பேரழிவின் கதை

பேரழிவின் கதை
Updated on
2 min read

2015, வடகிழக்கு பருவமழை துவங்கிய போது நாங்கள் அதைக் காலம் காலமாகக் கடந்து செல்லும் இன்னொரு மழைக்காலம் என்றுதான் நம்பினோம். நான் எல்லாமழைக்காலங்களிலும் இச்சைகள் ததும்புகிற மழைக் காலக் கவிதைகளை எழுதிவந்திருக்கிறேன். மழைக்காலம் துவங்கிய முதல் நாள் காலையில் தலைக்கு மேல் துப்பட்டாவைப் பிடித்துக்கொண்டு வேகவேகமாக சாலை யில் நடந்து சென்ற ஒரு பெண்ணைக் கண்டேன். ஒரு ஆளுயர மழைத்துளி சாலையில் நடந்து செல்கிறது என்கிற ஒரு படிமம் மனதில் தோன்றிக் கிளர்ச்சியடைய வைத்தது.

அக்டோபர்-8, பிறகு வந்த நாட்களில் மழையின் வாசனையில் சஞ்சல மூட்டும் எதையோ உணரத் தொடங்கினேன். என் மனம் ஒரு விலங்கினுடைய மனம். நவம்பர் 16-ம் தேதி ‘இறந்த நதிகளின் ஆவிகள் வீடு திரும்பிக்கொண்டிருக்கின்றன’ என்ற நெடுங்கவிதையை எழுதினேன். அது துர்சகுனங்களின் கவிதை. இந்த நகரம் நீரால் வேட்டையாடப்படும் காட்சியை அந்தக் கவிதையை விரிவாக முன்மொழிந்தது.

செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்ட டிசம்பர் 2-ம்தேதி நாங்கள் நீரால் முற்றுகையிடப்பட்டோம். ஒரே இரவில் 15லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீர்அகதிகளாக மாறினார்கள். மக்கள் புகலிடம் தேடி ஓடிக்கொண்டே இருந்தார்கள். குடியிருப்புகளுக்குள் இரண்டு மாடி உயரத்திற்கு நிரம்பிய தண்ணீரைக் கண்டு ஏராளமானோர் மனப்பிறழ்வுக்கு ஆளானார்கள். லட்சக்கணக்கான வீடுகளில் இருந்த அத்தனை பொருள்களும் தண்ணீரில் குப்பையாக அடித்துச்செல்லப்பட்டன.

குடிதண்ணீர் இல்லாமல் உணவு இல்லாமல் மொத்த நகரமும் ஒரு போர்க்கால விளிம்புக்குச் செலுத்தப்பட்டது. ஐந்து நாட்கள் மின்சாரம் இல்லை. செல்போன்கள் வேலை செய்யவில்லை, பெட்ரோல் கிடைக்கவில்லை, கிரெடிட்கார்டுகள், ஏ.டி.எம்கள் வேலை செய்யவில்லை, கடைகள் மூடிக்கிடந்தன. பால் கிடைக்கவில்லை. மாற்றுத்துணி இல்லை, போக்குவரத்து முடங்கியது. அரசு என்ற ஒன்று இருப்பதற்கான தடயம் எங்கும் இல்லை. வேறொரு நாடாக இருந்திருந்தால் பெரும் கிளர்ச்சி வெடித்திருக்கும். ஆனால், மக்கள் வேறொரு முடிவு எடுத்தார்கள். தாமே அரசாக மாறினார்கள். ஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். முதன்முதலாக ஒரு குடிமைச் சமூகத்தின் எழுச்சி ஒன்றை இந்த நகரத்தில் கண்டேன்.

நகரம் முழுக்கப் பிசாசுகளைப் போல அழிவின் கதைகள் எங்கெங்கும் உலவத் தொடங்கின. தண்ணீருக்கு அடியில் இருந்து பிணங்கள் வருவதுபோல எண்ணற்ற கதைகள் மேலே வரத்தொடங்கின. அவை நாம் அதுவரை கற்பனை செய்திராத மனித அவலத்தின் கதைகள், கைவிடப்பட்டவர் களின் கதைகள், தண்ணீரில் கரைந்தவர்களின் கதைகள். எல்லாவற்றையும் இழந்தவர்களின் கதைகள், அவமானத்தில் குன்றிப்போனவர்களின் கதைகள். சொல்லவந்து வார்த்தை இல்லாமல் தொண்டையிலேயே நின்றுவிட்ட கதைகள்.

நான் அவற்றை எழுத விரும்பினேன். ஒரு குடிமைச் சமூகம் அடைந்த பேரவலத்தின் சித்திரங்களைக் கடல் கொண்ட நகரத்தின் வழியே உருவாகி வந்த ஒரு கவிஞன் என்ற வகையில் அவற்றை அழியாத நினைவுகளாக மாற்ற விரும்பினேன். நாங்கள் எதையெல்லாம் பின் வந்த நாட்களில் சுலபமாக மறந்துவிட்டோம் என்பதை நினைவுபடுத்திக் கொள்வதற்காகவாவது அதையெல்லாம் எழுத நினைத்தேன். உண்மையில் எனக்கு எழுதுவதற்கு இன்னும்ஆயிரம் ஆயிரம் கதைகள் இருக்கின்றன. அதையெல்லாம் இந்தக் கவிதைகளில் இன்னும் சொல்லி முடிக்க இயலவில்லை.இதையெல்லாம் எழுதுவதன் மூலம் இந்த நினைவுகளி லிருந்து வெளியேறிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், அவை அந்த நினைவுகளின் காயத்தை நிரந்தரமாக்கிவிட்டன. அந்த வகையில் இந்தக் கவிதைகள் சென்னை நகரத்தின் கூட்டு மனதின் சொற்கள்.

- தொடர்புக்கு: manushyaputhiran@gmail.com

(இன்று வெளியாகும் ‘ஊழியின் தினங்கள்’ கவிதைத் தொகுப்பின் முன்னுரையிலிருந்து சில பகுதிகள்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in