். வேறு எங்கிருந்தோ வேறுவகை உச்சரிப்புடன் அதே சத்தம். அந்த ஒலியை தான் எப்போதுமே கேட்டுக் கொண்டிருப்பதாக முத்துக்கருப்பன் நினைவுகூர்ந்தார்.

அவன் நினைவு பின்னோக்கிச் செல்கிறது. ஒரு தொன்னூறு ரூபாய் விவகாரம் அது. எங்கிருந்து கிடைக்கும்? அப்பாவின் பாக்கெட்டில் இருந்துதான்.

சின்ன அறை. அப்பா கட்டிலின் மேலும் அம்மா தரையில் பாய் விரித்தும் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவன் பணம் எடுத்துக்கொள்கிறான். பணத்தோடு கடிதம் ஒன்றும் கைக்கு வருகிறது. அதை மீண்டும் பையில் வைக்கத் திரும்புகிறான். அவன் கால்பட்டு பெரிய இரும்பு கம்பி சாய்ந்தது. அதன் கீழே அம்மா படுத்திருந்தாள். திருடன் வேலை என்று போலீஸ் எழுதியது.

முத்துக்கருப்பனுக்கு அவன் இப்போது லட்சாதிபதி - மீண்டும் அந்த ‘அம்மே’ என்ற சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. தாமதம் செய்ததால், சுற்றுலாக் குழு போய்விட்டிருந்தது. ஏழு மைல் விடுதிக்கு. நடக்கத் தொடங்குகிறான் முத்துக்கருப்பன். அவன் சென்று சேர்ந்த இடம் போலீஸ் கமிஷனர் ஆபீஸாக இருந்தது.

இந்தியத்

தத்துவத்தோடு நவீன கதை சொல்லியாக உருவானவர் மா.அரங்கநாதன். தத்துவம் அவரது கதைகளில் துருத்திக்கொண்டு இருப்ப தில்லை. கால் இடித்துக்கொண்டால், ‘ஐயோ கடவுளே…’ என்கிற சாதாரண மனிதர்களின் எழுத்தாளர் அவர். புதுமைபித்தனின் இன்றைய நவீன, சுயமான பதிப்பு. ‘காக்கைச் சிறகினிலே என்றவுடன் கண்ணபிரானிடம்தானே வந்துசேர வேண்டியிருக்கிறது’ என் கிறார் மா.அரங்கநாதன் பாரதி நினைவுகளோடு.

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தமிழ் எழுத்தாளர் மா.அரங்கநாதன்.

- நதி நகரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x