Published : 06 Nov 2021 12:19 PM
Last Updated : 06 Nov 2021 12:19 PM

360: புதுமைப்பித்தன் நினைவு விருது

அமெரிக்கத் தமிழர்களின் ‘விளக்கு’ இலக்கிய அமைப்பு கடந்த 25 ஆண்டுகளாகப் படைப்பாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு ‘புதுமைப்பித்தன் நினைவு’ விருது வழங்கிவருகிறது. 2020-க்கான விருதுகளுக்கு கவிஞர் சுகிர்தராணியும் தலித்-பௌத்த வரலாற்று ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எழுத்தாளர்கள் திலகவதி, சு.சண்முகசுந்தரம், சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு விருதுக்குரியவர்களைத் தேர்வுசெய்திருக்கிறது. இந்த விருதுக்கான பரிசுத் தொகை தலா ரூபாய் ஒரு லட்சம். விருது பெறும் சுகிர்தராணிக்கும் ஸ்டாலின் ராஜாங்கத்துக்கும் வாழ்த்துகள்!

ஓவியர் வான்கோ கல்லறையில் ஷோபாசக்தி

“என் முன்னோடி ஆளுமைகளின் துயிலிடங்களைத் தேடித்தேடிச் சென்று பார்ப்பதில் எனக்குத் தீராத வேட்கை உள்ளது. லண்டனிலுள்ள கார்ல் மார்க்ஸ் கல்லறை, கியூபாவின் சாந்தா கிளாரா நகரில் சே குவேராவின் எலும்புகள் புதைத்து வைக்கப்பட்டுள்ள நினைவிடம், செர்பியாவிலுள்ள மார்ஷல் டிட்டோவின் கல்லறை, பாரிஸ் - பேர் லாச்சஸிலுள்ள ஆஸ்கார் வைல்ட் கல்லறை, பாரிஸ் 14-ம் வட்டாரத்திலுள்ள ழான்-போல் சார்த்ர் கல்லறை, பாரிஸ் பந்தியோனிலுள்ள விக்தோர் ஹ்யூகோ கல்லறை, தமிழ்நாட்டில் கீழ்வெண்மணி நினைவிடம், தந்தை பெரியார் கல்லறை எனத் தேடித்தேடிப் பார்த்துள்ளேன்.

கடந்த திங்கள்கிழமை (நவம்பர் 1) வின்சென்ட் வான்கோ கல்லறையைத் தரிசிக்கவும் ஒரு வாய்ப்பு அமைந்தது. பாரிஸிலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ள சிறிய இடுகாட்டில் வான்கோவின் கல்லறை உள்ளது. அவரது இறுதிக் காலத்தை ‘ஓவர்ஸ்-சர்-வாஸ்’ (Auvers-sur-Oise) என்ற இச்சிற்றூரில்தான் அவர் கழித்தார். கல்லறையை நகரசபை பராமரிக்கிறது. பருவகாலங்களைப் பொறுத்துத்தான் கல்லறையைச் சுற்றி சுத்திகரிப்பு நிகழும். செடிகொடிகள் படர்ந்துள்ள கல்லறைதான் அவருக்குப் பொருத்தமானது எனத் தோன்றுகிறது. தொந்தரவில்லாமல் இயற்கையோடு கலந்து அவர் துயிலட்டும்.”
‘இந்து தமிழ்’ நாளிதழுக்காகப் பிரத்யேகமாக ஷோபாசக்தி எழுதியது.

பன்னாட்டுத் தொகுப்பில் தமிழ்க் கவிஞர்கள்

கவிஞர் ஸ்டீஃபன் வாட்ஸ் தொகுத்து சமீபத்தில் வெளியான ‘ஸ்வேல் ஆஃப் வேர்ட்ஸ்’ என்ற தொகுப்பில் 94 மொழிகளைச் சேர்ந்த கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த மொழிகளெல்லாம் லண்டன் ஹாக்னி மாவட்டத்தில் பேசப்படுபவை என்பதுதான் இதனை மேலும் கவனிக்க வைக்கிறது. தமிழிலிருந்து சேரனின் ‘கேள்’ கவிதையும், குட்டி ரேவதியின் ‘தீவை மறிக்கும் கடல்’ கவிதையும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளையும் செய்தவர் மறைந்த மொழிபெயர்ப்பாளர் லெஷ்மி ஹோம்ஸ்ட்ராம். இந்த நூலானது, ஹாக்னி நூலகத்தின் வாசகர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு. இத்தொகுப்பில், தமிழிலிருந்து இடம்பெற்றிருக்கும் சேரனுக்கும் குட்டி ரேவதிக்கும் வாழ்த்துகள்!

வா.செ.குழந்தைசாமி விருதுகள்

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி நினைவாக நிறுவப்பட்ட ‘டாக்டர் வா.செ. குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை’ சிறந்த ஆய்வாளர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கிறது. 2021-க்கான விருதுக்காக ஆய்வாளர்கள் பழ.அதியமானும் ப.சரவணனும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதேபோல் ‘கரூர் டாக்டர் வா.செ.கு. கல்வி ஆய்வு அறக்கட்டளை’யும் சிறந்த ஆய்வாளர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கிறது.

2021-க்கான விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆய்வாளரும் ஆயுர்வேத மருத்துவருமான எம்.மாதவன். இந்த விருதுகள் அனைத்தும் தலா ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையையும் பட்டயத்தையும் உள்ளடக்கியவையாகும். வா.செ. குழந்தைசாமியின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியும் விருது வழங்கும் விழாவும் 12.12.2021 அன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கவிருக்கின்றன. விருதாளர்களுக்கு வாழ்த்துகள்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x