

நாகர்கோவில் ஜாப்ரோ பல் மருத்துவமனைக்கு பல்நோயாளிகள் மட்டுமல்லாது, புத்தக வாசிப்பாளர்களும் படையெடுக்கின்றனர். மருத்துவமனை வளாகத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்களோடு தரமான நூலகமும் அமைத்துள்ளார் மருத்துவர் பெரில். “என்னோட அம்மா லாரன்ஸ்மேரி ஓய்வுபெற்ற நூலகர். பள்ளிக்கால விடுமுறை நாட்களில் புத்தகங்கள் வாசித்துதான் பொழுதுகள் நகரும். என் வீட்டிலேயே ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருந்தன.
புத்தகங்களை வீட்டிலேயே வைத்திருப்பதைவிட பல் மருத்துவமனைக்குள் நூலகம் அமைத்தால், மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால்தான் இந்த ஏற்பாடு. மருத்துவமனைக் கட்டிடம் கட்டும்போதே நூலகத்துக்கும் இடம் ஒதுக்கிவிட்டோம்” என்கிறார் பெரில். மருத்துவமனையில் ஒரு நோயாளிக்குச் சிகிச்சை வழங்கிக்கொண்டிருக்கும்போது, பிற நோயாளிகள் அதிக நேரம் காத்திருக்கும் சூழல் இருக்கும். கைபேசிக்குள் சங்கமிக்கவும், தொலைக்காட்சியைப் பார்க்கவும் அவரவர் இல்லங்களிலேயே வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தை அர்த்தமுள்ளதாக்கும் முயற்சி இது. உடலுக்கு மருத்துவ சிகிச்சை கொடுத்தாலும், நோயாளியின் மனதுக்குப் புத்தகங்கள்தான் பெருமருந்து என்று சொல்லும் மருத்துவர் பெரிலின் முன்னெடுப்பைப் பிற மருத்துவர்களும் பின்பற்றலாம்.
அ.மார்க்ஸுக்கு விருது
ஜீரோ டிகிரி பப்ளிஷிங் - தமிழரசி அறக்கட்டளை வழங்கும் 2021-ம் ஆண்டின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ பேராசிரியர் அ.மார்க்ஸுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருது ரூ.ஒன்றரை லட்சம் பரிசுத் தொகையை உள்ளடக்கியது. இயற்பியல் பேராசிரியராக ஓய்வுபெற்ற அ.மார்க்ஸ் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக மனித உரிமைச் செயல்பாடுகளில் ஈடுபட்டுவருபவர்; சிறுபான்மையினர் நலனுக்காகவும் உரிமைக்காகவும் எப்போதும் முன்நிற்பவர்; சிற்றிதழ் வட்டத்திலும் தீவிரமாகச் செயல்பட்டுவருபவர். விருது பெற்றிருக்கும்
அ.மார்க்ஸுக்கு வாழ்த்துகள்!
மாற்கின் நாவல் வெளியீடு
எழுத்தாளரும் சேசு சபையைச் சேர்ந்தவருமான மாற்கு எழுதிய ‘முன்னத்தி’ நாவலின் வெளியீடு திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் இன்று நடைபெறுகிறது. இந்த நாவலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிடுகிறார். இது மாற்கு சேசு சபைக்கு வந்த 50-வது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தகக்காட்சி
நாகர்கோவில் புத்தகக்காட்சி: மக்கள் வாசிப்பு இயக்கமும் முன்னேற்றப் பதிப்பகமும் இணைந்து நாகர்கோவிலில் புத்தகக்காட்சி நடத்துகின்றன. நேற்று தொடங்கிய இந்தப் புத்தகக்காட்சி, நவம்பர் 15 வரை நடைபெறுகிறது. ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் உட்பட அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. இடம்: வருவாய்த் துறை அலுவலர் சங்கக் கட்டிடம், போத்தீஸ் எதிரில், நாகர்கோவில். நேரம்: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை. தொடர்புக்கு: 8825755682