Published : 06 Nov 2021 03:05 AM
Last Updated : 06 Nov 2021 03:05 AM

பறளியாற்று மாந்தர்: ஓர் இலக்கிய சாதனை

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியத்தின் தாக்கம், நவீன இலக்கியத்தின் வெவ்வேறு வடிவங்களில் இன்றும் தொடர்வதைக் காண்கிறோம். கவிதைதான் தொல் இலக்கிய வடிவம். பெரும்பாலான நவீன இலக்கியப் படைப்பாளிகள் கவிதையிலிருந்துதான் தங்கள் எழுத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், கவிதை எழுதாமல் நேரடியாகக் கதை எழுதியவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் மா.அரங்கநாதன் (1932-2017). “சிறுகதையே இன்னொரு விதத்தில் கவிதையோட விளக்கம்தான்” என்று கூறிய இவர், கவிதையின் நுண்மையையும் பருண்மையையும் மிகச் சாதாரணமாகத் தன் புனைகதைக்குள் கொண்டுவந்தவர். அவ்வகையில் மா.அரங்கநாதன், தொல் சமூக மனிதர்களின் தொடர்ச்சி எனலாம். அப்படித்தான் அவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார். அதன்மூலம் தமிழ்ச் சமூகத்தின் தத்துவ மரபு குறித்தும் பண்பாட்டுத் தொடர்ச்சி குறித்தும் ஆழமான உரையாடலை அவரால் முன்னெடுக்க முடிந்திருக்கிறது.

புதுமைப்பித்தன் படைப்புகளில் வெளிப்படும் எள்ளலும் நிலமொழியும் மா.அரங்கநாதன் படைப்புகளிலும் அபாரமாக வெளிப்பட்டிருக்கின்றன. ஆனாலும், அரங்கநாதன் புதுமைப்பித்தனின் நகல் இல்லை. மௌனியின் படைப்புகளைப் போன்று அரங்கநாதன் படைப்புகளிலும் தத்துவ மரபு ஊடாடுகிறது. ஆனால், மௌனியிடம் வெளிப்படுவது சம்ஸ்கிருத மரபு. இதனால், மௌனியை முழுமையாக ஏற்றுக்கொள்வதில் அரங்கநாதனுக்கு ஒரு நெருடல் இருந்திருக்கிறது. இந்தப் பின்புலத்தை உள்வாங்கிக்கொண்டுதான் அரங்கநாதன் 1991-ம் ஆண்டு எழுதிய ‘பறளியாற்று மாந்தர்’ நாவலை வாசிக்க வேண்டும். கதைகூறும் முறைமையில் தனித்தன்மையுடைய தமிழ் நாவல்களுள் இந்நாவலும் ஒன்று. வைதிக மரபின் உருவாக்கப் பின்புலம் குறித்தும் தமிழ் மரபின்மீது அது ஏற்படுத்திய இடையீடுகள் குறித்தும் விரிவான உரையாடலை இந்நாவல் நிகழ்த்துகிறது.

இந்நாவல் வெளிவந்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன. தொல் குடிகள்மீது வைதிக சமயம் நிகழ்த்தும் அதிகாரம் தற்காலத்தில் கூடியிருக்கிறது. தொண்ணூறுகளுக்கு முன்பு அரங்கநாதன் இப்புனைவுவழி முன்வைத்த விமர்சனங்களைத் தற்போது வாசித்தாலும் கூர்மையாக இருக்கின்றன. மூன்று காலகட்டங்களில் இந்நாவலின் கதை நிகழ்வதாக எழுதப்பட்டுள்ளது. களக்காட்டிலிருந்து நிலம்பெயர்ந்து ஆரல்வாய்மொழிக்கு வந்த சிவசங்கரனின் குடும்ப உறுப்பினர்கள்தான் மூன்று காலகட்டங்களிலும் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். கதாபாத்திரங்களுக்குப் பெயர் வைப்பதில்கூட அரங்கநாதன் பிரக்ஞையுடன் செயல்பட்டிருக்கிறார். முப்பதுகளுக்கு முன்பு பெயர்களால் அடையாளப்பட்டவர்கள் தொண்ணூறுகளில் பெயர்கள் அழிந்து பொதுவில் கலந்துவிடுகிறார்கள். அப்பாவின் பெயரை மகனுக்கு வைக்கும் வேரும் அறுந்துவிடுகிறது. தண்ணீரின் சுவையினூடாக மண்ணை அடையாளம் காண்பதில் தொடங்கிய புதினம், இறுதியில் ஊர்மீதான ஈர்ப்பிலிருந்து தம் நினைவுகளை வெளியேற்றுவதில் முடிவடைகிறது.

சங்கப் பாடல்களின் சிறப்புகளுக்குக் காரணம், அப்பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உள்ளுறை, இறைச்சி, தொன்மம் போன்ற குறிப்புப் பொருள்கள்தாம். சங்கப் பாடல்களைத் தற்போது வாசித்தாலும் உரையாசிரியர்களால் வெளிப்படுத்தப்படாத ஏதோவொரு நுட்பம் இன்னமும் மறைந்திருப்பதை அவதானித்துப் புளகாங்கிதம் அடையலாம். காலத்தோடு சேர்ந்து அப்பாடல்களின் நுண்பொருட்களும் தங்களைத் தகவமைத்துக்கொள்கின்றன. ‘பறளியாற்று மாந்தர்’ நாவலுக்கும் இது பொருந்தும். இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த மாந்தர்களின் வாழ்க்கையை இந்நாவல் பேசினாலும், அம்மாந்தர்களின் வாழ்க்கையினூடாக அரங்கநாதன் முன்னெடுத்த உரையாடல்கள் மிக முக்கியமானவை. சிவபெருமான்தான் தொன்மையான தெய்வம் என்பதைத் தன் படைப்புகள் மூலமாக அரங்கநாதன் தொடர்ந்து வலியுறுத்திவந்திருக்கிறார். “எந்த தெய்வம்தான் ஆவுடையார்போல் இல்லை?” என்பதுதான் அரங்கநாதனின் பார்வை. ஆனால், தொன்மையான தமிழ்ச் சமூகத்தின்மீது சம்ஸ்கிருதம் ஆதிக்கம் செலுத்துவதை மிக விரிவாகவே புனைவு விவாதிக்கிறது. வைதிகத்தை எதிர்ப்பது இப்புனைவின் நோக்கமில்லை; அது உருவாக்கியுள்ள பாவனைகளைச் சுட்டுவது இதன் நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.

தீர்க்கமான பார்வை கொண்ட எழுத்தாளர்கள் எதிர்காலத்தைக் கணித்து எழுதுகிறார்கள். சோதிடத்தில் ஆழ்ந்த அறிவுள்ள அரங்கநாதனுக்கு இந்தப் பார்வை கொஞ்சம் அதிகமென்றே கருதுகிறேன். “தமிழ்நாட்டிலே புயல் அபாயம் வருதுன்னு இன்னும் கொஞ்ச நாளிலே இந்தியிலே மட்டும்தான் வானொலி சொல்லும் – சுதந்திரத்தின் அளவு எப்படி சுருங்கிப் போச்சு பாரு” என்று ஒரு கதாபாத்திரம் இந்நாவலில் பேசுகிறது. இன்று இந்த மொழித் திணிப்பு பெரும்பான்மை துறைகளில் நடந்திருக்கிறது. மத்திய அரசு தன் திட்டங்களுக்கு இந்தியிலும் சம்ஸ்கிருதத்திலும்தான் பெயர் வைக்கிறது. அரங்கநாதன் இது குறித்து விரிவாக உரையாடியிருக்கிறார். சம்ஸ்கிருதத்துக்கும் இங்கிலீஷுக்கும்தான் என்ன வித்தியாசம். இரண்டுமே இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என்பது அவர் தரப்பு. நாட்டுப்பற்று என்ற பெயரில் பன்மைத்துவத்துக்கு ஆபத்து வரும் என்பது அரங்கநாதனின் தீர்க்கமான பார்வை. அது நடந்திருக்கிறது. ஓர் இனத்தின் பண்பாட்டைக் கட்டமைப்பதில் எப்போதும் மொழியின் பங்கு முக்கியமானது. சம்ஸ்கிருதத்தை உள்நுழைப்பதினூடாகச் சைவ சமயத்தை அழித்தொழிக்கும் செயலும் தொடர்ந்து நடைபெறும் என்ற பதற்றத்தை இந்நாவலில் நல்லசிவம் வெளிப்படுத்துகிறார்.

ஊரின் நினைவுகளாக இந்நாவல் நீண்டாலும், இக்கதையில் செயல்படும் வெளி அகன்றது. சைவ உணவை உண்பவர்கள் உயர்ந்தவர்கள் என்ற பொதுப்புத்தி பாவனையையும் நாவல் தகர்க்க முயன்றிருக்கிறது. நெல் விளைவித்தவன்தான் மாமிசத்தை ஒதுக்கியிருக்க வேண்டும் என்ற மானுடவியல் பார்வையுடன் அரங்கநாதன் தம் கருத்தை முன்வைக்கிறார். குறவரும் கானவரும் மீனவருமே நம் நிலத்தின் முன்னோர்கள் என்ற இடத்தில்தான் நாவல் முடிவடைகிறது. இதில், சைவம் என்பது வாழ்க்கை முறை. இதனை உணவைக் கொண்டு கட்டமைக்க முடியாது என்பது குறிப்புப் பொருள். வைதிகம் என்பது ஓர் அதிகார மனநிலை. நவீனத் தன்மைகளை ஏற்றுக்கொள்ளாத இந்த மனநிலை, சைவத்தை ஆட்சி செய்ய நினைக்கிறது. இங்கு சைவம் என்பதைத் தமிழ் என்றும் வாசிக்கலாம்.

இந்நாவலை எத்தனை முறை வாசித்தாலும் நாம் புதிதாக அதிலிருந்து பெறுவதற்கு ஏதாவது ஒன்று இருந்துகொண்டே இருக்கும் என்பது என் நம்பிக்கை. ‘மீண்டும் புறப்படும்போது அது வேறு ஒரு பயணம்’ என்று அரங்கநாதன் இப்புனைவில் ஓரிடத்தில் எழுதியிருக்கிறார். அதுபோலத்தான் இந்நாவலும். ஒவ்வொரு மீள்வாசிப்பிலும் நாம் அரங்கநாதனின் வேறொரு பிரதியைத்தான் வாசிக்கிறோம். எல்லா நாவலுக்கும் இக்குணம் அமைந்துவிடுவதில்லை. சைவப் பின்புலத்திலிருந்து நாவலாசிரியர் இப்புனைவை எழுதியிருந்தாலும், மானுட அன்புதான் இவர் படைப்புகளின் இடுபொருட்களாக இருக்கின்றன. மனிதர்களைத் தாண்டி தெய்வத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை என்பதையும் இவர் தொடர்ந்து பேசிவந்தார். தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளிகளுள் மா.அரங்கநாதனும் ஒருவர். அவரது படைப்புகள்தான் இதற்குச் சான்று.

- சுப்பிரமணி இரமேஷ், ‘தொடக்க காலத் தமிழ் நாவல்கள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: ramesh5480@gmail.com

நவம்பர் 3: மா.அரங்கநாதன் பிறந்தநாள்

--------------------

மா.அரங்கநாதன் படைப்புகள்

நற்றிணை வெளியீடு, சென்னை-05

தொடர்புக்கு: 9486177208

விலை: ரூ.890

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x