

எஸ்.ரா.வுடன் ஒருநாள்
எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புலகம் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் நாளை நடைபெறுகிறது. நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து தலைமை உரையாற்றுகிறார் மேனாள் நீதிபதி சந்துரு. எஸ்.ஏ.பெருமாளும், வேலூர் லிங்கமும் வாழ்த்துரை வழங்குகிறார்கள். இளம் எழுத்தாளர்கள் பலரும் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள், நாவல்கள், அபுனைவுகள் என்று பல்வேறு தலைப்புகளில் வெவ்வேறு அமர்வுகளில் பேசவுள்ளார்கள். இந்நிகழ்வை யாவரும் பதிப்பகமும் நற்றுணை கலந்துரையாடல் அமைப்பும் இணைந்து நடத்துகின்றன. எஸ்.ரா.வின் வாசகர்கள் மழை வெள்ளத்தையும் மீறி இந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஆவலாக இருக்கிறார்கள் என்பதை ஃபேஸ்புக் பதிவுகள் வழியாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த நிகழ்வு மயிலாப்பூரிலுள்ள நிவேதனம் அரங்கில் (யெல்லோ பேஜஸ் அருகில்) நடைபெறுகிறது. இந்நிகழ்வு நாளை (ஞாயிறு) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.
க்ரியா ராமகிருஷ்ணனின் நினைவாக…
பதிப்பாளரும் அகராதியியலருமான க்ரியா ராமகிருஷ்ணன் மறைந்து ஓராண்டு நிறைவடைவதையொட்டி ‘தமிழில் புத்தகக் கலாச்சாரம்: க்ரியா ராமகிருஷ்ணன் நினைவுக் கட்டுரைகள்’ என்ற நூலை ‘க்ரியா’ பதிப்பகம் வெளியிடுகிறது. இந்த நூலின் வெளியீட்டு விழா, வரும் 17-ம் தேதியன்று (புதன்கிழமை) ஜூம் செயலிக் கூட்டத்தின் வழியாக நடைபெறுகிறது. இந்த நூலை வெளியிட்டு உரையாற்றுகிறார் மூத்த பத்திரிகையாளர் ‘தி இந்து’ என்.ராம். உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அறிஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள், க்ரியா ராமகிருஷ்ணனுடன் நெருங்கிப் பழகியவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றவிருக்கிறார்கள். இந்நிகழ்வின் நேரம்: மாலை 6 மணி. ஜூம் ஐடி: 996 4404 8759, பாஸ்கோட்: 854912.
பழநிபாரதிக்கு ‘கவிக்கோ விருது’
இந்த ஆண்டுக்கான கவிக்கோ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. ஒரு லட்சம் பரிசுத் தொகையைக் கொண்ட அந்த விருது கவிஞர் பழநிபாரதிக்கு வழங்கப்படவுள்ளது. இவ்விருது முதன்முதலில் மு.கருணாநிதிக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 21–வது விருதாளராக பழநிபாரதி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவ்விருது விழா வரும் டிசம்பர் 21-ம் தேதி வேலூரில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பழநிபாரதியின் கவிதைகள் குறித்து சுப.வீரபாண்டியன் பேசவுள்ளார். பழநிபாரதிக்கு வாழ்த்துகள்!
ஆத்மார்த்திக்கு ‘பாலகுமாரன் விருது’
எழுத்தாளர் ஆத்மார்த்தி 2021-ம் ஆண்டுக்கான பாலகுமாரன் நினைவு விருதைப் பெறுகிறார். ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையை கொண்ட இவ்விருதைப் பெறுகிற மூன்றாவது படைப்பாளி இவர். பாலகுமாரன் மறைவுக்குப் பிறகு, அவரது நினைவாக வழங்கப்படும் இவ்விருதை ஏற்கெனவே கவிஞர்கள் நரனும் கலாப்ரியாவும் பெற்றுள்ளனர். இதற்கான விழா நாளை (ஞாயிறு) மாலையில் சென்னை – தியாகராய நகர் கிருஷ்ண கான சபாவில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் இல.கணேசன், சுகி.சிவம், ஜோதிடர் ஷெல்வீ, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் விருதுபெறும் ஆத்மார்த்தியை வாழ்த்திப் பேசவுள்ளனர். ஆத்மார்த்திக்கு வாழ்த்துகள்!
சங்கரதாஸ் சுவாமிகள்-99
‘தமிழின் நாடகத் தந்தை' என்று அழைக்கப்படும் தூ.தா.சங்கரதாஸ் சுவாமிகளின் 99-வது நினைவு தினத்தில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள புதுச்சேரி, கருவடிக்குப்பம் மயானத்தில் அவரது வாழ்க்கை வரலாற்று நூல் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது. ‘சாமீ…’ என்ற தலைப்பில் கி.பார்த்திபராஜா எழுதிய இந்த நூலை பரிதி பதிப்பகம் வெளியிடுகிறது. காலை 11.30 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
கலைஞர் பொற்கிழி விருது விழா
பபாசி வழங்கும் 2020, 2021 ஆண்டுகளுக்கான கலைஞர் பொற்கிழி விருது விழா இன்று மாலை 6 மணியளவில் சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெறுகிறது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பபாசியின் ஆர்.எஸ். சண்முகம், எஸ்.கே. முருகன் உள்ளிட்டோர் இந்த விருதளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்கள். 2020-க்கு ந.முருகேசபாண்டியன், அ.மங்கை, அறிவுமதி, பொன்னீலன், சித்தலிங்கையா, ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் 2021-க்கு இராசேந்திர சோழன், அபி, எஸ்.ராமகிருஷ்ணன், வெளி ரங்கராஜன், மருதநாயகம், நிகத் சாஹியா ஆகியோருக்கும் கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கப்படுகின்றன. விருதாளர்களுக்கு வாழ்த்துகள்!
‘பொன்னி’ வைகறையின் புத்தகக் கொடை
கவிஞரும் ‘பொன்னி’ பதிப்பகத்தின் வெளியீட்டாளருமான வைகறைவாணனின் மகன் வை.யாழ்மொழிச்செல்வனுக்கும் இரா.அருள்மணிக்கும் கடந்த வியாழக்கிழமையன்று தஞ்சையில் நடந்த திருமணம் தனித்தமிழ் இயக்கத்தவர்களின் ஒன்றுகூடலாய் அமைந்தது. ‘ஞானாலயா’ பா.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்த விழாவில் செந்தலை ந.கவுதமன், ‘தாமரை’ இதழாசிரியர் சி.மகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. தனது மகனின் மணவிழாவில் வாழ்நாள் சேகரிப்பான அனைத்து நூல்களையும் தமிழ் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ந.மு.வே.நாட்டார் கல்லூரிக்கு நன்கொடையாக அளித்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் வைகறைவாணன். மணமக்கள் சார்பாகத் தான் பயின்ற இராமநல்லூர் அரசுப் பள்ளிக்கு ரூ.20,000 நன்கொடையாக வழங்கியுள்ளார். தமிழ்க் கல்லூரி நூலகத்துக்கும் அரசுப் பள்ளிக்கும் அவர் அளித்துள்ள கொடைகள் நல்லதொரு முன்னுதாரணமாகட்டும்.