Published : 13 Nov 2021 03:07 AM
Last Updated : 13 Nov 2021 03:07 AM

குட்டி ரேவதி கவிதைகள்: ஆதிக்கத்தின் வேரறுக்கும் எழுத்து

பெண்களின் உலகத்தை ஆண் வரைவது என்பது கண்ணைக் கட்டிக்கொண்டு யானையைத் தடவி கருத்துச் சொல்லும் கதை. பெண்களால் எழுதப்படும் பெண்ணுலகம் அலங்காரங்களற்றது. அவற்றில் சில ஆண்களால் பின்னப்பட்ட வலைகளுக்கு வலுசேர்ப்பதாக அமைந்துவிடுகிறபோதும், புதுப் புனலெனப் பீறிட்டு எழுகிறவை பெண் விடுதலையை மையமாகக் கொண்டவை. பெண்களின் மனத்தையும் உடலையும் அவற்றின் மீது செலுத்தப்படும் ஆதிக்கத்தையும் சுரண்டலையும் வன்முறையையும் சமரசம் ஏதுமின்றி உரைப்பவை. அதனாலேயே அவை எள்ளலுக்கும் நிராகரிப்புக்கும் வெறுப்புக்கும் ஆளாகின்றன.

பெண்ணுடல் குறித்து ஆண் எழுதுவதைச் சிலாகிக்கும் சமூகம், தன்னுடல் குறித்துப் பெண் எழுதுகையில் முகம்சுளிக்கிறது. புறத்தோல் மட்டுமா பெண்? உள்ளிருக்கும் நரம்பும் சதையும் ரத்தமும் சேர்ந்தவள்தானே என்று கேட்டால் அருவருக்கிறது. இதுபோன்ற சலசலப்புகளுக்கு அஞ்சாமல் துணிவோடு எழுதிச் செல்கிறார் குட்டி ரேவதி. இவரது 12 கவிதைத் தொகுப்புகள் சேர்க்கப்பட்டு இரு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பெண்ணுடலை இயற்கையோடு ஒப்பிட்டு எழுதுகையில் பெண்ணே இயற்கை எனும் பேருருவாகி அழியா வரம் பெறுகிறாள். இயற்கையின் பூரணமும் ஒழுங்கமைவும் பெண்ணாகி எழுகையில் அதைச் சிதைக்கும் ஆதிக்கக் கரங்களையும் குட்டி ரேவதி அடையாளப்படுத்துகிறார். பெண்ணின் அக உணர்வும் அதில் கனன்றுகொண்டிருக்கும் விடுதலை வேட்கையும் எதிரொலிக்கும் வரிகள் ஆதிக்க மனம் கொண்டவர்களை அசைத்துப்பார்க்கக்கூடும். ‘அரளிவிதைப் பைகள்’ கவிதை அவற்றுள் ஒன்று.

‘மருத்துவச்சி வந்தாள்

சூலுற்றவளை நிர்வாணித்தாள் மெல்ல

அகட்டிய காலின் இரு உள்தொடைகளிலும்

சாம்பல் உதிரும் சூடுகள்

கண்களாய்க்

கனன்று கொண்டிருந்ததைக் கண்டாள்

அதிர்ச்சியில் காதுகளைப் பொத்திக்கொண்டாள்

‘இன்னுமா அவனுக்கு நீ மனைவி?’

நிலம் மாறினாலும் பெண்களின் பாடுகள் மாறுவதில்லை. ஆனால், அவர்கள் வீழத் தயாராக இல்லை என்கிறார் குட்டி ரேவதி. கடலின் உரிமைகளுக்காகப் போராடும் இவரது ‘இடிந்த கரை’ பெண்கள், அலைகளாய்க் கரையை மோதி இடித்து அழுதபோதும் பெண்களாகப் பிறப்பதில் ஒருபோதும் களைத்துப்போகாதவர்கள். உப்பு நீரிலும் மடியாத தாவரங்களை விளைவிக்கிறவர்கள். மீன்களின் ஈரச் செதில்கள் ஒட்டிய வயிற்றுடன் வெளுத்துப்போன பூக்களுடைய சேலையில் நீதி கேட்டு நிற்கிறவர்கள். தம் சேலைகளில் சேகரித்த கண்ணீர் மணலைக் கடலின் அலைகளிடம் கொடுக்கிறவர்கள்.

‘துயிலாத அலைகள் பாடிப்பாடி சத்தியத்தின் ஈரத்தைக் கடலாக்கின

துயரங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் கோழைகளுக்கும்

அப்படித்தாம் என் பரதவப் பெண்டிர் நீர் வேலி இட்டனர்’

என்கிற வரிகள் மீனவப் பெண்களின் வாழ்க்கையை அதன் மீது உப்பாகப் படிந்திருக்கும் துயரத்தைச் சொல்கின்றன.

பாகுபாடுகள் நிறைந்த இந்தச் சமூகத்தை அது வகுத்துவைத்திருக்கும் அபத்த நியதிகளை உரக்கச் சொல்லும் கவிதைகள், சமூகத்தின் கூட்டு மனசாட்சியை உலுக்குகின்றன. பெண்ணுக்காக மட்டுமல்ல... ஆணுக்காகவும் ஆணி லிருந்து பெண்ணாக மாறும் பால் புதுமையருக்காகவும் எழுதி மனிதகுல உயர்வுக்கான அவசியத்தை உணர்த்துகிறார். பெயர்களையும் உடல்களையும் வைத்துப் பால் பேதம் பார்ப்பதை குட்டி ரேவதி எள்ளி நகையாடுகிறார். ஆண் உடலில் அறையப்பட்டதால் ஆணாகவும் பெண்ணுடலில் புகுத்தப்பட்டதால் பெண்ணாகவும் நம்மை இருந்துவிட்டுப் போகச் சொல்வதன்மூலம், திருநர் சமூகத்துக்கு நாமிழைக்கிற தீங்கு குறித்துச் சிந்திக்கவும் தூண்டுகிறார். ‘உடலின் வரைபடத்தைப் பெயர்களால் வரையாதீர்கள்/ அல்லது குறிகளால் எழுதாதீர்கள்’ என்கிறார்.

காமம் குறித்து எவ்வளவோ பெண்கள் எழுதிய பிறகும் அதிர்ச்சி நிரம்பிய கண்களைத்தான் இப்போதும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இருந்தபோதும் அதைப் பொருட்படுத்தாத கவனத்துடன் கடந்துசெல்கிறார். அந்த வன்மக் கற்களுக்குப் பதிலாக வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிடும் தீவிரத்துடன் எழுதுகிறார். ஆண் - பெண் உறவையும் அதில் ஊடாடும் பசப்பையும் நஞ்சை நஞ்சுகொண்டே வென்றெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வாசிக்கிறபோது உடைத்தெறிய முடியாத சுவர்களோடு இருவேறு உலகங்கள் கண்முன்னே விரிகின்றன.

‘முலைக்காம்பின் வழியாக இரத்தம் பருகியவன்

சுவையுணர்ந்து இதயத்தையும்

விழுங்கிவிட்டான்

அவன் சொற்களாய்க் கக்கும்போது

நன்கு சமைக்கப்பட்டிருந்த

ஆட்டின் ஈரலைப் போலத்

தட்டில் வீற்றிருக்கிறது அவள் இதயம்

பக்கங்களால் பெருத்த அகராதியைப் போல்

மமதையில் திரிபவன் மீது

காறி உமிழ்கிறாள்

அவளுக்கோ அதிகாரமென்பது

ஒரு துளி எச்சில்’

என்கிறார் குட்டி ரேவதி.

சமகால அரசியல் நிகழ்வுகளைக் குறித்து எழுதுகிறபோது அதை ஆவணப்படுத்தும் கவனத்தைவிடச் சமூக மாற்றம் குறித்த உள்ளார்ந்த கவலையோடு அணுகியிருக்கிறார். இன அழிப்பைக்கூட ஆவணப்படுத்தும் நோக்குடன் மட்டுமே அணுகும் மூன்றாந்தர அரசியலைக் கேலிசெய்கிறார். ‘இன வாதம் என்றால் அப்படித்தான்/ தலைமுறை மீதம் இல்லாமல் கொன்றழிப்பார்கள்...’ என்று தொடங்கும் கவிதை, ‘மனித உடல்களை நாய்களாய் நினைவுபடுத்திக் கொக்கரிப்பார்கள்/ பின் அந்தப் புல்வெளியில் வெயிலின் நிழலாய்/ மாடுகள் உலாவும் காகங்கள் கரையும்/ எல்லாவற்றையும் ஆவணமும் செய்துவைப்பார்கள்’ என்று முடிகிறது. அரசியல் பகடைகளில் எளியவர்களின் தலைகளே உருட்டப்படும் அவலத்தைச் சொல்லும் கவிதைகளில் பேரறிவாளனும் ரோஹித் வெமூலாவும் அவரவருக்கான நியாயங்களுடனும் அரசியல் நிலைப்பாடுகளுடனும் வெளிப்படுகிறார்கள்.

குட்டி ரேவதியின் பெரும்பாலான கவிதைகளில் சூரியனும் நிலவும் வானமும் பூமியும் புல்லும் பறவைகளும் சிவப்பு நிறப் பூக்களும் காய்களும் கனிகளும் காடுகளும் காடுறை விலங்குகளும் தோன்றுகின்றன. சம காலப் பெண்ணை ஆதித் தாயுடன் இணைத்துப் பார்க்கும் முயற்சியாகவும் அவை தோற்றம்கொள்கின்றன. மரங்கள்தோறும் அசையும் தளிர்ப் பச்சை இலைகள் காற்றில் இசைத்துக்கொண்டே இருக்கின்றன பெண்ணின் மீட்சிக்கான பாடலை. மீட்சி என்பதை உடலாக மட்டுமே குறுக்கிக்கொள்வது மனித மனத்தின் நோய்மை என்று சொல்லும்போதே உடலையும் கடக்க வேண்டியதன் கட்டாயத்தை குட்டி ரேவதியின் கவிதைகள் உணர்த்துகின்றன.

‘காமத்தின் பெருங்கிணற்றை உடலென வரிந்து வந்திருக்கிறாய்

எத்தனை பேரைத் தொலைக்கக்கொடுத்தும்

தன் சுனை வற்றாமல் இருக்கும் பேரூரணியைக் கொண்டிருக்கிறாய்

உன் உடலை நீ ஒரு கணமும் மறந்தாயில்லை’

என்று குட்டி ரேவதி சொல்வதுபோல் அனைத்தையும் துறந்து விடுதலையாவதும் பெரும் பேறுதானே!

- பிருந்தா சீனிவாசன், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

*****

குட்டி ரேவதி கவிதைகள்

(இரு தொகுதிகள்)

வெளியீடு: எழுத்துப் பிரசுரம்,

சென்னை - 600040.

விலை: ரூ.1,149 (இரண்டு தொகுதிகளும் சேர்த்து)

தொடர்புக்கு: 9840065000.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x