Published : 30 Oct 2021 03:12 am

Updated : 30 Oct 2021 06:54 am

 

Published : 30 Oct 2021 03:12 AM
Last Updated : 30 Oct 2021 06:54 AM

பெண்மையும் இயற்கையும் இணையும் கோடுகள்

book-review

கறுப்பு மைக் கோட்டுச் சித்திரங்களின் வழியாக இசைமையையும் புலன் ஈர்ப்பையும் ஏற்படுத்த வல்ல தமிழ் நவீன ஓவியர்கள் சிலர்தான். ஆதிமூலம், சந்ரு, மருது, மனோகரின் பட்டியலில் ஓவியரும் நிர்மாணக் கலை முன்னோடியுமான மு.நடேஷுக்கும் பிரதான இடம் உண்டு. அரசு அலுவலகத்தில் வேலை பார்த்த அம்மா, வீட்டுக்குக் கொண்டுவரும் துண்டுக் காகிதங்களில் சிறுவயதிலேயே கிறுக்கி வரையத் தொடங்கிய நடேஷுக்குக் கோட்டோவியம் என்பது உயிர்த்திருப்பதன் தவிர்க்க முடியாத அம்சமாகவே இருக்கிறது. இந்நிலையில்தான், ஓவியருக்கு அத்தியாவசியமான கண்கள் பழுதுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அதை உணர்த்தும் அர்த்தத்திலேயே ‘பிஃபோர் பிகமிங் பிளைண்டு’ (Before Becoming Blind) என்ற அதிர்ச்சி தரக்கூடிய தலைப்புடன் தனது சித்திர நூலொன்றை வெளியிட்டுள்ளார் நடேஷ்.

தனது கோடுகளுக்கு விடுதலை அளித்த முதல் ஆசிரியர் என்று ஆர்.பி.பாஸ்கரனை சென்னை நுண்கலைக் கல்லூரியில் பயின்றவரான நடேஷ் குறிப்பிடுகிறார். இரண்டாம் ஆசிரியராக ஓவியர் சந்ருவை மதிப்பிடுகிறார். தென்னிந்தியக் கோயில்களுக்கு அவர் அழைத்துச்சென்ற சுற்றுலாவில் பார்த்த சிற்பங்கள் தனது கோட்டைத் தமிழ்க் கோடாக மாற்றின என்கிறார். பல்லவச் சிற்பங்களில் உள்ள களிமண் குழைவையும் மென்மையையும் இவர் கோட்டோவியங்களில் பார்க்க முடியும். இவரது ஓவியங்களில் பல்லவச் சிற்பங்களின் தாக்கத்தை உணரலாம் என்று ஓவிய விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒருவரது தீண்டலில் களிமண் நெகிழ்வதுபோலக் காகிதத்தில் இவரது இயக்கத்தில் கோடுகள் இயங்குகின்றன. காகிதத்தில் பேனாவை இறக்கிய பிறகு சித்திரத்தை உருவாக்காமல், மனதில் முழுமையாக உருவம் உருக்கொண்ட பிறகே அதைக் காகிதத்தில் வரைவதால் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் துலக்கமாக இருக்கின்றன அவரது சித்திரங்கள். அனிமேஷன் திரைப்படம் ஒன்றுக்குப் பணியாற்றிய அனுபவமும் அவரது கோட்டுச் சித்திரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓவியர் முகாம் ஒன்றுக்காக கோவாவில் தங்கியிருந்தபோது, இவர் பார்த்த வகைவகையான செடி, கொடிகளும் சிற்றுயிர்களும் இந்தச் சித்திரங்களில் இன்னமும் நெளிகின்றன. “நான் எதை வரைகிறேனோ அதன் ஒட்டுமொத்தப் பரும அளவையும் கொண்டுவருவதில் என் கவனம் இருக்கிறது. பருமன், நிறம், ஒளி என இயற்கையில் நாம் காணக்கூடிய எல்லாவற்றையும் ஒற்றைக் கோட்டில் கொண்டுவர விரும்புகிறேன்’’ என்கிறார் நடேஷ்.

சிறுவனாக இருக்கும்போது படித்த பேண்டம் காமிக்ஸின் தாக்கம் இன்றுவரை இவரது விலங்குகள் சித்திரங்களில் உள்ளது. புலியும் குதிரையும் அதனால்தான் நடேஷிடம் குழந்தைத்தன்மை கொள்கின்றன. விலங்குகளை வரையும் திறனோடு கல்லூரிக்குள் நுழைந்த நடேஷ், மனித உடல் உருவங்களையும் வரையத் தொடங்கினார். அவரது தந்தை ந.முத்துசாமி தொடங்கி நடத்திய கூத்துப்பட்டறையில் ஒளி வடிவமைப்பாளராகப் பணியாற்றத் தொடங்கினார் நடேஷ். ஒளியை வடிவமைப்பவராக நடனக் கலைஞர்கள், நடிகர்களின் உடல்களை நெருக்கமாகப் பார்க்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றார். அங்குதான் இவர் வரைந்த உடல்கள் அசைவூட்டத்தைத் தொடங்கின. அசைவையும் வெளிப்பாட்டையும் தெரிவிக்கும் உறுப்புகளான கால், கை, முகம் இவற்றைப் பூதாகரப்படுத்தினார்.

“அனுபவங்கள் எங்கிருந்து வருகின்றன? அவை உங்கள் உடலிலிருந்து வருகின்றன. புலனுணர்ச்சியிலிருந்து வருகின்றன. கலை அந்த அனுபவங்களைச் செயல்படுத்துவது’’ என்கிறார் நடேஷ். பெண் உருவங்களையும் விலங்குகளையும் சேர்ந்து வரையும் நடேஷ், இயற்கையைப் பெண்மையின் சான்னித்தியமாகப் பார்க்கிறார். வாழ்வின் நிறை பொதிந்த முட்டைகள், தாவர வடிவங்கள், குதிரைகள், யானைகள் என இயற்கை இவரது ஓவியங்களில் வழிகிறது. ஆண்வயமான உலகப் பார்வைதான் மனிதகுலத்தை உலக அழிவை நோக்கி நகர்த்தியிருக்கிறது என்ற பார்வையை நடேஷ் வெளியிடுவதாக எழுத்தாளர் எம்.டி.முத்துக்குமாரசாமி கூறுகிறார்.

“எனது சித்திரம் என் வாழ்வை நடத்த நான் அனுமதித்தேன். படைப்புக் காரியத்தில் அடைக்கல உணர்வு கிடையாது. வேலை முடிந்தவுடன் அங்கே உரிமைத்துவம் போய்விடுகிறது” என்று கூறும் ஓவியர் மு.நடேஷ், தனது முழு வாழ்வையும் கலைக்கு அர்ப்பணித்தவர். தந்தையை முன்னிட்டு சிறு வயதிலிருந்தே தமிழ்ச் சிற்றிதழ் இலக்கியம் சார்ந்த தமிழ் எழுத்தாளர்களுடன் பழகிப் பணியாற்றியவர். நவீன இலக்கிய நூல்கள், இலக்கியப் பத்திரிகைகளை இவரது சித்திரங்கள் அழகுபடுத்தியுள்ளன.

வைஷ்ணவி ராமநாதனின் சிறந்த அறிமுகத்துடன் வெளியாகியுள்ள மு.நடேஷின் இந்தச் சித்திர நூல், ஓவியங்களை ஆராதிப்பவர்கள் வாங்கிக் கொண்டாட வேண்டியதாகும்.

பிஃபோர் பிகமிங் பிளைண்டு – டிராயிங்ஸ் பை நடேஷ்

மு.நடேஷ்

கடவு வெளியீடு, கூத்துப்பட்டறை,

சென்னை - 92

தொலைபேசி: 98401 34288

விலை: ரூ. 750

Book reviewமு.நடேஷ்Before Becoming Blindபிஃபோர் பிகமிங் பிளைண்டுபிஃபோர் பிகமிங் பிளைண்டு – டிராயிங்ஸ் பை நடேஷ்கடவு வெளியீடு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x