

எழுத்தாளரும் மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாவல் அவருக்கு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத் தந்தது.
மதுரையைப் பற்றிய இந்த நாவல், தற்போது ஆங்கிலத்தில் ‘தி பாஸ்டியன்’ (The Bastion) என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. பட்டு எம்.பூபதி இந்த நாவலை மொழிபெயர்த்திருக்கிறார். இந்த மொழிபெயர்ப்பை சாகித்ய அகாடமி நிறுவனமே வெளியிட்டிருக்கிறது. ‘காவல் கோட்டம்’ உலகெங்கும் பயணிக்க வாழ்த்துகள்!
மலையாளத்தில் தமயந்தி
எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான தமயந்தி அதிகம் சிறுகதைகளுக்காகத்தான் அறியப்படுகிறார். அவரது ‘நிழலிரவு’ நாவலும் முக்கியமான படைப்பாகும். இந்த நாவல் தற்போது மலையாளத்தில் ‘நிழல் சித்திரங்கள்’ என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஃபாபியன் பப்ளிஷர்ஸ் இந்த நூலை வெளியிட்டிருக்கிறார்கள். தமிழிலிருந்து தொடர்ந்து பலரின் கவிதைகளையும் மலையாளத்துக்கு மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும் ஷாஃபி செறு மாவிலாயி இந்த நாவலை மொழிபெயர்த்திருக்கிறார். ‘நிழலிரவு’ மேல் மலையாள வெளிச்சம் விழட்டும்!
மீண்டும் அம்ருதா!
2004-ல் தொடங்கப்பட்டது ‘அம்ருதா' இதழ். கரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் கடந்த ஆண்டில் இந்த இதழின் அச்சுப் பதிப்பு நின்றுபோனது. தற்போது தளர்வுகளைத் தொடர்ந்து, அக்டோபர் மாதத்திலிருந்து மீண்டும் ‘அம்ருதா’ இதழ் அச்சில் வெளிவருகிறது. இதழ் தொடர்புக்கு:
044 - 2435 3555.
ஸ்பாரோ விருதுகள்
எழுத்தாளர் அம்பையின் ஸ்பாரோ அமைப்பு பல ஆண்டுகளாக இலக்கிய விருதுகள் வழங்கிவருகிறது.
2021-க்கான விருதுகளுக்குத் தமிழில் லறீனா அப்துல் ஹக், கலைச்செல்வி,
எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றனர். பிற மொழிக்கான விருதுக்கு துளு மொழி எழுத்தாளரும் துளு மொழிக்கு இலக்கிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து செயல்பட்டுவருபவருமான சுனீதா எம்.ஷெட்டி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். விருதாளர்களுக்கு
வாழ்த்துகள்.
பழ.அதியமானுக்கு விருது
டாக்டர் வா.செ. குழந்தைசாமியின் நினைவாக ஆண்டுதோறும் சிறந்த ஆய்வாளர்களுக்கு டாக்டர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளையின் சார்பில் விருது வழங்கப்படுகிறது. 2021-ன் விருதுக்குத் தேர்வாகியுள்ளவர் வரலாற்று ஆய்வாளர் பழ.அதியமான். ரூ.ஒரு லட்சம் பரிசுத் தொகையையும் பட்டயத்தையும் இந்த விருது உள்ளடக்கியிருக்கிறது. டிசம்பர் மாதம் நடைபெறும் விழாவில் இந்த விருது பழ.அதியமானுக்கு வழங்கப்படுகிறது.
படித்த கல்லூரியிலேயே…
எழுத்தாளர், ஆவணப் பட இயக்குநர், தொலைக்காட்சி நெடுந்தொடர் வசனகர்த்தா என்று பல முகங்கள் கொண்டவர் ஜா.தீபா. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘நீலம் பூக்கும் திருமடம்’. இதே தலைப்பில், அந்தத் தொகுப்பில் இடம்பெற்ற கதையானது திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் இளங்கலைப் பொதுத் தமிழ்ப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இதில் விசேஷம் என்னவென்றால், அந்தக் கல்லூரியில்தான் தீபா படித்தார். கல்லூரிப் பாடத்திட்டங்களில் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளும் சேர்க்கப்படுவது வரவேற்புக்குரியது! ஆரோக்கியமான இந்தப் போக்கு தொடரட்டும்!
புத்தகக்காட்சி குரோம்பேட்டையில்...
சென்னை குரோம்பேட்டையில் வள்ளி புத்தக நிலையமும் ‘இந்து தமிழ் திசை’யும் சேர்ந்து நடத்தும் புத்தகக்காட்சி நேற்று தொடங்கியது. இந்தப் புத்தகக்காட்சி 02.11.2021 வரை நடைபெறுகிறது. ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் உட்பட அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு.
இடம்: செல்வம் மஹால்,
ராதா நகர் பிரதான சாலை (கவிதா மருத்துவமனை எதிரில்), குரோம்பேட்டை. நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை. தொடர்புக்கு:
9884355516
அந்த அரபிக் கரையோரம்…
கவிஞர் ஈரோடு தமிழன்பனின் ‘கனாக் காணும் வினாக்கள்’, ‘இன்னும் சில வினாக்கள்’ ஆகிய இரு கவிதைத் தொகுப்புகளையும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபுத் துறைப் பேராசிரியர் அ.ஜாகிர் ஹுசைன் அரபியில் மொழிபெயர்த்துள்ளார். கோழிக்கோடு லிபி பதிப்பகம் பதிப்பித்துள்ள இந்நூல், நவம்பர் 4-ம் தேதியன்று ஷார்ஜா உலகப் புத்தகக் காட்சியில் வெளியிடப்படவுள்ளது. அரபி செல்லும் ஈரோடு தமிழன்பனுக்கு வாழ்த்துகள்!