

‘நாடகமே உலகம் நாளை நடப்பதை யார் அறிவார்...’
இது நான் திரைப்படத்தில் கேட்ட முதல் தத்துவப் பாட்டு. இதை செருகளத்தூர் சாமா என்றொரு நடிகர் பாடுவார். படத்தின் பெயர் ‘சிந்தாமணி.’ படத்தின் கதாநாயகராகிய எம்.கே.தியாக ராஜ பாகவதர் சிந்தாமணியின் வீட்டுக் குப் போகும் நேரத்தில் வழியில் ஒரு பெரியவர் இப்படிப் பாடுவார். முதல் இரு சொற்கள் ஷேக்ஸ்பியரில் இருந்து எடுத்தது. அடுத்த சொற்கள் இந்தியப் பாரம்பரியத் தத்துவத்தை ஒட்டியவை.
நான் ‘சிந்தாமணி’ படம் பார்த்தபோது எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். அந்த வயதில் எவ்வளவு புரிந்திருக்க முடியும்? ஆனால், படத்தைக் கண் கொட்டாது பார்த்தேன். அதில் ஒரு குறிப்பிட்ட இரவு மிகவும் தீவிரமானது. பில்வமங்களின் மனைவி இறக்கக் கிடக்கிறாள். மழை கொட்டுகிறது. பில்வமங்களுக்கு வழி தவறிப் போகிறது. நடுவில் ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. அதைக் கடக்க வேண்டும். இருட்டில் ஒரு கட்டை மிதந்து வருகிறது. பில்வமங்கள் அந்தக் கட்டையின் உதவி கொண்டு ஆற்றைக் கடக்கிறான். திரும்பிப் போக வேண்டுமல்லவா?
கட்டையை இழுத்துப் பத்திரமாக வைத்து சிந்தாமணி வீடு அடைகிறான். முன் கதவு திறக்கவில்லை. பின்பக்கம் போகிறான். உயரமான சுவர். அங்கே கயிறு போல ஏதோ தொங்குகிறது. அதைப் பிடித்து வீட்டினுள் செல்கிறான். இந்தப் புயலில் ஏன் வந்தீர்கள் என்று சிந்தாமணி கேட்கிறாள். வீட்டுக்குள் எப்படி நுழைந்தீர்கள் என்றும் கேட்கிறாள். இருவரும் கொல்லைபுறச் சுவரருகே போகிறார்கள். அவர் சுவர் ஏற உதவியது கயிறு அல்ல, ஒரு பாம்பு. இன்னும் திடுக்கிட வைத்தது, அவர் ஆற்றைக் கடக்க உதவியது ஒரு கட்டையல்ல, அவருடைய மனைவியின் பிணம்! சிந்தாமணி கேட்பாள்: “என் உடலுக்கா இப்படி?” இது அவர் வாழ்க்கையை மாற்றிவிடுகிறது.
செருகளத்தூர் சாமா ஒரு துணைப் பாத்திரம்தான். ஆனால், அவர் ஒரு தத்துவப் பாட்டைப் பாடுவார். இந்தியத் திரைப்படங்கள் பேச ஆரம்பித்ததில் இருந்து 50 ஆண்டுகளுக்கு ஒரு தத்துவப் பாடலாவது இல்லாமல் ஒரு படம் இருக்க முடியாது.
ஒரு புகழ் பெற்ற அகில இந்தியத் தத்துவப் பாடல் ‘பாபா மன்கி ஆன்கேன் கோல்.’ இறைவா, என் மனக் கண்ணைத் திற.. அல்லது அவர் கடவுளை வேண்டி ‘உன் மனக் கண்ணைத் திற’ என்று பாடியிருக்கலாம். இதைப் பாடியவர் சைகல் காலத்திலேயே புகழ் பெற்ற பாடகர் கே.சி.டே. அவருக்குக் கண் பாதிக்கப்பட்டிருந்தது. கண்ணில்லாமல் இருந்த ஒரு பாடகர் ‘மனக் கண்ணைத் திற’என்று பாடுவது இரட்டிப்பு உருக்கம். தமிழில் பி.ஜி. வெங்கடேசனையும் எம்.எம்.மாரியப்பாவையும் தென்னாட்டு கே.சி.டே என்பார்கள். பிற்காலத்தில் இந்தித் திரைப்படங்களில் பாடிப் புகழ் பெற்ற மன்னா டே, கே.சி.டேயின் உறவினர் என்று கூறப்படுகிறது. மன்னா டே தத்துவப் பாடல் பாடினதாகத் தெரியவில்லை.
செருகளத்தூர் சாமா பல தியாகராஜ பாகவதரின் படங்களில் வந்திருக்கிறார்.பாகவதரின் பாட்டு, என்.எஸ்.கிருஷ்ணன் நடிப்பு இவை தவிர வேறு பொழுது போக்குஅம்சம் என்று ஏதும் இருக்காது. ஆனால் பாகவதரின் பாட்டுக்காகவே மக்கள் திரும்பத் திரும்பப் போவார்கள். பாகவதருக்குச் ‘சிந்தாமணி’ படத் திலேயே நட்சத்திர அந்தஸ்து வந்துவிட்டது. அதற்குப் பின் வந்த ‘திருநீலகண்டர்’ படத்தில் பாகவதரை மிரட்டுபவராக செருகளத்தூர் சாமா நடிப்பார். சிவனே சிவனடியார் போல வந்து திருநீலகண்டரிடம் ஒரு மண் கலயத்தைக் கொடுத்து, “இதைப் பத்திரமாகக் காத்திடு. நான் மீண்டும் கேட்கும்போது என்னிடம் கொடு” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். அவர் மீண்டும் வந்து கலயத்தைக் கேட்கும்போது திருநீலகண்டர் புதைத்து வைத்த இடத்தில் தேடுவார். இருக்காது. அந்தக் காட்சியில் சாமா பாகவதரை விரட்டு விரட்டு என்று விரட்டுவார். நடிப்பு என்றாலும் பாகவதர் போன்ற ஒரு நட்சத்திர நடிகரை அவருக்கு இணையாக எதிர் கொள்வார். இந்தப் படமும் வெள்ளி விழா, பொன் விழா எனத் தமிழ் நாடெங்கும் ஓடியது. செகந்திராபாத் போன்ற ஒரு தெலுங்கு ஊரிலும் மூன்று மாதங்கள் ஓடிற்று. தத்துவப் பாடல் என்று இல்லாதிருந்தும் படமே ஒரு தத்துவப் படமாக இருந்தது.
எனக்கு நினைவில் அறிந்த வரை நான் தமிழ்த் திரையில் கண்ட கடைசித் தத்துவக் காட்சி ‘பாவமன்னிப்பு’ படத்தில். சிவாஜிகணேசன் ஒரு முஸ்லிமாக நடிப்பார். சைக்கிளில் போகிறபோது
‘வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்’
என்று பாடுவார். இந்தப் பாட்டின் மூலப் பிரதியோ என நினைக்கும்படி ‘நாஸ்திக்’ என்ற இந்திப் படத்தில் பிரதீப் என்ற கவிஞர் பாடிய பாட்டு இருக்கிறது. ‘நாஸ்திக்’ தேசப் பிரிவினை நாட்கள் பற்றியது. அப்போது நடந்த அக்கிரமங்களைக் கண்டு கதாநாயகன் திகைக்கிறான். பின்னணியாக ஒரு தத்துவப் பாட்டு ஒலிக்கும். பிரதீப் தத்துவப் பாடல்கள் எழுதியே புகழ் பெற்றவர். அவரிடம் ஒரு சிக்கல், பாடலை எழுதி அதை அவரே பாட வேண்டும் என்று நிர்பந்திப்பார். அவர் புகழ் கண்டு படத் தயாரிப்பாளர்கள் இந்தக் கடுமையான நிபந்தனைக்கு இணங்கிப் போவார்கள்.
மூன்றாம் வகுப்பு இருந்த வரை, ரயில் பயணத்தின்போது சினிமாத் தத்துவப் பாடல்களைப் பாடிக் கொண்டு பிச்சைக்காரர்கள் வருவார்கள். தத்துவ போதனை பிச்சைக்காரர்களுக்கே உரியது போலிருக்கும். இவர்கள் சாதாரணமாக ஒருவராக வரமாட்டார்கள். ஒரு ஆண், ஒரு பெண். இருவரில் ஒருவருக்குக் கண் இருக்காது. ஆனால் ஓடும் ரயிலில் ஒரு பெட்டியில் இருந்து இன்னொன்றுக்கு அவர்கள் போவார்கள். மிகவும் பயமாக இருக்கும்.
சென்னை விஜயவாடா பகுதியில் தான் மிகச் சிறந்த தத்துவப் பாடல்கள் கிடைக்கும். பல சந்தர்ப்பங்களில் இவர்கள் ஹார்மோனியம் வைத் திருப்பார்கள். அந்த வாத்தியத்தில் அவர்கள் விரல்கள் விளையாடும். இந்த வாத்தியத்தைப் பலர் பழித்தாலும் இது கண்டுபிடிக்காது போயிருந்தால் சினிமா இசை அமைப்பாளர்கள் இயங்கியிருக்க முடியாது என்றே தோன்றும்.
தத்துவப் பாடல்களுக்குப் பிச்சைக் காரர்கள் மட்டும் உரிமை கொண்டாட முடியாது. இந்திய சினிமாக்களில் காதல் தோல்வி ஓர் முக்கிய அம்சம். உடனே கதாநாயகனோ, கதாநாயகியோ தத்துவங்களை உதிர்ப்பார்கள். நாகேஸ்வர ராவ் நடித்த ‘தேவதாஸ்’ படத்தில்தான் எத்தனை பாடல்கள், எத்தனை தத்துவங்கள்!
- புன்னகை படரும்…
படங்கள் உதவி: ஞானம்