Published : 27 Nov 2021 03:07 AM
Last Updated : 27 Nov 2021 03:07 AM

வேளாண் பெருமகளின் வெற்றிக் கதை

வட்டார இலக்கியங்கள் பெரும்பாலும் நம் வாழ்வை நகல் எடுப்பவையாகவே இருக்கின்றன. ஆர்.சண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’, ராஜம் கிருஷ்ணனின் ‘குறிஞ்சித்தேன்’, ‘கரிப்பு மணிகள்’, சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’, ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ போன்ற வட்டார இலக்கியங்கள் முக்கியமானவை. பாமா, இமையம், பெருமாள் முருகன், ஜோ டி குரூஸ் உள்ளிட்டோர் வேளாண், மீனவ, பழங்குடியினச் சமூகங்களை மையமாகக் கொண்டு எழுதிவருகிறார்கள். அந்த வகையில் உத்தமசோழனின் ‘சுந்தரவல்லி சொல்லாத கதை’, கீழத்தஞ்சையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண் குடிகளாக வாழ்ந்த மக்களின் கதை இது. உத்தமசோழனின் மொழிநடை, வட்டார வழக்கைத் தாங்கி வருவதோடு அவருடைய கதை கூறும் பாங்கு அதன் எளிமையினால் தனித்துவம் மிகுந்து மிளிர்கிறது.

கிராமங்களில் எந்த அளவுக்குச் சாதியும் பெண்ணடிமைத்தனமும் நிறைந்திருக்கின்றன எனக் கருதுகிறோமோ, அதே அளவு சாதிக் கட்டுப்பாடுகளை மீறிய செயல்பாடுகளும், பாலினச் சமத்துவச் செயல்பாடுகளும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுவதும் உண்டு. அது இந்த நாவலில் நுட்பமாகப் பதிவாகியிருக்கிறது. எந்தக் கோட்பாட்டையும் கொள்கையையும் படித்தவர்களல்லர் கிராமவாசிகள்.

அவர்கள் வாழ்க்கையே அவர்களை வழிநடத்தும் கோட்பாடும் கொள்கையும். காட்டிலும் வயலிலும் வேலைசெய்து, கால்நடைகளை வளர்த்து, பால்பொருட்களை உற்பத்திசெய்து, காய்கறித் தோட்டங்களை அமைத்துத் தற்சார்பு வாழ்க்கை வாழும் கிராமப்புறப் பெண்கள், சமத்துவம் பேசும் நகர்ப்புறப் பெண்களுக்கு நிச்சயம் முன்னுதாரணங்கள்தான். சாதி எல்லைகளைக் கடந்து, பட்டியலினச் சமூகப் பெண்ணான முல்லையம்மாவைத் தங்கள் தாயைப் போல எண்ணும் சுந்தரவல்லியும் கதிரேசனும் எந்தப் பாசறையில் சாதி மறுப்பைப் படித்திருப்பார்கள்?

ஒருபிடி நெல்கூடக் கையிருப்பு இல்லாமல், நிலமற்ற விவசாயிகளாகத் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கும் கதிரேசன் – சுந்தரவல்லி தம்பதியர் நில உரிமையாளர்களாக மாறுவதற்கு, அவர்களுடைய உழைப்பே காரணமாக இருக்கிறது. மிக முக்கியமாக, சுந்தரவல்லியின் நெஞ்சுரமும் உறுதியுமே காரணம். சிறு வயதிலேயே தன் தாயை இழந்து, ராசியற்றவளாகக் கருதப்பட்டு, ஊராரின் ஏளனத்துக்கு ஆளானவளின் வைராக்கியம் அது.

முதலாளிக்கு விசுவாசமானவனாகவும் கடும் உழைப்பாளியாகவும் இருக்கும் கதிரேசன் முற்போக்கானவன்தான். சில நேரங்களில் முரடனாகவும் இருக்கிறான். அவன் மனச்சோர்வடையும்போது தாயைப் போல அரவணைத்துக்கொள்ளும் சுந்தரவல்லி, பிற பெண்கள் மீது அவன் நாட்டம் கொள்ளும்போது, புயலென மாறி அந்த முரடனை மிரளவும் வைக்கிறாள். தற்சார்பு வாழ்க்கை அவளுக்குக் கொடுத்த சுயமரியாதை அது.

சவால்கள் நிறைந்த வேளாண் தொழிலைச் செய்து வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கைப் பயணத்தைச் சொல்லிச்செல்லும் இந்த நாவல், ஒரு வட்டார இலக்கியத்துக்கே உரிய இலக்கணத்தைக் கொண்டுள்ளது. மழை, ஆறுகள், தட்பவெப்பம், நெல் பயிரிடும் முறை, மரங்கள், உணவு, திருமண முறைகள், மருத்துவ முறைகள், திருவிழாக்கள் என ஒரு வேளாண் சமூகத்து வாழ்வில் கடக்க நேரிடும் தனித்துவமான அனைத்தையும் அகராதியைப் போல விரிவாகக் கதையினூடாக உத்தமசோழன் சொல்லியிருக்கிறார். தமிழகத்தின் எந்தத் திசையில் வாழும் வேளாண் குடியும் இந்நாவலை வாசித்தால், தஞ்சையில் வந்து விவசாயம் செய்துவிடலாம். அவ்வளவு நுணுக்கமான, ஆழமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன இந்நாவலில்.

குளிர்க்காற்று முகத்தில் வீசும் காலைப் பொழுதில் பூஞ்சாம்பலால் பல் தேய்த்துக் குளத்தில் தலைமுழுகி, கள்ளிச் சொட்டாட்டம் பாலில் வெல்லமிட்ட தேநீரைப் பருகும் உணர்வைத் தரும் நாவல் இது. ஒவ்வொரு பெண்ணும் வாசிக்க வேண்டிய படைப்பும்கூட!

- ஜே.எஸ்.அனார்கலி, கவிஞர், தொடர்புக்கு: bharathiannar@gmail.com

சுந்தரவல்லி சொல்லாத கதை

உத்தமசோழன்

கிழக்கு வாசல் வெளியீடு,

திருத்துறைப்பூண்டி – 614713

விலை: ரூ.950

தொடர்புக்கு: 9443343292

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x