

தமிழில் எழுதப்பட்ட முதல் சுயசரிதை ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு. இந்தியாவில் இந்தியர் ஒருவர் எழுதிய முதல் சுயசரிதையும் அநேகமாக இதுதான்.
ஆனந்தரங்கப்பிள்ளை 1709-ம் ஆண்டு சென்னை, பெரம்பூரில் பிறந்தவர். பத்து வயதிலேயே புதுச்சேரி சென்றார். பிரெஞ்சுக்காரர்களிடம் தந்தையுடன் வணிகராக இருந்தார். 23 வயதில் ஆனந்தரங்கப்பிள்ளைக்கு உதவித் தரகர் வேலை கிடைத்தது. அதுதான் அவருக்கு அதிகாரபூர்வமான முதல் வேலை.
ஆனந்தரங்கப்பிள்ளையை கைதூக்கிவிட்டவர் களில் முக்கியமானவர் ஆளுநர் துய்ப்ளே. 12 ஆண்டுகள் பதவியில் இருந்த துய்ப்ளே தன்னையும் வளர்த்துக்கொண்டு ஆனந்தரங்கப் பிள்ளையும் வளர்ச்சியடைய உதவிபுரிந்தார்.
ஆனந்தரங்கப் பிள்ளைக்கு துபாஷி பதவியை ஆளுநர் துய்ப்ளேதான் கொடுத்தார். தமிழ், பிரெஞ்சு மொழி அறிந்தவர்கள் துபாஷியாக இருந்தார்கள். இவர்கள் பிரெஞ்சுக் கடிதங்களைத் தமிழிலும், தமிழ்க் கடிதங்களை பிரெஞ்சு மொழியிலும் மொழிபெயர்த்து அரசுக்கு உதவினார்கள். துபாஷிகள் செல்வாக்கு மிக்கவர்கள். அத்துடன் அதிகார மையமாகவும் திகழ்ந்தனர். காரணம், ஆட்சியாளரோடும் மக்களோடும் நேரடித் தொடர்பு கொண்டிருந்தது துபாஷிகளே.
ஆனந்தரங்கப் பிள்ளை முதலில் பிரெஞ்சு மொழியை பேசக் கற்றுக்கொண்டார். பின் எழுதவும் செய்தார். கூடவே, தமிழ், தெலுங்கு, இந்துஸ்தானி மொழிகளையும் கற்றிருந்தார். அதுவே அவருக்கு பெரும் பலமாக இருந்தது.
1736-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பை எழுத ஆரம்பித்தார். 1761-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதிவரை ஒவ்வொரு நாளும் விடாது எழுதியுள்ளார். முதல் நாள் நாட்குறிப்பில், இரண்டு பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் இயக்குநர்களில் யாருடைய பெயரைப் பதிவேட்டில் முதலில் எழுதுவது என்பதில் ஏற்பட்ட பிரச்சினை பற்றியே எழுதியுள்ளார். புதுச்சேரியில் நடைப்பெற்ற நூதன நிகழ்ச்சிகளையும், கப்பல் வந்து சரக்குகளை ஏற்றி இறக்கிச் செல்வதையும் வைத்து நாட்குறிப்பு எழுத ஆரம்பிக்கிறேன் என்கிற முன்னுரையோடு எழுதினார். கடைசி நாளின் நாட்குறிப்பு மூக்குக் கண்ணாடி அணிந்துகொண்டு கையெழுத்து போட்ட விவரத்தோடு முடிவடைகிறது.
இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து எழுதிய நாட்குறிப்புகள் சுமார் 5,000 பக்கங்கள் கொண்டவை. இந்த நாட்குறிப்புகள் அவர் காலத்தில் புத்தகமாக வரவில்லை. 1924-ல் வ.வே.சு. அய்யர் மூலம், சுத்தானந்த பாரதியின் ‘பாலபாரதி’ இதழில் சில பகுதிகள் முதல் முதலாகத் தமிழில் அச்சேறியது.
ஆனந்தரங்கப் பிள்ளை காகிதத்தில் பேனாவால் மை கொண்டு எழுதினார். நாட்குறிப்பு எழுத பெரிய அளவு நோட்டுப் புத்தகத்தை பயன்படுத்தியிருக்கிறார். அவர் காலத்தில் நடைமுறையில் இருந்த பேச்சு வழக்கு மொழியில் எழுதினார். மெய்யெழுத்துக்களின்மீது புள்ளி வைக்காமலும், குறில், நெடில் அதிக வேறுபாடு இல்லாமலும்தான் எழுதியிருக்கிறார். உருது, பாரசீகம், தெலுங்கு, பிரெஞ்சு, போர்த்துக்கீஸ், இந்துஸ்தானி சொற்கள் அதிகமாக இருக் கின்றன.
ஆனந்தரங்கப் பிள்ளைக்கு எழுதுவதில் உற்சாகம் இருந்தது. அதனால் விடாது எழுதினார். புதுச்சேரி பற்றி எழுதியுள்ளார். 1701-ம் ஆண்டு புதுச்சேரியில் பிரான்ஸ் நிர்வாகம் ஏற்பட்டது பற்றி எழுதியுள்ளார். ஆளுநர், துபாஷிகள் பற்றி எழுதியுள்ளார். கேட்டது, பார்த்தது என்று எல்லாவற்றையும் பற்றி எழுதும் ஆர்வம் இருந்தது.
பிரெஞ்சுக்காரர்கள் காபிப் பிரியர்களாக இருந்தது பற்றி எழுதியுள்ளார். ஆரஞ்சுப் பழம், மாம்பழம், மலேசியாவிலிருந்து டூரியான் பழம் வந்தது பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். புதுச்சேரியில் இருந்த வேதபுரீஸ்வரர் கோயில் இடிக்கப்பட்டது பற்றி எழுதியுள்ளார்.
1912-28-ம் ஆண்டுகளில் சென்னை மாநில அரசு ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பை 12 தொகுதிகளாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.
ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு வரலாற்று நோக்கில் அரிய ஆவணம் என்பது மட்டுமல்லாமல், 250 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழி எவ்வாறு எழுதப்பட்டது. பேச்சு வழக்கு எப்படியிருந்தது என்பது பற்றித் தெரிந்துகொள்ளவும் ஆதாரமாக உள்ளது.
5,000 பக்கங்களைக் கொண்ட நாட்குறிப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளைத் தற்போது சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ளது.
தேர்தெடுக்கப்பட்ட ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு |
- நா. கிருஷ்ணமூர்த்தி,
‘கசடதபற’ இதழின் நிறுவனர்களில் ஒருவர்.