Last Updated : 20 Mar, 2016 10:35 AM

 

Published : 20 Mar 2016 10:35 AM
Last Updated : 20 Mar 2016 10:35 AM

கவிதை மீதொரு உரையாடல்: சுந்தர ராமசாமி - துடித்துக் கொண்டிருக்கும் வியப்பு

வாழ்க்கையை எளிய விடைகளால் கடந்துபோக விரும்பாதவர் சுந்தர ராமசாமி. கட்டுரைகள், உரைகள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், விமர்சனப் பார்வைகள் என எல்லாவற்றிலும் அவருக்கேயான மொழி நடை உண்டு. எனினும் சு.ரா.வின் ஆகச் சிறந்த அடையாளமாகக் கவிதையைத்தான் குறிப்பிடுவேன். சு.ரா.வின் உள் முக வசீகரம் கவிதைகளே.

சு.ராவின் உயிர்ச் சுவையை நாமும் உணர இதோ ஒரு கவிதை....

ஓவியத்தில் எரியும் சுடர்

“அந்த ஓவியத்தில் எரியும் சுடரை / கண் இமைக்காமல் பார்க்கிறது அந்தக் குழந்தை / அதன் விரல் நுனிகள் துடிக்கின்றன / தன் விரல்நுனிகளால் / எரியும் சுடரைத் தொடத் / துடிக்கிறது அதன் மனம்”

கவிதையாக வாசல் திறந்து ஈர்த்து, பிறகு கலையின் முடிவிலா வெளிக்குள் வாசகனை வீசிவிடுகிற எழுத்து. அவரது கவி மனம் பார்த்துப் பார்த்து வடித்த இக்கவிதை, கலையை அதன் உன்னதத்தில் உணர்த்த முயல்கிறது. வார்த்தைகளால் சொல்ல முடியாத இடங்களைத்தான் கவிதை பெரும்பாலும் சந்திக்கிறது. கவிதையின் ஆகப் பெரும் சவாலே கவிதைக்கு முந்தைய கணத்தின் மன அதிர்வை வாசகனுக்கும் ஏற்படுத்துவது. படைப்புக்கு முந்தைய மனதின் ரசானுபவத்தை, மனம் மென்று விழுங்கிய சாறின் சுவையை வாசகனுக்குக் கடத்துவதில்தான் இருக்கிறது கவிதா அனுபவம்.

“அதன் விரல் நுனிகள் துடிக்கின்றன / தன் விரல் நுனிகளால் எரியும் சுடரைத் தொடத் துடிக்கிறது அதன் மனம்” என்கிறபோது ஓவியத்தில் உள்ள சுடரைக் குழந்தை உண்மையானதாக உணர்கிறது. குழந்தையின் முன்பு வசீகர அழகில் எரிகிறது சுடர். விரல் நுனிகள் துடிக்கின்றன என்ற வரியின் வார்த்தைகள் வண்ண ஓவியத்துக்கு உயிர் கொடுத்துவிடுகின்றன. இப்போது ஓவியம் குழந்தையோடு உரையாடத் தொடங்குகிறது.

“சுடர் அருகே / தன் விரல்களைக் கொண்டுபோன பின்பும் / தயங்கி / மிகத் தயங்கி / தன் தாயின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறது /அந்தக் குழந்தை”

எரிவதைத் தீண்டக் கூடாது என்பதை அறிந்திருக்கும் குழந்தை தன் தாயின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறது. குழந்தையின் மன வெளி இப்போது வாசக மனதிலும் விரிகிறது. கவிதை இதுவரை குழந்தையின் இடமிருந்து பேசியது. இதன் பிறகு வரும் வரிகளில் வாசகனின் பங்களிப்பைக் கோருகிறது கவிதை. இதில் சு.ரா. சுட்டுவது குழந்தையை அல்ல. குழந்தையிடம் இருக்கும் அந்த மனதை என்று புரிந்துகொள்கிறோம். கவிதை மேலும் நெருக்கமாகிறது.

கலையை ஒரு பார்வையாளன் அறிவால் தீண்டக் கூடாது. கலையை அதன் வெளியில் அதுவாக மட்டுமே பார்க்க வேண்டும். அப்படிப் பார்ப்பதற்கு ஒரு மனம் புதிதாக ஜனிக்க வேண்டும். கவிதைக்குள்ளிருக்கும் மௌனம் இதைத்தான் பேசுகிறது. குழந்தை மனம் அறிவாலும் சிந்தனையாலும் நிரம்பியதல்ல. சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் குழந்தை ஆச்சரியமும் வியப்பும் கலந்தே விழிக்கிறது. கசங்கிய காகிதம்கூடப் பிஞ்சுக் குழந்தையிடம் எண்ணற்ற முகங்கள் காட்டும். நிரப்பப்படாதிருக்கிற மனமே புறத்தை அதுவாகப் பார்க்கும். குழந்தையின் மனதுடன் ஓவியத்தைப் பார்க்கிறபோது என்னவெல்லாம் நிகழ்கிறது என்பதைச் சொல்லுகின்றன கவிதையின் மற்ற வரிகள்.

“அந்தச் சுடர் / தன்னை எரித்துக்கொண்டே / ஓவியத்தை எரிக்காமல் இருக்கும் விதம் / அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை/

அந்தச் சுடர் / உருவாகி வந்தபோது / ஓவியரின் விரல்களை எரிக்காமல் இருந்த விதம் / அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை / குழந்தையின் விரல்களில் அப்போதும் / வியப்பு துடித்துக்கொண்டிருக்கிறது.”

குழந்தையின் மனதுடன் பார்க்கத் தொடங்கியதும் ஓவியம் பார்வையாளனோடு உரையாடத் தொடங்குகிறது. வண்ணங்கள் உருவமேறி உயிர்பெற்று அதிர்கின்றன. “அழிக்காமல் எரியவும் / அழகாக நிற்கவும் / எப்படிக் கற்றுக்கொண்டது அது?” இந்த இறுதி வரிகள் கவிதை சொல்லியின் வியப்பின் வெளிப்பாடாக வெடிக்கின்றன. இப்படி அமைவது அபூர்வம்.

பொருள்கொள்ளும் வேட்கையைத் தூர எறிந்து விடுகிறது கவிதை. உணர்தல் வெளியில் வாசக மனம் அலைந்து மகிழ்கிறது. கவிதையும் கலையும் இந்தக்கவிதையில் ஒரு பொருளாகக் கலந்து மனதில் இறங்குகின்றன. குழந்தையின் இடத்துக்கு வாசகன் நகர்கிற வினையில் கவிதை வாசகனுக்கு நெருக்கமாகிவிடுகிறது.

விடைபெறும் அழகு

மரணம் யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடியது. மரணம் எந்த உயிரையும் முற்றிலுமாக வெளியேற்றி விடுகிறது. இந்த இடத்தை ஒரு படைப்பாளி எப்படிச் சந்திக்கிறான் என்பதை அறிந்துகொள்ளும் எழுத்து நம்மிடம் மிகவும் குறைவு. சு.ரா. தன் இறுதி நாட்களில் எழுதிய கவிதையைப் பார்ப்போம்.

அந்தக் குழந்தையின் காலோசை நம்மை
அழைக்கிறது
குழந்தையின் வடிவம் நம் பார்வைக்குப் புலப்படவில்லை
நம் கலவரம், நம் பதற்றம் நம் பார்வைகளை
மறைக்கிறது
தன் காலோசையால் நம்மை அணைத்துக்கொள்ள
அந்தக் குழந்தை நம்மைத் தேடி வருகிறது
நாம் தத்தளிப்பை மறைக்க மேலும் உரக்கப்
பேசுகிறோம்

இந்தக் கவிதையின் உயிர் நிலை ‘நம் கலவரம், நம் பதற்றம் நம் பார்வைகளை மறைக்கிறது’ என்ற வரியில் இருக்கிறது. குழந்தையின் காலோசையைக் கேட்கிற போது கலவரம், பதற்றம் ஏன்? இந்தக் கேள்வியைக் கவிதைக்குள்ளிருந்துதான் கேட்க வேண்டும். குழந்தையைப் பார்க்க முடியாது தடுப்பது எது? பார்ப்பது கண்களால் நிகழ்கிறதா? பார்வையால் நிகழ்கிறதா? சு.ரா. காட்ட விரும்பும் குழந்தையைக் காணும் ஆர்வம் பெருகுகிறது. ‘அந்தக் குழந்தை’ என்று அவர் சொல்வதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர் அறிந்திருக்கும் குழந்தையை நாமும் அறிந்துகொள்வதற்கு உதவுகிறார். நாம் என்றே கவிதை பேசுகிறது.

அவரது இடத்திலிருந்து நாமும் அந்தக் குழந்தையைப் பார்க்க முயல்கிறபோது குழந்தை என்ற சொல்லுக்குப் பின்னால் இருக்கும் உணர்வெளியில் மனம் சஞ்சரிக்கத் தொடங்கும். இந்த இடத்துக்கு நகர கவிதைக்குள்ளிருக்கும் திறப்பைச் சற்றே தீண்டினால் போதும். கவிதை தனது உரையாடலைத் தொடங்கிவிடும்.

“நாம் தத்தளிப்பை மறைக்க மேலும் உரக்கப் /பேசுகிறோம்” இந்த இறுதி வரி மீண்டும் கவிதையின் மற்ற வரிகளை வாசிக்கத் தூண்டுகிறது. காலோசை என்று அவர் சொல்லும்போதே காலோசையை எழுப்புகிற ஒன்றின் இருப்பை உணர்த்திவிடுகிறார். அது நம்மை நோக்கி வரத் தொடங்கிவிட்டது. பதற்றம் கூடும்போது அதை அதன் உருவில் பார்க்க முடியாது. தன் மரணத்துக்குச் சில நாட்கள் முன்பு, 25.09.2005 அன்று, அவர் இந்தக் கவிதையை எழுதியிருக்கிறார் என்பது முக்கியமானது. யாரும் சந்தித்தே ஆக வேண்டிய இறுதிக் கணத்தைக் குழந்தையின் காலோசையாக அதிரவிடுகிறாரோ? கவிதை ஒரு போதும் விடைகளைத் தேடிப் பயணிப்பதில்லை. உணர்தல் வெளிக்கு வாசகனைக் கடத்துவது மட்டுமே கவிதையின் வேலை. முடிக்கப்படாத இந்தக் கவிதை வழியாக அவர் உணர்த்த முயன்ற ஏதோ ஒன்று கவிதைக்குள் மறைந்து அதிர்கிறது.

தொடர்புக்கு: kavai.palanisamy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x