Last Updated : 23 Oct, 2021 03:06 AM

 

Published : 23 Oct 2021 03:06 AM
Last Updated : 23 Oct 2021 03:06 AM

இரட்டைப் புலப்பெயர்வின் தமிழ் வாழ்க்கை

நவீன வாழ்வின் மிகப் பெரிய துயரங்களுள் ஒன்று அகதி வாழ்க்கை! 2020-ன் கணிப்பின்படி, தங்கள் நாடுகளை விட்டுப் பிற நாடுகளுக்குப் புகலிடம் தேடிச் சென்ற 28.10 கோடி அகதிகள் இருக்கிறார்கள். உலகின் மொத்த மக்கள்தொகையில் இது 3.6%. இதைத் தவிர, ஒவ்வொரு நாட்டிலும் உள்நாட்டிலேயே அகதிகள் காணப்படுகிறார்கள். இந்தியாவுக்குள் சுமார் 10 கோடி உள்நாட்டு அகதிகள் காணப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இந்தி பேசும், ஏழ்மை நிறைந்த மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றிலிருந்து இந்தியாவின் மேற்கு மாநிலங்களுக்கும் தெற்கு மாநிலங்களுக்கும் புலம்பெயர்ந்தவர்கள். இலக்கியமும் அகதிகள் பிரச்சினையைப் பிரதிபலித்துவருகிறது. சமீபத்தில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட அப்துல்ரசாக் குர்னாவும் ஒரு புலம்பெயர் எழுத்தாளர்தான். கனகராஜ் பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைகள் பெரும்பாலும் புலம்பெயர் வாழ்க்கையின் துயரத்தையே பேசுகின்றன. இந்தக் கதைகளின் தனித்துவம் என்னவென்றால், இவை இரட்டைப் புலப்பெயர்வின் கதைகள். சமயத்தில் பன்மடங்கு புலப்பெயர்வு என்றும் கூறலாம்.

இந்தக் கதைகள் கன்னடத்தில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழ் வாழ்க்கையையே இவை சித்தரிக்கின்றன. நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகத்துக்குச் சென்ற தமிழர்கள், அவர்களின் சந்ததிகள் ஆகியோரைப் பற்றிய கதைகள் இவை. ஒரு புலப்பெயர்வு போதாதென்று அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் அவர்களின் பாடுகளைப் பேசுவதால் இவை இரட்டைப் புலப்பெயர்வின் கதைகளாகின்றன.

முதல் கதையான ‘மறையாத வடு’ யதார்த்த பாணியில் ஆரம்பித்தாலும் முடிவில் மாய யதார்த்த பாணிக்கு மாறுகிறது. வளைகுடா நாடுகளில் தங்கள் சொந்தபந்தங்களைப் பிரிந்து, தங்கள் உழைப்பால் சொந்த நாட்டில் உள்ள குடும்பத்தைக் கரையேற்றிவிட்டு, மீண்டும் தாய்நாடு திரும்பும்போது ஒட்டுமொத்த வாழ்க்கையும் எல்லோரும் பார்த்திருக்கக் கரைந்துபோய்விடுவதை அந்தக் கதையில் கட்டியெழுப்பியிருப்பார் கனகராஜ். பாகிஸ்தானில் பிறந்து, இந்தியாவில் மணம் புரிந்து, வளைகுடா நாட்டில் வேலை பார்க்க வந்திருக்கும் யூசுஃபைப் பற்றிப் பேசுகிறது ‘காற்றுவெளியின் நிழல்’ கதை. தலை வெட்டி நிறைவேற்றப்படும் தண்டனை ஒன்றைப் பற்றியும் அந்தக் கதை பேசுகிறது. ‘மரணம் திடீர் என்று வந்து தாக்காது. அது மனிதனின் உள்ளே எப்போதும் விழிப்புடன் இருக்கும் நீரூற்று’ என்கிறது கதை சொல்லும் குரல்.

தொகுப்பின் முக்கியமான கதைகளுள் ஒன்று ‘கோருகன’. தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகத்துக்குச் சென்றும் தங்கள் சாதி வெறியை விடாத ஒரு குழுவைப் பற்றி வளைகுடா நாட்டில் இருந்தபடி வீரசேனன் என்ற பாத்திரம் நினைவுகூரும் கதை. அந்த இனக் குழுவினரையும் பாலைவனத்தில் வசிக்கும் பதூவன் அரேபியர்களையும் ஒப்பிட்டுப் பேசுகிறது கதை. ரத்தத்துக்குப் பதில் ரத்தம் என்ற வெறி அவர்கள் இருவருக்குள்ளும் ஓடுகிறது. கதை நாயகனும் சிகை திருத்துபவருமான வீரசேனனுக்கும் பழி தீர்க்கக் கணக்கு ஒன்று உண்டு. ஆனால், புலம்பெயர் வாழ்க்கையில் அந்த உணர்வு வலுவிழந்துபோகிறது. இந்தக் கதையோடு வைத்துப் பார்க்க வேண்டியது ‘இணை’ என்ற கதை. அதே இனக் குழுவின் கதை. ஒரே குடும்பத்துக்கும் அப்பா, மகன்களுக்கு இடையிலான வஞ்சம், படுகொலை என்று செல்லும் கதை அது.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த குடும்பத்தின் கதையை ‘சிலோன் சைக்கிள்’ கதை சொல்கிறது. ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு மாதம் முழுதும் ஓட வேண்டிய நிலையைப் பற்றியும் பேசுகிறது கதை. அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த கதைநாயகன், பள்ளியில் படிக்கும்போது சுற்றுலா செல்ல ரூ.1,000 கேட்கிறான். அது அந்தக் குடும்பத்தின் ஒரு மாத வருமானத்துக்குச் சமம் எனும்போது, அவனின் கனவு கலைகிறது. தனது எளிய கனவொன்றை நிறைவேற விடாத நிலைக்குத் தன்னை வைத்திருக்கும் சமூகத்தின் மீது அல்லாமல், தன் குடும்பத்தின் மீதும் அப்பாவின் ‘சிலோன் சைக்கிள்’ மீதும் கோபம் திரும்புகிறது. பலருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்க வாய்ப்புள்ள கதை இது.

‘விட்டில் பூச்சி’ கதையின் பெருமாயி கிழவி ஓர் ஆழமான சித்தரிப்பு. கி.ரா. கதையொன்றைப் படிப்பதுபோல் இருக்கிறது. கதை சொல்பவன் பெருமாயிக் கிழவியின் சாவுக்குத் தான்தான் காரணமா என்று கேட்டுக்கொள்ளும், புதிர் மிகுந்த கதை. சாவு வீட்டில் தமிழ்நாட்டுச் சடங்குகளின் தொடர்ச்சியாக ஒப்பாரி வைக்கும் பெருமாயி கிழவி, அந்தத் தருணங்களுக்கு மட்டும் அவள் அணிந்துகொள்ளும் தன் தாயின் கனத்த தோடு, அந்தத் தோட்டை அணியும்போது தாயின் நினைவில் அவளுக்கு வரும் ஒப்பாரி என்று நேரடித் தமிழ்க் கதையைப் படிக்கும் உணர்வை இந்தக் கதை ஏற்படுத்துகிறது. அவளின் பேத்தி மனவளர்ச்சி குன்றியவள். ஆயினும் அவளுக்குள்ளும் தகிக்கும் காம உணர்வை கனகராஜ் நேரடியாகவும் பூடகமாகவும் இறுதியில் அதற்கு விலையாக அவள் தன் உயிரைக் கொடுக்க வேண்டியிருந்ததை உக்கிரமாகவும் எழுதியிருக்கிறார்.

தமிழர்களின், இந்தியர்களின் புலப்பெயர்வைப் பற்றி மட்டுமல்ல பிற நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்திருப்பவர்களைப் பற்றியும் அவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதைப் பற்றியும் ‘வாட்டர் மெலன்’ கதை பேசுகிறது. மேலுமொரு அடுக்காக, ஆணிலிருந்து பெண்ணாகவும் பெண்ணிலிருந்து ஆணாகவும் புலப்பெயர்வடையும் இருவரைப் பற்றியும் அந்தக் கதை அழகாகப் பேசுகிறது. அப்படிப்பட்டவர்களைச் சமூகம் அமானுஷ்யமான கிணற்றொன்றில் எப்போதும் அமிழ்த்திவிடுகிறது.

‘வீட்டுக்குள் பாயும் அருவி’ கதை, மிக மோசமான குற்றம் ஒன்றைச் செய்திருக்கக்கூடிய வயதான மனிதர் ஒருவரைப் பற்றியது. கதையை அவருடைய நோக்கில் கொண்டுசெல்வது நல்ல உத்தி. குற்றம் செய்பவருக்குப் பெரும்பாலும் தான் செய்தது குற்றம் என்றே தோன்றாது; அந்த நோக்கிலிருந்து கதை சொல்லப்படும்போதும்கூட வாசகருக்கு அந்தக் குற்றத்தின் தீவிரம் உறைத்து, அதிர்ந்துபோகிறார்கள். பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று எல்லோரும் அவரை அடித்து நொறுக்கி, முகத்தில் காறியுமிழ்கிறார்கள். முதியவர் என்று இரங்குவதா, பெருங்கொடுமையை நிகழ்த்திய ஒருவர் என்று வெறுப்பதா என்று தெரியாமல் வாசகர்கள் தத்தளிக்க வேண்டிய நிலை. முழுக்கவும் பூடகமாகச் சொல்லப்பட்ட கதை இது. பிற கதைகளிலும் இதே மாதிரியான பூடகம் கனகராஜுக்குக் கைகொடுத்திருக்கிறது.

உள்ளூர்த்தன்மையும் சர்வதேசத்தன்மையும் ஒரே நேரத்தில் கனகராஜுக்கு வாய்த்திருக்கின்றன. கதையின் கலை மதிப்பைத் தாண்டியும் விசித்திரமான ஒரு புலம்பெயர் வாழ்க்கையின் ஆவணங்கள் என்றும் இந்தக் கதைகளை நாம் கருதலாம். இந்தக் கதைகளைக் கன்னடத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவந்திருப்பதால், புனைவின் புதுவகைப் பிராந்தியமொன்றைத் தமிழுக்குச் சேர்த்திருக்கிறார் கே.நல்லதம்பி.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

*****

வாட்டர் மெலன் & பிற கதைகள்
கனகராஜ் பாலசுப்பிரமணியம்
தமிழில்:கே.நல்லதம்பி
வெளியீடு: யாவரும் பதிப்பகம்
தொடர்புக்கு: 90424 61472
விலை: ரூ.180

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x