Last Updated : 20 Nov, 2021 03:06 AM

 

Published : 20 Nov 2021 03:06 AM
Last Updated : 20 Nov 2021 03:06 AM

பாரதி மணி: எல்லோருக்குமான உற்சாகி

எஸ்.கே.எஸ்.மணி என்ற இயற்பெயர் கொண்ட ‘பாரதி’ மணி கடந்த நவம்பர் 16 அன்று காலமானார். சமூக ஊடகங்களில் அஞ்சலிப் பதிவுகள் பெருக்கெடுத்தன. இத்தனைக்கும் இளம்வயது மரணமல்ல அவருடையது. சென்ற செப்டம்பர் 24-ம் தேதி அவருக்கு 84 வயது நிறைவடைந்திருந்தது. ஆனாலும், அவருடைய நேசர்களுக்கு அவருடைய மறைவு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்திருக்கிறது.

இவ்வளவு அன்புள்ளங்களைச் சம்பாதித்துவைத்திருந்த இவர் யார்? தொழிலதிபர் பிர்லாவின் செயலாளராக டெல்லியில் பணிபுரிந்தவர், டெல்லி தமிழ் நாடகங்களில் நடித்துவந்தவர், பிறகு, வயதான காலத்தில் தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றில் சிறு பாத்திரங்களை ஏற்று நடித்தவர், தமிழின் மிக முக்கியமான இலக்கிய விமர்சகர், எழுத்தாளர் க.நா.சு.வின் மருமகன். ஆனால், இவையெல்லாமே அவருடைய புகழுக்கு முக்கியக் காரணங்கள் அல்ல. ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை அவர்பால் ஈர்த்துவந்தவை அவருடைய கட்டுரைகளும், மிகப் பிரியமான அவரது தோழமையும்தான்.

தமிழில் எழுதப்பட்ட மிகச் சுவையான கட்டுரைகளில் அவை அடங்கும். அவற்றைப் படிக்கும்போது நம் வீட்டுக் கூடத்தில் அன்பான தாத்தா ஒருவர் நமக்கு எதிரே உட்கார்ந்துகொண்டு, தன் அனுபவங்களைச் சுவாரசியமாக விவரிப்பதைப் போன்ற மனக்காட்சியை அவர் எப்படியோ உருவாக்கிவிடுவார். அவர் ஒன்றும் ஆரம்பத்திலிருந்தே எழுதிவந்தவர் அல்ல. தன் வாழ்வின் பெரும் பகுதியை நாடக மேடைகளில், மற்றவர்கள் எழுதிய வசனங்களைப் பேசி நடித்துவந்தவர்தான். ‘உயிர்மை’ இதழுக்காக மனுஷ்ய புத்திரன் அவரை வற்புறுத்தி எழுதவைத்தபோது, அவர் அறுபது வயதைக் கடந்திருந்தார். ஆனால், அந்த எழுத்தில் காணப்பட்ட முதிர்ச்சியும் சரளமும் வியக்கவைப்பதாக இருந்தது.

நடுத்தர வயதைத் தாண்டிய பிறகுதான் அவர் டெல்லியை விட்டுத் தமிழ்நாடு வந்தார். டெல்லியில் இந்திரா பார்த்தசாரதியின் ‘மழை’, ‘போர்வை போர்த்திய உடல்கள்’ சுஜாதாவின் சில நாடகங்களில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருந்ததை அறிந்த இயக்குநர்கள், தமிழ்த் திரைப்படங்களில் சில துணைப் பாத்திரங்களை வழங்கியபோது, அவருடைய நடிப்புத் திறமை எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியது. ‘பாரதி’ திரைப்படத்தில் மிகச் சில நிமிடங்களே வந்துபோகும் பாரதியின் தந்தை பாத்திரம் அவருக்கான அடைமொழியையே ஈட்டித்தந்தது. நாடக நடிப்புக்கும் திரை நடிப்புக்கும் இடையே உள்ள நுண்ணிய வேறுபாட்டை அவர் அறிந்திருந்தார். முக பாவங்களிலும் குரலின் ஏற்றத்தாழ்வுகளிலும் அவர் ஒருபோதும் மிகையாக வெளிப்பட்டதில்லை. பல நாடக நடிகர்கள் திரைப்பட நடிப்பில் தவறவிடும் இடம் அது.

பாரதி மணி, தன் மாமனார் க.நா.சு.வைப் பற்றி சுவையான கட்டுரைகள் பலவற்றை எழுதியிருக்கிறார். அமிதாப் பச்சனிடம், “நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று க.நா.சு. கேட்டது, வீட்டுக்கு வந்ததும் அவருடைய மகள், “உண்மையா சொல்லுங்க. அமிதாப் யாருன்னு உங்களுக்குத் தெரியாது?” என்று கேட்டபோது, கண்ணிமைத்துச் சிரித்தது, மனைவிக்குச் சீதனமாக வந்த நகைகளை விற்று ‘சூறாவளி’ என்ற இதழை க.நா.சு. நடத்தியது, லிபி (LIPI) என்ற ஆங்கில இலக்கிய இதழை க.நா.சு. தொடங்கியதும், பாரதி மணி தனக்குத் தெரிந்த தொழிலதிபர்களிடம் விளம்பரக் கட்டணமாக ரூ.70,000 திரட்டித்தந்தது, தமிழ் வெகுசனப் பத்திரிகை ஒன்று வைர மோதிரத்துக்காகக் கதை எழுதித்தரக் கேட்டபோது அவர் நடந்துகொண்ட விதம் என க.நா.சு.வைப் பற்றிய முழுச் சித்திரம் அவற்றில் தெரியும். ஆனால், பாரதி மணியின் கட்டுரைகளிலேயே எல்லோருடைய மனதிலிருந்தும் அகலாத ஒன்று ‘நிகம்போத்காட் சுடுகாடு’.

அவர் டெல்லியில் இருந்தபோது, தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்கள் வீட்டில் மரணம் சம்பவித்துவிட்டால் தெரிந்தவர், தெரியாதவர் என்று வித்தியாசம் பாராது மரண வீட்டில் எல்லா உதவிகளையும் செய்துகொடுப்பது, உறவினர்களுக்குத் தகவல் சொல்வது, இறந்தவர்களை அவரவர் மதச் சம்பிரதாயப்படி ஈமச் சடங்குகள் செய்து சுடுகாட்டில் தகனம்செய்ய ஏற்பாடுசெய்வது என்பதிலிருந்து, இறப்புச் சான்றிதழ் வாங்கித் தருவது வரை சிரமேற்கொண்டு கடமையாகச் செய்துவந்திருக்கிறார். ஒருமுறை இருமுறையல்ல, “சுமார் 200 தடவையாவது நிகம்போத் சுடுகாட்டுக்குச் சென்றிருப்பேன்” என்றார்.

அந்தக் காலத்து லைசன்ஸ்-பெர்மிட்-கோட்டா ராஜ்ஜியத்தில் அவர் தன்னுடைய முதலாளிக்காகச் செய்த ‘சட்டத்தை மீறாத திருட்டுத்தனங்கள்’ பற்றி எழுதுவது வேறு வகையான சுவாரஸ்யம். அவருடைய கட்டுரைகளெல்லாம் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ (உயிர்மை பதிப்பகம்), ‘புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’ (வாசகசாலை), ‘பாட்டையாவின் பழங்கதைகள்’ (வாசகசாலை) ஆகிய மூன்று தொகுப்புகளாக வெளிவந்திருக்கின்றன. அவர் நெடுங்காலமாகப் புற்றுநோயால் துன்புற்றுவந்திருக்கிறார் என்பது, மரணச் செய்தியை அவருடைய மகள் அறிவித்தபோதுதான் தெரிந்திருக்கிறது. இந்த வேதனையை வெளிக்காட்டாமல்தான் ஸ்டைலான வெள்ளைக் குறுந்தாடி, வாயில் பைப், கைத்தடி இவற்றோடு தன்னைவிட பல தசாப்தங்கள் வயது குறைந்த ‘முதியோர்’களிடம் அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டு அரட்டையடித்துக்கொண்டு இருந்திருக்கிறார் அந்த நிரந்தர உற்சாகி.

பாரதி மணியின் மகள் தமது தந்தையாரை மாயா ஆஞ்சலூவின் மேற்கோளோடு வர்ணித்திருந்தார்: “என் வாழ்வின் நோக்கம் உயிர்த்திருப்பதல்ல, பிறருக்காக ஆக்கப் பணியாற்றுவதே. அப்பணியையும் சற்றுப் பரிவுணர்வோடும், சற்று சுவாரஸ்யத்தோடும், சற்று நளினத்தோடும் செய்வது.” இந்த வாசகங்களைவிட பாரதி மணியைத் துல்லியமாக வர்ணித்துவிட முடியாது.

- ஜி.குப்புசாமி, அருந்ததி ராயின் ‘பெருமகிழ்வின் பேரவை’ உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளர்.

தொடர்புக்கு: gkuppuswamy62@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x