Published : 13 Nov 2021 03:07 AM
Last Updated : 13 Nov 2021 03:07 AM

ஆடு ஜீவிதம்: துயரத்தைக் கடத்தல் :

‘இந்தச் சமூகம் என்னை இந்த அளவுக்காவது வாழ அனுமதித்திருப்பதை நினைத்துப் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம். ஏனெனில், மணலை அள்ளித் தின்று பசியாறும் நிலைக்கு நான் ஒருநாளும் தள்ளப்பட்டதில்லை; ஒரு சொட்டுத் தண்ணீருக்காக என் நாக்கு மூன்று நாட்கள் வரை காத்திருந்ததில்லை; நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்.’ பென்யாமின் எழுதி, விலாசினியின் அருமையான மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கும் ‘ஆடு ஜீவிதம்’ நாவலைப் படித்து முடித்தவுடன் இந்த எண்ணங்கள்தாம் என்னை ஆசுவாசப்படுத்தியவை.

சிறு கடன்களை அடைப்பதற்கும் வீட்டில் இன்னொரு அறை கட்டும் அளவுக்கும் மட்டும் சம்பாதித்தால் போதும் என்பதுதான் இந்நாவலின் நஜீப் முகம்மதின் ஆசை. ஏறக்குறைய 14 லட்சம் மலையாளிகள் வேலைக்காகப் புலம்பெயர்ந்திருக்கும் அரேபிய தேசத்துக்குச் செல்லும் வாய்ப்பை அல்லாவே கொடுத்ததாக நினைத்துச் செல்கிறான் நஜீப். ஆனால், அவனைப் பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவனாக மாற்றுகிறது விதி. இப்போது அவனுக்கு ஒரேயொரு ஆசைதான், கொஞ்சம் நிழலில் சிறிது நேரமாவது உட்கார வேண்டும். சரியாக, மூன்று வருடங்கள்; நான்கு மாதங்கள்; ஒன்பது நாட்கள் நஜீபுக்குக் கிடைத்தது ஓர் ஆட்டின் வாழ்க்கை. இந்தக் காலங்களில் அவன் ஒருநாளும் குளித்ததில்லை; பல் துலக்கியதில்லை; இயற்கை உபாதைகளைக் கழித்துவிட்டுத் தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டதில்லை; அவனுக்கு அளிக்கப்பட்ட அந்த ஒரே அங்கிபோன்ற உடையை மாற்றியதுமில்லை. குடிப்பதற்கு அளவான நீரும், ஆட்டுப் பாலும், குபூஸ் என்ற ஒருவகை உணவுமே இக்காலங்களில் நஜீபின் ஆகாரங்கள். இஸ்லாமியச் சட்டங்களைக் கடுமையாகப் பின்பற்றும் அரபு நாட்டில், அதே மதத்தைத் தீவிரமாக நம்பும் ஒருவனுக்குத்தான் இவ்வளவு கொடுமைகளும் நேர்கின்றன. இந்நாவலின் கதை வெறும் புனைவு இல்லை. ஓர் ஆட்டின் வாழ்க்கையை வாழ்ந்த நஜீபின் உண்மைக் கதை.

இறைவனின் இடம் குறித்தும் மனிதர்கள் மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றுவது பற்றியும் காத்திரமான கேள்விகளை பென்யாமின் மறைமுகமாக நாவல் முழுக்க எழுப்பிக்கொண்டே செல்கிறார். ‘அல்லா உன்னைக் காப்பாத்தட்டும்’ என்று சாகிற அளவுக்குக் கொடுமைப்படுத்தும் நஜீபின் பாதுகாவலன் அவனிடம் கூறுகிறான். இறைவனின் இடம் என்ன என்ற கேள்வி இங்கு எழுகிறது. இறைவன் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்றால், அர்பாப்பால் (பாதுகாவலன்) எப்படி இவ்வளவு கொடுமைகளை நஜீபுக்குச் செய்ய முடியும் என்ற விமர்சனமும் இங்கு எழுகிறது. ஆடுகள் நஜீபிடம் இரக்கம் காட்டிய அளவுக்குக்கூட தீவிர மதநம்பிக்கையாளனான அவனுடைய பாதுகாவலன் காட்டவில்லை. இந்நாவலை வெறும் புனைவாகக் கருதிக் கடந்துவிட முடியாது. ‘வாசகர்களை மகிழ்விக்க நான் நஜீபின் கதையைத் தேன் தடவியோ ஊதிப் பெரிதாக்கியோ எழுதவில்லை’ என்று பென்யாமின் எழுதியிருக்கிறார். நஜீபைப் போன்று அரேபிய ஆட்டுத் தொழுவங்களில் மாட்டிக்கொண்டவர்களுக்கு இந்த நாவல் அளித்த ஆறுதல் குறித்தும் சிந்திக்க வேண்டும்.

‘ஆடு ஜீவிதம்’ ஒருவரின் துயரக் கதைதான்; ஆனால், அந்தத் துயரம் இந்நாவலை வாசிப்பவர்களுக்கு அளிக்கும் ஆசுவாசம் மிகப் பெரியது. இந்நாவல் எழுதப்பட்டதன் நோக்கமாகக்கூட இதனை எடுத்துக் கொள்ளலாம். இந்த வாழ்க்கை துயரங்களால் ஆனதுதான். ஒவ்வொருவரும் வாழ்நாளில் மகிழ்ச்சியைவிடத் துன்பத்தையே அதிகமும் எதிர்கொள்கிறோம். அந்தத் துயரம் நம்மைத் தீண்டும்போதெல்லாம் நஜீபின் கதை மருந்தாக இருக்கும்.

வாழ வேண்டும் என்ற ஆசைதான் நஜீபை இறுதிவரை போராட வைக்கிறது. நமக்கு நடப்பதை நாம்தான் அனுபவிக்க வேண்டும் என்ற நஜீபின் எண்ணமும் தீவிர சிந்தனைவயப்பட்டது. அந்தக் கொடூரமான வாழ்க்கையில் அங்கு கிடைக்கும் சின்னச் சின்ன மகிழ்ச்சிகளையும் நஜீப் கொண்டாடுகிறான். சூரிய அஸ்தமனத்தைக் கண்டும் எப்போதாவது அங்கு வரும் மூன்றாவது மனிதனைத் தொட்டுப் பார்த்தும் மகிழ்ச்சி அடைகிறான். இவனுக்கு முன்பிருந்தவனின் கட்டில் நஜீபுக்குக் கிடைக்கிறது; அதற்காகவும் மகிழ்கிறான். வாழ்க்கைமீது இவனுக்கு விமர்சனங்கள் இல்லை. யாருடைய வாழ்க்கையையோ இவனை அனுபவிக்க வைத்த இறைவன்மீதும் இவனுக்குக் கோபம் இல்லை. ஆட்டோடு ஆடாகத் தொழுவத்தில் கிடந்து, ஆட்டின் உணவை உண்ண நேர்ந்தபோதும் நஜீபுக்கு யார்மீதும் வருத்தம் இல்லை. ஏனெனில், இந்த வாழ்க்கை ஆண்டவன் கொடுத்தது.

பென்யாமின் வளைகுடா நாட்டில் வாழ்ந்தவர். அதனால்தான் இவ்வளவு துல்லியமாக நஜீபின் கதையை நாவலாக எழுத முடிந்திருக்கிறது. ‘கோட் டேஸ்’ என்ற இந்நாவல் 2009-ல் கேரள சாகித்ய அகாடமி விருதைப் பெற்றிருக்கிறது என்பதும் எஸ்.ராமனின் மொழிபெயர்ப்பில் இந்த நாவல் ஏற்கெனவே உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது என்பதும் கூடுதல் தகவல். விலாசினியின் மொழிபெயர்ப்பு வாசிப்புக்கு எந்தத் தடங்கலும் இல்லாமல் நீரோட்டம் போன்று அமைந்திருக்கிறது. நாக்கில் ஒரு சொட்டு நீரில்லாமல் இரண்டு இரவுகளையும் இரண்டரை பகல்களையும் கடக்கும் நஜீபின் பாலைவன வாழ்க்கை, நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாவலின் அபாரமான பகுதிகளாகும். குளியலறையில் குழாயைத் திறக்கும்போதெல்லாம், குடிக்க ஒரு சொட்டு நீரில்லாமல் இறந்துபோன நஜீபின் சக பயணி ஹக்கீமை நினைத்துக்கொள்கிறேன்.

சுப்பிரமணி இரமேஷ், ‘எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: ramesh5480@gmail.com

*************************

ஆடு ஜீவிதம்

பென்யாமின்

தமிழில்: விலாசினி

எதிர் வெளியீடு, பொள்ளாச்சி - 642002

விலை: 250

தொடர்புக்கு: 99425 11302

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x